Monday, March 31, 2008

அழகு படுத்தும் பாடு !

பெண் என்றால் பேயும் இரங்கும் என்பது பழமொழி. நான் பல முறை யோசித்தது உண்டு - அது இரங்குமா இல்லை கிறங்குமா என்று!

சமீபத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து தான் பிரிட்டனே மயங்கி போய் இருக்கிறது. அனைத்து பத்திரிகையிலும் இவரைப் பற்றி தான் செய்தி.

யார் என்கிறீர்களா? அவர் தான் பிரெஞ்சு அதிபர் மனைவி - கார்லா ப்ரூனி . நீங்கள் கன்னத்தில் போட்டுக் கொள்வதற்காக கீழே படம் ஒன்று.



சற்று நாட்களுக்கு முன் நம் குடியரசு விழாவுக்கு பிரெஞ்சு அதிபருடன் இவரும் வருவதாக இருந்தது. அப்போது இவர் காதலி மட்டுமே. கைரோவில் கட்டிப் புரள்வது, பிரமிட் முன் பின்னிக் கொள்வது என்று அமர்களபட்டுக் கொண்டிருந்தது இவர்கள் காதல் வாழ்க்கை. நம்மவர்களுக்கு ஒரு பெரிய குழப்பம். .கேர்ள் பிரெண்டை வரவேற்பது பற்றி Protocol எந்த புத்தகத்திலும் இல்லையாம்.சிண்டைப் பிய்த்துக் கொண்டிருந்தார்கள். கடைசியில் ப்ரூனி வரவே இல்லை.(ஹும்! நாம் குடுத்து வைத்தது அவ்வளவு தான் !)

சமீபத்தில் பிரெஞ்சு அதிபர் தன் மனைவியுடன் இரண்டு நாள் இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டார். இவர்கள் வருவதற்கு சற்று முன்பிருந்தே பத்திரிகைகளில் 'ப்ரூனா’யணம் தான்!

ப்ரூனி பிறந்ததிலிருந்து பருவம் எய்தியது வரை, பள்ளிப் படிப்பிலிருந்து பள்ளியறை தோழர்கள் வரை என சகட்டுமேனிக்கு எல்லாவற்றையும் பெரிது படுத்தி எழுத பூதக்கண்ணாடி போட்டுக் கொண்டு பணி புரிந்தனர் பத்திரிகை நிருபர்கள்.

அவரின் பழைய காதலர்கள் எண்ணிக்கை அதிகமா? மகாபாரதத்தில் வரும் கதாபாத்திரங்கள் எண்ணிக்கை அதிகமா? என்று பட்டிமன்றம் வைக்க சாலமன் பாப்பையாவை கூப்பிடலாமாம். (ரிஷி மூலம் ,நதி மூலம் ,கார்லா ப்ரூனி மூலம் எல்லாம் பார்க்கக் கூடாது என்று ஐம்பதில் ஆசை வந்த பிரெஞ்சு அதிபர் கூறுகிறார்)

ப்ரூனி ஒரு மாடல் அழகி ஆக இருந்தவர். பதினைந்து வருடம் முன்பு மாடலிங் உலகில் பிறந்த மேனியாய் திகம்பர சாமியார் ரேஞ்சில் இவர் அருள் பாலித்துக் கொண்டிருந்த காலத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை இவர்கள் வரும் சமயம் பார்த்து வெளியிட்டது ஏல நிறுவனம் ஒன்று. கேட்க வேண்டுமா; வெறும் வாய்க்கு மெல்ல அவல் கிடைத்தது. "எப்படி இருந்த இவர் இப்போ இப்படி ஆயிட்டார் " என்று அந்த படத்தை போடாத பத்திரிகைகளே இல்லை.

இவர் என்ன ஆடை அணிவார்? (முதலில் ஏதேனும் ஆடை அணிவாரா?), எங்கெல்லாம் செல்வார், ராணி முன் எவ்வாறு நடந்து கொள்வார் என ஒரே பரபரப்பாய் பத்திரிகைகள் பேசிக் கொண்டன.

நடந்தது என்ன தெரியுமா? ப்ரூனி வந்து இறங்கியது தான் தாமதம்.

தோள் கண்டார் தோளே கண்டார் - அவர்
தொப்பி கண்டார் தொப்பியே கண்டார்!!

(பிரெஞ்சு அதிபரை எவர் கண்டார்? ஒருவரும் இல்லை.)

அவர் நடை அழகை சொல்வதா, உடை அழகை சொல்வதா? உச்சந்தலை தொப்பியை சொல்லவா (அந்த தொப்பி இப்போது பிரபலம். கீழே படத்தில் பார்க்கவும்), உள்ளங்கால் செருப்பை சொல்லவா ? என மாய்ந்து மாய்ந்து புகழ்ந்து தள்ளின இந்த பத்திரிகைகள்!

நரை கூடி கிழப்பருவம் எய்தினாலும் இன்னும் இளவரசராகவே இருக்கும் பிரின்ஸ் சார்ல்ஸ் அம்மணி விமானத்திலிருந்து இறங்குவதற்கு முன்பே ஓடிப் போய் கையை பிடித்து முத்தமிட்டு விட்டார். இவராவது பரவாயில்லை. முதல் மந்திரி கார்டன் பிரவுன் வரும் போதே வாயை முத்தமிடுவது போல் போல் குவித்துக் கொண்டு வந்தார். நடுவில் பிரெஞ்சு அதிபர் வந்து விட - நல்ல வேளை - அவர் சற்று குள்ளமாய் இருப்பதால் களேபரம் எதுவும் நிகழ்ந்து விடவில்லை என நினைக்கிறேன்.

பாராளுமன்றத்தில் கூட பிரெஞ்சு அதிபர் பேச்சை விட ப்ரூனியின் காலழகை காண்பதில் தான் அனைவருக்கும் கவனமாம்! என்ன சொல்வது போங்கள்!

தமிழ் பேசும் நல்லுலக நண்பர்களுக்காக நான் பொருக்கி எடுத்த புகைப்படங்கள்:

இப்பொழுதெல்லாம் தேவதைகள் தம் சிறகு உதிர்த்து கிறிஸ்டியன் டீயர் (Christian Dior) காஸ்ட்யூமில் வந்திறங்குகின்றனவாம்!!




உருகி வழிவது மெழுகுவர்த்தி மட்டும் அல்ல!




கார்லா ப்ரூனி அருகில் நிற்கும் பாட்டி யார் ? யாரோ இங்கிலாந்து ராணியாம்: (தலைப்பு கொடுத்தது இங்கிலாந்து பத்திரிகைகள்!)




தாத்தா பிலிப் (ராணியின் கணவர்) ராணியை கழற்றி விட்டு ப்ரூனி அருகில் அமர்ந்து விட்டார். ஆசை யாரை விட்டது!



இனியவை நாற்பது: அம்மணியின் வயதை சொல்கிறேன்:



பிரெஞ்சு அதிபருக்கு அரசியலில் ஏன் நாட்டமில்லை என்பது இப்போது புரிகிறது!




கடைசியாய் ஒரு கவர்ச்சிப் படம் - கடற்கன்னிகளில் நம்பிக்கை உண்டா உங்களுக்கு?




இதை கணினியில் தட்டிக் கொண்டு இருக்கும் போதே "hibernate" மோடில் இருந்து விழித்துக் கொண்டது மனசாட்சி. ஐடியல் உலகை விடுத்து பிராக்டிகலாக விஷயத்தை அணுகத் தெரியாது அதற்கு. அதனால் தான் அதை "hibernate" மோடில் அதிகம் வைத்து விடுகிறேன்!

பிரிட்டன் பத்திரிகைகளுக்குத் தான் பித்து என்றால் உனக்கு எங்கு போயிற்று புத்தி ? எழுதுவதற்கு ஆயிரம் விஷயங்கள் இருக்கிறதே! திபெத்திய போராட்டமும் சீன அடக்குமுறையும் , இராக்கிய தீவிரவாதமும் திணறும் அமெரிக்க படைகளும்...

போர் வெறும் 'போர்' ஐயா! (நான் மனதை ஐயா என்று விளிப்பது தான் வழக்கம். பா.ம.க. என்று நினைத்துக் கொள்ளாதீர்கள்). இஸ்ரேல் - பாலஸ்தீனம் பாரும் ; அங்கு பலருக்கு குண்டு வைப்பது தான் குலத் தொழிலாம். இலங்கை - விடுதலைப் புலிகள் பாரும் . நான் பிறப்பதற்கு முன்பிருந்தே பிராண்டிக் கொண்டு இருக்கிறார்கள்; தினத்தந்தியில் வரும் கன்னித் தீவு கதை தான் எல்லாம் - மனிதன் அடித்துக் கொள்வதற்கு முடிவுண்டா ?

சரி ! பெண்ணைப் பற்றியே எழுது - ஆனால் இந்திரா நூயியை பற்றியோ மீரா நாயரைப் பற்றியோ லீனா மணிமேகலையை பற்றியோ எழுதலாம் இல்லையா? இவர்கள் அல்லவா சாதனைப் பெண்கள்?

எழுதலாம்; அதற்காக அழகானவர்கள் எழுத லாயக்கில்லாதவர்கள் என்று இல்லையே! அழகு ஒன்றே போதுமே! ஆஸ்கர் ஒயிலடின் “picture of Dorian gray- வில் வரும் லார்ட் ஹென்றி சொல்வார் – “Beauty is a form of genius--is higher, indeed, than genius, as it needs no explanation... மேலும் இந்த அம்மணி vogue, elle பத்திரிகைகள் நடுவே தாஸ்தாவெஸ்கி புத்தகம் வைத்து படிப்பாராம். நீர் படித்து இருக்கிறீரா?

டால்ஸ்டாயின் அன்னா கரீனினா படித்தில்லயோ? இத்தனை காதலர்கள்?

அவர் சொந்த வாழ்க்கையை விடுமையா! இந்த அம்மணி பெரிய பாடகர். இரண்டு மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்று இருக்கின்றன இவர் ஆல்பங்கள். இதைக் கேட்டுப் பாரும். புரியும். எவ்வளவு அருமையாக இருக்கிறது;

வெறும் காத்து தான் வருது! கவர்ச்சிப் படம் பார்க்க விடும் கட்டுக்கதை இதெல்லாம். உனக்கே தெரியும்!

இந்த உலகில் இரண்டு வகையான மனம் உண்டு. ஆதரித்து பேசி நம்பிக்கை ஊட்டும் மனம். எதிர்த்து பேசி குழப்பி விடும் மனம். அதில் நீர் எந்த வகை என்று நீரே முடிவு செய்துக் கொள்ளும்!

குழப்பம் என்பது தான் சிந்தனையின் அறிகுறி; மற்றொன்றையும் நினைவு கொள்; பெண் புத்தி பின் புத்தி - எப்பொழுதும் பெண்ணையே நினைக்கும் புத்தி மற்றதில் பின் தங்கி விடும். அழகு இருக்கும் இடத்தில் தான் ஆபத்து இருக்கிறது! ரோஜாவில் தானே முள் இருக்கிறது !

உளுத்து போன உபதேசம் ஐயா அதெல்லாம் ! "முள்ளிலும் ரோஜா மலர்கிறதே" இது தான் புது மொழி. கூனி அழகாகவா இருந்தாள்? அவளிடம் கூடத் தான் ஆபத்து இருந்தது! இது அழகியல் ஆராய்ச்சி ஐயா! சொல்லிய ஆசார வித்து எட்டில் இதைப் பட்டியலிட மறந்திருப்பார்கள்! அழகை ரசிப்பதில் குற்றமில்லை!

உலகத்தில் இருக்கிற எல்லா ஜொள்ளர்களும் தவறாமல் சொல்லும் சப்பைக் கட்டு! சபல புத்திக்கு மறு பெயர் !!

இடுப்பளவிலிருந்து கட்டை விரல் நீளம் வரை சொல்லும் சாமுத்ரிகா லட்சணம் எழுதியவர்களும் சபல புத்திக்காரர்களா? இதெல்லாம் ஆபத்தில்லாத ரசனைகள்!!

ஆரம்பத்தில் எல்லாம் ஆபத்தில்லாமல் தான் ....

போதும் ஐயா !! நம் சம்பாஷணையில் சுவாரசியமில்லை; இந்த பதிவில் பார்க்கத் தகுந்தது கார்லா ப்ரூனி படங்களே என்று நண்பன் தீர்ப்பெழுதி விட்டான் ; ஆக நீர் உறங்கச் செல்லும்!!

மனசாட்சியை 'hibernate' மோடில் தட்டி விட்டேன்.

இந்த மனசாட்சியுடன் ஒரே தொல்லை.

சரி அது கிடக்கிறது விடுங்கள் - யாரோ ஜெஸ்ஸிக்கா ஆல்பாவாம்; கொள்ளை அழகாம்! தெரியுமா உங்களுக்கு?

Thursday, March 13, 2008

ஏனிந்த அசட்டுத்தனம்?

நம் ஊர் போலீஸ்கார மாமாவின் தொப்பை போல் அமெரிக்க வரைபடத்தில் மேற்கே சற்று உப்பிக் கிடக்கும் இடம் கலிபோர்னியா. இந்த தொப்பையில் தொப்புள் போல் இருப்பது அழகிய சான் பிரான்சிஸ்கோ நகரம். (தொப்பைக்கு மட்டும் தான் போலீஸ்கார மாமா. தொப்புளுக்கு சிம்ரனை நினைத்துக் கொள்ளுங்கள்!).

இந்த நகரத்துக்கு முத்தாய்ப்பாய் அமைந்திருப்பது கோல்டன் கேட் தொங்கு பாலம். பின்னுள்ள மலைகளுக்கு இது ஒரு ஸ்கிப்பிங் கயிறு போல எனக்கு தோன்றும். என் அலுவலகத்திலிருந்து வெளியே எட்டிப் பார்த்தால் இந்த சிவப்பு வண்ண பாலம் (இந்த கலருக்கு "international orange" என்று பெயர்) சற்று தொலைவில் தெரியும். மதியம் சாப்பிட்டு விட்டு மந்தமாக இருக்கும் நேரங்களில் இப்படி காலாற நடந்து சுற்றி வேடிக்கை பார்த்து விட்டு வருவோம். கூட வரும் நண்பர்கள் வாயில் 'ஹோமம்' வளர்த்துக் கொண்டு வருவார்கள்.

சரி, இங்கு என்ன நடக்கிறது என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.

சரியாக பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இந்த கோல்டன் கேட் பாலத்திலிருந்து பசிபிக் பெருங்கடலில் யாரவது ஒருத்தர் குதித்து தற்கொலை செய்து கொண்டு விடுகிறார்.
அமாவாசை, பௌர்ணமி என்று வந்து விட்டால் இங்கு யாருக்காவது பித்தம் தலைக்கு ஏறி விடுகிறதோ என்னமோ! இது தவறாமல் நடப்பதால் இங்குள்ள சுறாமீன்கள் கூட "இன்று மனித உணவு" என்று ஜொள்ளு விட்டுக் கொண்டு் காத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

காசியில் சென்று உயிர் விட வேண்டும் என்று நம்மூர் தாத்தா பாட்டிகள் நினைப்பது போல இது ஏதாவது புண்ணிய ஸ்தலமா தெரியவில்லை. அடுத்த முறை யாரவது குதிக்கும் போது கேட்டு தெரிந்து கொள்ளலாமா என்று பார்க்கிறேன். (என்னை முதலில் தள்ளி விட்டு விடுவார் என்று உள்ளுணர்வு சொல்கிறது.)

தண்டவாளத்தில் தலை வைத்தால் ரயில் வரும் வரை காத்திருக்க வேண்டும். இங்கு அப்படி இல்லை. எகிறி குதித்த நான்கைந்து வினாடிகளில் மோட்சம் உறுதி. அந்த உயரத்தில் இருந்து எழுப்பதைந்து கிலோமீட்டர் வேகத்தில் சென்று மோதும் போது அது கடலாக இருந்தால் என்ன, கரையாக இருந்தால் என்ன - முடிவு ஒன்று தான். இந்த இடத்தை தேர்ந்தெடுக்க இது கூட காரணமாக இருக்கலாம்.

நம்மூரில் ' வாத்தியார் அடித்ததால் பன்னிரண்டு வயது பையன் தூக்கு மாட்டிக் கொண்டான்' என்று செய்தி படிக்கும் போது எனக்கும் தூக்கி வாரிப் போடுகிறது. எனக்கு அந்த வயதில் ஒழுங்காக முடிச்சு கூட போட தெரியாது. (இப்போது கூட தெரியாது. எப்பொழுதாவது கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்க வேண்டும் என்றால், அந்த தாம்புக் கயிறு முடிச்சு கூட என் அம்மா தான் போட்டு தருவாள். அவ்வளவு அசமஞ்சம் நான்! இந்த லட்சணத்தில் நான் 'boy scout-ஆக வேறு இருந்திருக்கிறேன்.)

சின்ன வயதில் இருந்து கூட்டாஞ் சோறு, கோலி சோடா, கடலை மிட்டாய் என்று விதம் விதமாய் தீனி போட்டு வளர்த்த உடம்பு; கஷ்டப்பட்டு கணக்கு, வரலாறு, சமூக அறிவியல் என்று வருடா வருடம் படித்து வளர்த்த மூளை. எல்லாவற்றையும் ஒரு நொடியில் முடித்து கொண்டு விடுகிறார்கள். என்ன அபத்தம்! இதை எல்லாம் நினைத்தாலே எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

தற்கொலை செய்து கொள்பவர்கள் கோழைகள் என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு அவர்கள் அசாத்திய - ஆனால் - அசட்டு துணிச்சல்காரர்களோ என்று தோன்றுகிறது. தற்கொலைக்கு "துணிந்தான்" என்று தானே சொல்கிறோம். இந்த துணிவை எது கொடுக்கிறது? அப்படி மக்களை தற்கொலை செய்துக் கொள்ள தூண்டுவது தான் என்ன? யாரும் கொலை செய்வதைப் போல் பிளான் போட்டு இதை செய்வதில்லையே? சட்டென்று மூளை மக்கர் கிக்கர் செய்து விடுகிறதா?

ஜப்பானில் அணுகுண்டு போட்ட போது அந்த கதிரியக்க வீச்சில் பாதிக்கப்பட்ட மக்கள் பலர் கண்ணிழந்து, கை இழந்து - உயிரைத் தவிர வேறு என்னவெல்லாம் இழக்க முடியுமோ அவை எல்லாம் இழந்து - வாழவும் முடியாமல் , சாகவும் முடியாமல் இருந்த நிலையில் சொன்னார்கள். "Our fear is not of dying; but of living". அப்படிப்பட்ட சோகமா வந்து விட்டது இவர்களுக்கெல்லாம்?

கடன் தொல்லையால் சில ; காதல் தோல்வியால் சில; காரணமே இல்லாமல் சில. அதீத மன உழற்சிக்கு ஆட்பட்டு அந்த impulse-ல் எடுக்கப்படும் முடிவுகள் தானே இதில் பல. (வறுமையால் பூச்சி மருந்து தின்று இறந்து போகும் ஏழை விவசாயிகளைப் பற்றி ஒரு தனி பதிவு தான் போட வேண்டும்.)

இந்த தோல்விகளையும், பின்னடைவுகளையும் எதிர் கொள்ளும் மனமும் அறிவும் இல்லாமல் போவது ஏன்? உடலை பேணுவது போல் மனதை பேணுவதும் எவ்வளவு முக்கியம் என்பதற்கு இதெல்லாம் தான் சான்று.

Wednesday, March 12, 2008

ஒரு சதுரங்கச் சக்கரவர்த்தியும் ஒரு சமூக சேவகரும்:

சதுரங்கச் சக்கரவர்த்தி - பாபி பிஷர்

சமூக சேவகர் - பாபா ஆம்தே.

இருவருக்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? தாங்கள் வாழ்ந்த காலத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள். இறப்பால் இணைக்கப்பட்ட இருதரப்பட்ட மனிதர்கள். இந்த வருடத்தின் ஜனவரி மாதம் பிஷரையும் பிப்ரவரி பாபாவையும் கொண்டு சென்று விட்டன.

இவர்களுக்கு என் அஞ்சலி.

பாபி பிஷர்:


சதுரங்க சாம்ராஜ்ஜியத்திற்கு ஏக போக உரிமை கொண்டாடிக் கொண்டிருந்த சோவியத் வீரர்களை தனி மனிதனாக வென்று காட்டியவர் பிஷர். பிஷரை பற்றி அறிய இந்த மூன்று வரிகள் போதும்.

"Don't even mention losing to me. I can't stand to think of it." -- Bobby Fischer

Being a friend of Fischer obviously is no undivided pleasure, though being Fischer seems sadder." -- Hans Ree

My God, it is a miracle! Bobby is so kind, so friendly. He is normal!" -- Boris Spassky (on their first meeting before the '92 rematch)

சதுரங்கத்தில் அதிகம் நாட்டம் கொண்டு காஸ்பரோவையும், ஆனந்தையும், க்ராம்நிக்கையும் பற்றி நான் பேசிக் கொண்டு இருக்கும் போது என் அம்மா பாபி பிஷரையும் , ஸ்பாஸ்கியையும், பெட்ரோஷியானையும் பற்றி பேசிக் கொண்டு இருப்பார். அப்படி தான் எனக்கு பிஷர் முதலில் அறிமுகம். பிறகு ஒரு புத்தகத்தில் எவ்வாறு பதிமூன்று வயது பிஷர் , பைர்னை தோற்கடித்தார் என்று போட்டு இருந்தார்கள். அசந்து விட்டேன். தன் ராணியை தியாகம் செய்து எதிராளிக்கு தண்ணி காட்டி விட்டார். இதை "Game of the century" என்றே சொல்லி விட்டார்கள். நீங்கள் செஸ் பிரியராக இருந்தால் இங்கு க்ளிக்கிப் பார்க்கவும்.

1972 - "match of the century" என்று கருதப்பட்ட போரிஸ் ஸ்பாஸ்கி உடனான உலக சாம்பியன் ஷிப். பிஷர் ஒரு விதத்தில் ஏகலவ்யன் போல் சுயமாக விளையாடி முன்னுக்கு வந்த ஒரு அமெரிக்க ஜீனியஸ். ஸ்பாஸ்கி சோவியத் சாம்பியன். போட்வின்னிக், கோர்ச்னோய், பெட்ரோஷியன், டால் என்ற ஜாம்பவான்களுக்கு எல்லாம் ஜாம்பவான். சோவியத் அரசாங்கமே அவர் பின்னால்.

பனிப்போர் உச்சமாக இருந்த நேரம் அது. சோவியத் இதை ஒரு மானப் பிரச்சனையாகவே பார்த்தது. இந்த போட்டிக்கு முன்னாலும், அது நடக்கும் போதும் நிகழ்ந்த விஷயங்களை பார்த்தால் உளவுப் படங்களும், கதைகளும் தோற்று விடும். அப்படிப்பட்ட சர்ச்சைகள், குற்றச்சாட்டுகள் எல்லாம் எழுந்தன. உதாரணத்துக்கு பாருங்கள் - பிஷர் தன் காயை நகர்த்திவிட்டு எழுந்து சென்று விடுவார். மீண்டும் தன் முறை வரும் போது தான் நாற்காலியில் வந்தமர்வார். அவர் எழுந்து செல்லும் போது நாற்காலிக்கடியில் எதோ ஒரு பட்டனை அமுக்கி விட்டு போய் விடுகிறார். அதன் அடியில் இருந்து எதோ கதிரியக்கம் வந்து ஸ்பாஸ்கி மூளையை தாக்கி அவரை யோசிக்க விடாமல் செய்கிறது என்று சோவியத் யூனியன் குற்றச்சாட்டு வைத்தது. விளையாடும் அறையை பரிசோதித்து கே.ஜி.பி.. ஒரு செத்த ஈயைத் தவிர வேறு எதுவும் அதனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பிஷர் வென்று சாம்பியன் ஆனார்.

இதைப் பற்றி ஒரு அருமையான டாகுமெண்டரி யு ட்யுபில் இருக்கிறது - இங்கு க்ளிக்கிப் பாருங்கள்.

உலக அளவில் இது தான் அவர் கடைசியாய் விளையாடிய ஆட்டம். அதற்கு பிறகு நடந்ததெல்லாம் சோகம். தான் பயணம் செய்யும் விமானத்தில் கே.ஜி.பி. குண்டு வைத்து விடுமோ, சோற்றில் விஷம் கலக்குமோ என்றெல்லாம் பல வகையில் பயந்து மன உளைச்சல்களுக்கு ஆளாகி பல நாடுகளில் வசித்து பின்னர் கடைசியாக அவருக்கு முடி சூட்டிய நாடான ஐஸ்லாண்டில் தன் கடைசி காலத்தை கழித்தார்.

செஸ் விளையாட்டில் இவர் காட்டிய புதுமைகளும், செய்த புரட்சிகளும் ஏராளம். சதுரங்க சரித்திரத்தில் இந்த சக்கரவர்த்திக்கு என்றும் தனி இடம் உண்டு.


பாபா ஆம்தே:

ஏஞ்சலினா ஏன் இளைத்து விட்டார், பிரிட்னிக்கு ஏன் பித்து பிடித்து விட்டது என்ற செய்திகள் எல்லாம் ஆர்வமாக படித்துக் கொண்டிருந்த போது நடுவில் ஒரு இந்தியரை பற்றி செய்தி ஒன்று கண்ணில் பட்டது.

அமெரிக்க பத்திரிகையில் யார் இந்த இந்தியர் என்று படித்த போது தான் தெரிந்தது எப்பேர்ப்பட்ட மனிதர் இவர் என்று. இவரைப் பற்றி இவ்வளவு நாள் தெரியாமல் போனதே என்று குற்ற உணர்ச்சி வேறு தொற்றிக் கொண்டது. (மிகைப்படுத்தப்பட்ட ஹீரோயிசங்களை வெள்ளித் திரையில் பார்த்து பழகியதால் இந்த நிஜ வாழ்க்கை ஹீரோக்கள் அதிகம் சுவாரஸ்யமாய் தெரிவதில்லையோ என்னமோ? )

குஷ்ட ரோகிகளைக் கண்டாலே அருவருத்து ஒதுங்கும், ஒதுக்கும் சமுதாயத்தில் அவர்களுக்காக ஆனந்த வனம் கட்டியவர். கதராடை அணிந்து காந்தியக் கொள்கைப் படி மிக எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். அவர் தான் பாபா ஆம்தே.

நாற்பதுகளின் இறுதியில் ஒரு நாள் - மழையில் நடந்து போய்க் கொண்டிருந்த பாபா ரோட்டோரமாய் ஒரு மனிதன் குளிரில் நடுங்கிக் கொண்டிருப்பதை பார்த்தார். அருகில் சென்று பார்த்தும் அதிர்ச்சி அடைந்தார். அந்த மனிதனுக்கு கையில் விரல்கள் இல்லை. புழுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவன் உடலை தின்றுக் கொண்டிருந்தன. (படிக்கும் போதே ஒரு அதிர்ச்சியாக இல்லை?!). முதலில் பயந்து ஓடியவர் மீண்டும் அந்த துளசிராமிடம் திரும்பி வந்தார். அவனுக்கு உணவும்,மழையில் நனையாமல் இருக்க ஒரு மூங்கில் பந்தலும் அமைத்துக் கொடுத்தார். அவனை அவர் இறுதி வரை மறக்கவில்லை. அன்று ஆரம்பித்தது தான் இவரின் வாழ்நாள் பயணம்.

ஜூன் 1951 - மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள், ஒரு நொண்டி மாடு, ஒரு நாய், பதினான்கு ரூபாய் மற்றும் சில நோயாளிகள் - இவர்களை வைத்துக் கொண்டு தேளும் பாம்பும் நிறைந்த ஒரு கரடு முரடான நிலத்தை பச்சை பசுமையான ஆனந்தவனமாக மாற்றிக் காட்டி இருக்கிறார் இந்த பாபா - வித்தையால் அல்ல; வியர்வையால் !! பாவத்தின் சம்பளம் தான் குஷ்டம் என்று மக்கள் கருதி வரும் காலத்தில் அவர்களும் சுய மரியாதையுடன் வாழ வகை செய்திருக்கிறார்.

கேட் வின்ஸ்லெட்,கேத்தரின் ஜீட்டா ஜோன்ஸ், நிகோல் கிட்மன் என்று என் கனவுக் கன்னிகள் பட்டியல் நீள்கிறது. (ஹாலிவுட் மட்டும் அல்ல, பாலிவுட்டுக்கு தனியாகவும், கோலிவுட்டுக்கு தனியாகவும் ஒரு லிஸ்ட் வைத்திருக்கிறேன்)அது போல இவரும் க்ரீடா கார்போ, நார்மா ஷியரெர் என்று வைத்திருந்தாராம். ஆனால் ஒரு துளசிராம் அவரை மாற்றி விட்டான்.

சொத்து, சுகம் துறந்து (தன் அப்பா பெரிய ஜமீந்தாராக இருந்தும் அவரிடம் இருந்து ஒரு சல்லிக் காசு பெறவில்லை), வேலை துறந்து,(காசு கொழிக்கும் வக்கீல் வேலை)கெளரவம் பார்க்காமல் (தலை மீது மனிதக் கழிவுகளை சுமந்து சென்று இருக்கிறார்)மற்றவர்களின் சேவைக்காக தன் வாழக்கையை அர்ப்பணித்து இருக்கிறார்.

இந்த மகானுக்கு இந்த வலைப்பதிவின் மூலம் என் அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்.

நாம் ஒவ்வொருவரும் இவர் செய்தவற்றில் கால்வாசி செய்தால் கூட இந்த உலகமே ஆனந்தவனமாக ஆகி விடாது?