Monday, July 30, 2007

யாரிந்த வந்தியத்தேவன்? எதற்காக நீர்க்குமிழி?

என் உண்மையான பெயர் வந்தியத்தேவன் இல்லை. பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் வைத்துக் கொள்கிறார்களே அது போல் நாமும் வைத்துக் கொண்டால் தான் என்ன என்று கொண்ட புனைப்பெயர் அது. ஒரு வேளை அபத்தக் களஞ்சியமாய் உளறிக் கொட்டினால் நான் தான் அது என்று சுத்து வட்டாரத்தில் தெரியக் கூடாது என்பது கூட ஒரு காரணமாய் இருக்கலாம். எழுத்தாளர்களின் இந்த தனக்கு தானே பெயரிட்டுக்கொள்ளும் பழக்கமும் பிடித்திருக்கிறது. நமக்கு தான் ஒரு வலைப்பதிவை ஆரம்பித்தாலே எழுத்தாளன் ஆகி விட்ட உணர்வு ஏற்பட்டு விடுகிறதே!

பொன்னியின் செல்வனை படித்து விட்டு அந்த தாக்கத்தில் "வானதி பதிப்பகம்" என்று பெயரிட்டார்களாம். அது மாதிரி ஒன்றும் எனக்கு கல்கியின் வந்தியத்தேவன் மேல் அசாத்திய பிரியம் கிடையாது. ஆனால் பெயர் பிடித்திருக்கிறது.

ஒரு மனிதன் என்பவன் அவன் எண்ணங்களால் ஆனவன் என்பதால் என் குலம், கோத்திரம், ஊர், பெயர் எல்லாம் முக்கியம் இல்லை என்று நினைக்கிறேன்.

எனக்கு சாப்பாட்டிலும் குழம்பு தான் பிடிக்கும். வாழ்க்கையிலும் குழம்பத் தான் பிடிக்கிறது. முடிந்த முடிவு என்பது எதிலும் கிடையாது. சரியாகத் தெரியும் ஒன்று பின்னர் தப்பாக தோன்றுகிறது. அதனால் குழம்பி குழம்பி எப்பொழுது எந்த இடத்தில் சோர்ந்து விடுகிறோமோ அது தான் பாதி நேரம் முடிவாகி விடுகிறது என்று நினைக்கிறேன். இப்படி குழம்புவதில் எனக்கு ஒன்றும் வருத்தம் இல்லை.
Inconsistency is the result of rationality - என்று நமக்கு சாதகமான பழமொழி ஏதாவது ஒன்றை வைத்துக் கொண்டு ஓட்டைப் பெருமை பட்டுக் கொள்ளலாம் இல்லையா?

நீர்க்குமிழி எதற்காக? படிக்கும் பார்க்கும் கேட்கும் விஷயங்களால் தோன்றி மறையும் எண்ணங்களை பதிவு செய்தால் தான் என்ன என்று தோன்றியது. (இதிலாவது ஒரு தெளிவு கிடைக்காதா என்ற நப்பாசை) அதனால் விளைந்தது தான் இந்த நீர்க்குமிழி.

கட்டுரையின் கருவை சீர்படுத்தி பேனாவின் மூலம் பிரசவிப்பதற்கு சற்று பிரயத்தனப்பட வேண்டி இருக்கிறது. (அதனால் தான் ஆங்கிலத்தில் Brain Child என்று கூறுகிறார்களோ?!) சில சமயம் குறை பிரசவம் ஆகி விடும் என்ற பயமும் இருக்கிறது. இத்தனைக்கும் எழுதப் போவது என்னமோ "காலையில் எழுந்தேன் காபி குடித்தேன்" வகையறாக்களைத் தான். முதலில் அதை உருப்படியாக சொல்ல முடிகிறதா என்று பார்க்க வேண்டும். இது எனக்காக எழுதும் ஒன்று என்றாலும், எதிலும் பாராட்டைத் தேடி அலையும் அசட்டு மனம் இதிலும் ஒரு அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறது.

நூலகத்தில் இருந்து நா. பார்த்தசாரதி புத்தகம் எடுத்து வந்தால் "அவன் வள வளனு எழுதுவான். அவனை ஏன்டா எடுத்துண்டு வந்த" என்று அம்மா கேட்பாள். அது போல ஆகி விட்டதோ என்ற பயத்துடனே இதை முடித்துக் கொள்கிறேன்.