Friday, December 28, 2007

இடைவெளி

மற்றவர் படிக்கும்படி எழுதுவது ஒரு கலை.அவ்வாறு படிக்க விழைபவரை உறங்க வைப்பது இன்னொரு கலை. முதற் கலையில் தேர்ச்சி பெறாவிடினும், இரண்டாம் கலையை முயன்றுவிடுவது என்று முடிவெடுத்தேன்.

அதற்கு கட்டுரையை விட சிறந்த கருவி வேறேது? படிப்பவரை கண்ணயர வைப்பது கட்டுரையின் தலையாய பண்பு அல்லவா? ஒரு கட்டுரையாளனின் வெற்றி வாசகன் எத்தனை விரைவில் 'கண்ணை கட்டுகிறது' என்று சொல்கிறான் என்பதில் உள்ளது.

போன பதிப்பிற்கு பிறகு இத்தனை பெரிய இடைவெளி விழுந்து விட்டதால் இந்த இடைவெளி பற்றியே ஒரு கட்டுரை எழுதிவிடுவோம் என்று துணிந்தேன். இதோ அந்த கட்டுரை.

இடைவெளி தான் மனிதனுக்கு எத்தனை அத்தியாவசியமாகப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையைப் பற்றி இவ்வாறு சொன்னதாக கேள்வி - ஏற்ற இறக்க ஒலியில் சரியான இடங்களில் இடைவெளி விடுவது தான் இசை. ("sound punctuated with pauses at appropriate places).

நாம் மற்றவருடன் பழகும் போதும் அவரவருக்கு ஏற்றபடி தகுந்த இடைவெளி விட்டு தான் பழகுகிறோம் இல்லையா? இன்று கட்டி புரண்டு நாளை கல் எறிவதை விட என்றும் எட்ட நின்று சிரித்து பேசுவது சாலச் சிறந்தது அல்லவா?

இணை பிரியா காதலர்கள் இடையேயும் இடைவெளி தேவையாம். இந்த தற்கால பிரிவு அவர்களிடையே பாசத்தை (தாபத்தையும் கூட!) அதிகப்படுத்துவதாக காதல் வல்லுனர்கள் சொல்லுகின்றனர். அனால் இந்த இடைவெளியும் அளவோடு இருக்க வேண்டும். அதிக இடைவெளியினால் காதலிக்கு பசலை நோய் வந்து உடல் மெலிந்து வளையல் ஒட்டியாணம் ஆன கதை எல்லாம் ஒரு சங்க கால பாடல் சொல்கிறது.(ஆனால் இந்த காலத்தில் அவ்வாறு எல்லாம் யாரும் காத்திருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.)

வள்ளுவர் கூட பிரிவாற்றாமை, படர்மெலிந்திரங்கல், கண்விதுப்பழிதல், பசப்பறுபருவரல் என்று பல அதிகாரங்கள் இயற்றி இருக்கிறார். காமத்துப்பால் - கற்பியல் முழுவதும் இது தான் - பிரிந்த காதலனை எண்ணிப் புலம்புதல்.

சில இடங்களில் இடைவெளி கூடாது என்கிறார். பின் வரும் குறளை கவனிக்க!

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.

காற்றும் புக முடியாதபடி இடைவெளி இல்லாமல் இறுக்கித் தழுவுதல் இன்ப உறவுக்கு வழி வகுக்கும் என்கிறார்.

பின்னர் அவ்வாறு குளிர்ந்த காற்று புகுந்து விட்டதால் கண்கலங்கும் பேதை பற்றி உறுப்புநலன் அறிதல் அதிகாரத்தில் கூறுகிறார்.

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண்.

மூளைக்கும் மனதிற்கும் கொடுக்கப்படும் இந்த சிறு ஓய்வு எத்தனை விந்தைகளை செய்கிறது. பல கதைகள் கேட்டு இருக்கிறோம். எவ்வாறு கனவில் பலருக்கு அதிசயமான கண்டுபிடிப்புகள் எல்லாம் தோன்றுகின்றன என்று. தையல் இயந்திரம் கண்டு பிடித்தவருக்கு எவ்வாறு ஊசி முனையில் ஒரு ஓட்டை வைக்க வேண்டும் என்று தோன்றியது? அவரது கனவில் வேல் ஏந்திய ஆதிவாசிகள் அவரை சுற்றி நாட்டியம் ஆடுகிறார்கள் (அருமையான உணவு அகப்பட்டு விட்டது என்று தான்!). அப்போது அவர் வேலின் நுனியை கவனிக்க, அதில் ஒரு சிறு துவாரம் இருந்திருக்கிறது. பிறந்தது ஊசி!

கணித மேதை ராமானுஜம் கணக்கு போட்டது அத்தனையும் கனவில் தானாம். அத்தனை பார்முலாவும் நாமக்கல் என்ற தெய்வம் கனவில் சொன்னதாக அவர் கூறுகிறார். விழிப்பு நிலையில் மூளைக்கு அதிக வேலை குடுப்பவர்களுக்கு கனவு நிலையில் பதில்கள் கிடைக்கும் என்று நினைக்கிறேன். மூளைக்கு குடுக்கும இந்த இடைவெளியில அது போய் ஆழ்மனத்தை எல்லாம் ஆராய்ச்சி செய்து வருகிறது போல.

நான் மூளைக்கு கொடுக்கும் அதிக பட்ச வேலையே கண்டக்டரிடம் பஸ் டிக்கெட் வாங்கியவுடன் நமக்கு மீதி சில்லறை எத்தனை தர வேண்டும் என்று போடும் கணக்கு தான். ஆகையால் எனக்கு வருவதெல்லாம் உருப்புடாத கன்றாவி கனவுகள் தான்! அதுவும் விழித்தவுடன் மறந்தும் விடுகிறது.

இடைவெளியின் அவசியம் உணர பேருந்து பிரயாணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நான் மிகவும் பயப்படும் விஷயம் அது. சில ஓட்டுனர்கள் பிரயாணத்தின் நடுவே இடைவெளி விடுவதே இல்லை. அடித்து தள்ளிக் கொண்டு பறப்பதாக நினைப்பு. அத்தனை நேரமும் அடக்கி வைத்து அவஸ்தைபடுபவர்களுக்கு தானே தெரியும். அதனாலேயே பேருந்தில் பிரயாணம் என்றாலே தண்ணீர், இளநீர் எதுவும் குடிப்பது இல்லை.

இடைவெளியின் அத்தியாவசியத்தை இதை விடவும் உணர்த்த ஒன்று இருக்கிறது - சினிமா கொட்டகை. பல படங்கள் நமக்கு பாதியில் எழுந்து போக ஒரு வாய்ப்பு அளிக்கிறதே! அதை விடுங்கள், தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த சிம்ரனின் சிங்காரமே அவர் "இடைவெளி" தானே!

தமிழ் கவிஞர்களின் கற்பனை ஊற்று பெருக்கெடுத்து கரை புரண்ட ஓடுவதும் இங்கு தான்!

"பெண் இடையும் இறைவனும் ஒன்று தான்
ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை !!"

இடையும் இறைவனும் ஒன்று என்று சொல்லியாகி விட்டது! இதற்கு மேல் நாம் என்ன சொல்ல!

சற்று இடைவெளி விட்டு பார்ப்போமா?

Monday, September 17, 2007

குவாட்டர் மகிமை

போன பதிப்பில் போட்ட கவிதையை படித்து விட்டு நண்பன் சொன்னான். மச்சான் தப்பா நெனச்சுக்காத "ஒண்ணும் ஃப்ரெஷ் அப்ரோச் இல்ல"

வேற என்ன மச்சான் எழுத சொல்ற? சங்ககாலத்துலேர்ந்து பெண்ணை மானுக்கும்,மீனுக்கும்,நிலவுக்கும் மலருக்கும் தானே ஒப்பிடறாங்க!

நீ வித்தியாசமா யோசி மச்சான். நல்லா யோசிச்சு எழுது.

இப்போ மட்டும் என்ன தூக்கத்துலயா கிறுக்கறோம் என்று எண்ணிக் கொண்டேன்.

என் கைக்குள் அடங்கும் மௌஸ் குட்டியே!
எனக்கு வண்ணம் காட்டும் காதோட் ரே ட்யூபே! னு சொல்லவா?(அது கூட எல்.சி.டி ஸ்கிரீனுக்கு மாறிட்டேனே! )

வித்தியாசமாய் யோசிப்பது எப்படினு ஒரே யோசனையாய் இருந்தேன்.

"என்ன லே...ஒரு மணி நேரமா விட்டத்த் வெறிச்சு பாத்துக்கிட்டு இருக்க.பல்லி எப்படி மேட்டர் பண்ணுதுனு ஆராய்ச்சி பண்ணுறியா லே? எதனாச்சும் புளுக்க போட்டுரப் போவுது லே ஒன் வாய்ல!"

பாசக்கார பாண்டி அண்ணன். எப்பவும் என் கவலையைத் தான் அவரும் படுவார்.

ஆஸ்கர் ஓயில்ட் சொல்லி இருப்பாரே - My own business always bores me to death; I prefer other people's. பாண்டி அண்ணன் மாதிரி யாரையாவது பார்த்து விட்டுத் தான் அவர் எழுதி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

பாண்டி அண்ணன் உண்மையில் நல்லவர். ஓரளவு படித்தவர்.வெகுளியாய் பேசுகிறாரா கேலி செய்கிறாரா என்று எனக்கு பாதி நேரம் தெரியாது.

அண்ணே!கவிதைக்கு ஃப்ரெஷ் அப்ரோச் வேணும்ணே!

என்னது களுதைக்கா?

ஆமா. கழுதைக்கு தான் ப்ரேஷ் அப்ரோச் வேணும்னு சொல்வாங்களா? கவி - கவி - கவிதை!

சரி சரி ரொம்ப விக்காத லே ! கவிதையா? என்னா லே ஏதாவது பொண்ணு மடக்கணுமா?

அதெல்லாம் இல்லீங்கண்ணே! நாட்டுல நாலு பேரு எழுதறத பாத்து நமக்கும் ஆசை.

அவன் அவன் இப்போ இப்படி தான லே அலையறீங்க. அன்னிக்கு என்னடானா அந்த கிறுக்கு பய கோபி மாடு வாலை தூக்கறத பாத்துட்டு "கவிதை கவிதை னான்.."

நானும் நம்ப சோடாபுட்டி வாத்தி பொண்ணு கவிதா தான் வருதுனு நெனச்சு எங்கடானு கேட்டேன்.

"வில் வளைத்தான் ராமன் - பிறந்தது ராமாயணம்
வால் வளைத்தது மாடு - பிறந்தது கோமியம்"

அப்படீங்கறான்.என்னடா இதுனா அது தான் கவிதைனு சொல்றான்.

ஒனக்கும் அந்த மாதிரி கவிதை வேணும்னா சொல்லு. நம்ம கோவாலு கிட்ட சொல்லி மாட்டு கொட்டா கிட்ட கூட்டி போவச் சோல்றேன்.

எல்லாரும் மாடு சாணி போட்றத பத்தியே எழுதிட்டா "ப்ரேஷ் அப்ரோச்" எங்கண்ணே?

அப்போ குதர லாயம் கூட்டி போவ சொல்லவா?

அண்ணே வெளையாடாதீங்க.

இந்தா லே குவாட்டர் அடி! காதல் கவிதைனா குப்புறப்படு
சோக கவிதைக்கு மல்லாக்க படு லே...

ஆஹா! புது விஷயமா இருக்கே!

அண்ணே குவாட்டர் அடிச்சுட்டு படுத்தா தூக்கம் வந்துடாதாண்ணே?

எலே மொதல்ல வாந்தி வரும் லே. அதுனால ஒடம்புக்குள்ள இருக்கற கெட்டதெல்லாம்
வெளியில போயிடும். அப்புறம் அடி மனசுலேர்ந்து சுத்தமான கருத்தெல்லாம் கவிதையா வரும் லே!அப்புறம் தான் லே தூக்கம் எல்லாம்!

தன்னிலை மறந்த நிலையில் ஆழ்மன எண்ணங்கள் வருவது தான் இதுவா? இதை வித்யாசமாய் சொன்னால் அது மீமெய்மியல்(ஸர்ரியலிஸம்)இல்லயா? ஆஹா!மனசுலே எது ஆழம்,எது மேலனு தெரியாத ஆள் நான்!

அண்ணே! அப்போ நான் எப்படி அந்த கருத்தெல்லாம் எழுதறது? கை நடுங்கிச்சின்னா ஒத்த கொம்பு ரெட்ட கொம்பெல்லாம் கூட ஒழுங்கா போட முடியாதுண்ணே!

நான் எதுக்கு லே இருக்கேன்!பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் கூட எழுதறத்துக்கு ஆள் வெச்சுருக்காங்களாம்.எதுக்குன்னு நினைக்கற?

அண்ணே! நான் குவாட்டர் அடிக்கறத்துக்கு என் மூத்தரத்த குடிச்சுட்டு படுப்பேன்ணே.ரெண்டும் ஒரே வாசனை தான் அடிக்குது.

கவிதை வேணும்னா இது. இல்லை எனக்கு மூத்திரம் தான் வேணும்னா பாத்ரூம் போ. மூத்திரம் குடிச்சசவன் எல்லாம் மொராஜி தேசாய் ஆவ முடியாது.அதையும் தெரிஞ்சுக்கோ!

தண்ணி அடிச்சவன் எல்லாம் கண்ணதாசன் ஆயிட முடியுமாண்ணே?

எலெ..வர வர வாய் அதிகமா போச்சு லே ஒனக்கு. இருட்டு கட வாசல்ல பாதி வாழ்க்கை சுருட்டு குடிச்சசவன் லே நானு. எனக்கேவா லே?

அண்ணே! இது தாண்ணே...
சொல்லணும் ஆனா சொல்லக் கூடாது...புதுக்கவிதை!

ஆங்?

அண்ணே "திருநெல்வேலிகாரனுக்கே அல்வாவா அப்படீங்கறத சொல்லாமலே சொன்னீங்க இல்ல?

அல்வானு சொல்லாம அல்வா குடுக்கறது தான் புது கவிதையா?" என்ன லே கொழப்பற?

"சொல்லணும் ஆனா சொல்லக்கூடாது
புரியணும் ஆனா புரியக்கூடாது
இது தானே புதுக்கவிதை"

(எனக்குள்)ஆஹா புதுக்கவிதைக்கு நாம்ப சொல்ற இலக்கணமே அதற்கான இலக்கியமா இருக்கே!

எலே குவாட்டர் அடிக்காமயே இப்படி பேசறியே லே நீ? பாரதி பாரதிதாசன் எல்லாம்
சொல்ல வந்தத புரியற மாதிரி சொல்லிட்டு தான லே போனாங்க!

அண்ணே! காலம் மாறிப் போச்சு.அதுக்கேற்ப கருத்து, அத சொல்றதுக்கான வடிவம் எல்லாம்
மாறி கிட்டு வருது. அந்த காலத்துல சீத்தலை சாத்தனார் எழுதுன மாதிரி இப்பொவும் எழுத முடியாமா? நேர் நேர் தேமா நிறை நேர் புளிமா எல்லாம் மூட்ட கட்டியாச்சு. அறு சீர் கழி நெடிலடி ஆசிரியப்பா எல்லாம் பத்தாம் க்ளாஸ் பசங்க படிக்கற விஷயம். தேவை இல்லாம தளை தட்டி எழுதறத்துக்கு புது கவிதையா சொல்லிட்டு போயிடலாம்.

என்னமோ சொல்ற லெ..புது கவிதை கொஞ்சம் வெவகாரமான மேட்டர்னு தான் தோணுது.
புரியாம தான் இருக்கு.ஆனா லே ஒண்ணு தெளிவா புரிஞ்ச விஷயம் எல்லாத்துக்கும் குவாட்டர் வேணும் லே...கபிலர் கூட கள்ளு குடிச்சுட்டு தான் பாரி ஓரி பத்தி எல்லாம் பாடினாறாம் லே.

ஆஹா அப்படியா? புதுசா இருக்கே?

இதுல என்ன லே புதுசு இருக்கு? கம்பனே பரணர் கிட்ட பிசச வாங்கணும். ராமர் விட்ட அம்பு ஏழு மரத்த தான் குத்தி நின்னுச்சு.ஓரி விட்ட அம்பு காட்டுல ஓடர விலங்கெல்லாம் குத்தி வந்து நிக்குதுங்கற ரேஞ்சுக்கு சொல்றாரு...எப்படி?

அண்ணே! உயர்வு நவிற்சி அணியா கூட இருக்கும்ணே! தப்பா சொல்லாதீங்க. நான் கூட என்னோட காதலிய பாத்துட்டு சூரியன் சந்திரன் எல்லாம் சேவகம் செய்யறதா சொல்லி இருக்கேன்.

லே மக்கா.. சூரியன் சந்திரன் எல்லாம் கிறுக்கு பயலுங்க. எவன் காதலியப் பாத்தாலும் கிறு கிறுத்து போயிடுவானுங்க...

(எனக்குள்)ஆஹா!அப்போ நண்பன் சொன்னது உண்மையா?

எந்த மாக்கானாவது முல்லைக்கு தேர் குடுப்பானா லே.ரெண்டு கை தட்டி சேவகனை கூப்டு ரெண்டு கொம்பு நடுறா னா நட்டுட்டு போறான் அவன். பாரி ஊத்திக்கொடுத்தார் இல்லெ?

அண்ணே!தெரியாத விஷயம் எல்லாம் அடிச்சு பேசக் கூடாதுண்ணே!

எலே ..அத்த விடு... இப்போ இத நீ குடிக்கிறியா இல்லயா?

குடுங்கண்ணே!இவ்ளோ சொல்லிட்டீங்க!

(பாட்டில் வாங்கி)அண்ணே!கழுகு படம் எல்லாம் வேற போட்டிருக்குண்ணே"

குடிச்சா பருந்தா பறப்ப னு சொல்றாங்க பாரு லெ. பாட்டில்ல புதுக்கவிதை. இவனுங்களும் சொல்றானுங்க ஆனா சொல்லல..

ஆஹா!

மூக்கை பிடித்து ரெண்டு மிடறு விழுங்கினேன். கவிதைக்கான தியாகம்னு மனதை ஆறுதல் படுத்திக்கிட்டேன்.

அண்ணே!ஒரே ஒரு சந்தேகம். இந்த பெண் கவிஞர்களும் தண்ணி அடிப்பாங்களா?
அவங்களுக்கு எப்படி கவிதை வருது?

அவங்களுக்கு எல்லாம் தண்ணி அடிக்கற புருஷன் இருந்துருப்பான்.அவன பாத்த சோகத்துல அவங்களுக்கும் கவிதை வருதோ என்னமோ! எலே, வேண்டாத விஷயத்த எல்லாம் பெறாண்டாத லே."

அப்புறம் எனக்கு குப்புற படுத்தது தான் தெரியும்.

மறு நாள் காலையில் எழுந்தேன். பாண்டியும் அப்பொழுது தான் எழுந்திருந்திருப்பார் போல.பாத்‌ரூம் போவதருக்கு ஆயத்தமாக கைலியை மடித்துக் கட்டிக் கொண்டு இருந்தார்.

எலே..நேத்து கம்பன், கபிலன் னு பேசினத்துல ஒனக்கு ஒரு கவிதை வந்துருக்குல்லெ.
ராமர் அயோததினு ஏதோ சொல்லி இருக்க பாரு. புரியுது ஆனா புரியல...புது கவிதை னு தான் நெனைக்கறேன். ஆனா காதல் மேட்டரா தெரியல...போய் பல்லு வெளகிட்டு வரேன்...

பக்கத்தில் ஒரு வெள்ளைத் தாளில் ஆறு வரியில் எழுதி இருந்தார்...தலைப்பு வேறு அதற்கு!

பயிரை மேயும் வேலிகள்:
----------------------
ராம பாணம்
அயோத்தி மக்களையே தாக்கும் பொழுது
புத்த போதி மரங்கள்
கயாவில் அமைதி காத்தன
இந்த மெடூசாவின் தலைகள்
ஹெர்கூலிய முயற்சியையும் விஞ்சியவை!!

எனக்கும் புரியுது ஆனா புரியல. ஆஹா! எனக்கும் புதுக் கவிதை வந்துடுச்சா?

Thursday, August 9, 2007

கவிதை என்னைக் காதலித்ததில்லை!

கவிதையுடனான என்னுடைய உறவு சற்று நீண்டது தான். ஆனால் பலமானது அல்ல! தொட்ட குறை விட்ட குறையாகத் தான் பழகி வருகிறோம் நானும் கவிதையும்!

ஏழாம் க்ளாஸ்,எட்டாம் க்ளாஸ் படிக்கும் போது பாரதியின் பாடல்களை படித்து விட்டு நாமும் கவிதை எழுதினால் என்ன என்று தோன்றியது. அதற்கென்று ஒரு புத்தகம், ஜீவா என்ற புனைப்பெயர் வேறு! என் அருகில் யோகேஷ் என்று ஒரு நல்ல பையன். நான் என்ன எழுதித் தந்தாலும் வாங்கி படித்து 10/10 போட்டு V.good போட்டுத் தருவான். அதனால் அவனிடம் மட்டுமே குடுத்து வந்தேன். அவனுக்கும் பெருமையாய் இருந்ததோ என்னமோ,நாம் கவிதை எல்லாம் மதீப்பீடு செய்கிறோம் என்று!

அப்போது கவிதை என்றால் எனக்கு எதுகையோ அல்லது மோனையோ இருக்க வேண்டும். அப்படி இருந்து விட்டாலே கவிதை தான்.

ஒரு நாள் அம்மாவிடன் எடுத்து கொண்டு போய் நீட்டினேன். குழாய் அடிச் சண்டை என்ற பெயரில்.

முண்டமாய் முட்டி நிற்கும் அண்டாக்கள்
முடமாய் வாய் பிளக்கும் குடங்கள்
கொண்டைகள் போடுகின்றன இங்கே சண்டைகள்!

என்னடா இது! முண்டம்,முடம்னு! ஏதாவது நல்லதா எழுதிண்டு வாடா என்றாள்.

சரி, நாட்டுக்கு நாமும் அறிவுரை சொல்வோமே என்று வேறு ஒன்று எழுதிக் கொண்டு போனேன். எல்லாவற்றிலும் நான்கு வரிகள் தான் ஞாபகம் இருக்கிறது.

படகான வாழ்க்கையிலே
பங்கம் ஏதும் நேராமல்
பக்குவமாய் நீ ஓட்டி
பல காலம் சிறந்திடுவாய்!

அட பரவாயில்லாயே! என்றாள்.

நமக்குத் தான் எதை எழுதினாலும் நாலு பேரிடம் குடுத்து பாராட்டு வாங்க வேண்டுமே. ஆனால் இது ஒரு வகையில் நல்லதும் கூட. சில பேர் கர்வ பங்கம் செய்து விடுவார்கள். குப்பையாய் எழுதிவிட்டு கும்மாளம் அடிக்காதே என்று!

எனக்கு அப்படி கர்வ பங்கம் செய்தவன் என் அக்கா பையன்.

என் கவிதை புத்தகத்தை படித்து விட்டு "என்னடா எழுதி இருக்க,எல்லாம் வேஸ்ட்" னு சொல்லிட்டான். அப்போது தான் எனக்கு அந்த யோகேஷ் எவ்வளவு நல்லவன் என்று புரிந்தது !

டேய்,ஒண்ணு கூட தேறாதா?

இதோ இது பரவா இல்லை என்றான்.

இன்னும் அந்த "கவிதையில்" எனக்கு ஞாபகம் இருக்கும் வரிகள்.

சிக்கலான விஷயத்துக்கு
சித்திரகுப்தன் போதவில்லை
எருமை மாடோ சோம்பேறி
எங்கேயுமே செல்வதில்லை
புரவி வாங்கி புவிக்கு
புத்துணர்வுடன் கிளம்பிய எமனின்
பருத்த உடலை சுமந்து குதிரை
பறந்து செல்ல முடியவில்லை

பிறகு அந்த குதிரை கீழே விழுந்து,எமனும் சேர்ந்து விழுந்து,அவன் மீசையில் எத்தனை மண் ஒட்டியது,கணிதப்புலிகளே கணக்கிடுங்கள் என்று வரும்.

அவன் "வேஸ்ட்" னு சொன்ன அத்தனை கவிதைகளும் மறந்து விட்டன - இன்னொன்றைத் தவிர.

அப்போது தான் எதுகை, மோனையைத் தாண்டி இயைபு என்று ஒன்று இருப்பது தெரிய வந்தது. அதை வைத்து ஒரு கவிதை எழுத வேண்டும் என்று ஆசை. டி.ஆர். பாணி வசனங்கள் மாதிரி.

இந்துக்களின் வேத நூல் மறை
இஸ்லாமியர் பார்ப்பது மூன்றாம் பிறை
இயேசுபிரானே கிறிஸ்தவர்களுக்கு இறை
இறை இல்லாதோர் இவற்றில் பார்ப்பதோ குறை
இவர்களின் கண்களை மறைப்பதோ திரை
இது விலகினால் குறை காண மாட்டார் - கடைசி வரை.

அதற்கு பிறகு நான் கவிதை என்ற பெயரில் எதுவும் எழுதவில்லை.

ஆரணியில் இருந்து சென்னை மாற்றலாகி வந்த நேரம். ஜீன்ஸ் பாண்ட், டி-ஷர்ட் கிளிகளுடன் கலந்துறவாட நுனி நாக்கு ஆங்கிலம் அத்தியாவசியம் என்று ஞானம் பிறந்த காலம். Kidnapped-இலும்,Lorna Doone-இலும் ஆரம்பித்து, Sidney Sheldon, Jeffrey archer என்று போய்விட்டது. தமிழ் கவிதைகளுடனான தொடர்பு பலவீனமான நிலைமையில் தான் அதற்கு அப்புறம். ஒரே ஒரு விதிவிலக்கு - ப்ளஸ் 2 தமிழ் பாட புத்தகத்தில் அப்துல் ரஹ்மான் எழுதிய வேர்வைத்(வியர்வைத்?)தாலி. என்ன ஒரு கவிதை!

இந்த ஆதிரைப் பருக்கைகள் விழுந்த பின்னர்
மழலை மண் வாயில் எல்லாம் தேவாரங்கள்.

நான்கு வருடங்கள் பின்பும் என்னை புத்தக விழாவில் அப்துல் ரஹ்மான் புத்தகத்தை வாங்க தூண்டிய வரிகள் அவை.

பத்து நாட்கள் முன்பு தான் தமிழ் வலையுலகை எட்டிப் பார்த்த கத்துக்குட்டி நான்.பல வலைப்பதிவுகளில் காதல் கதைகள்/கவிதைகள் படித்த தாக்கத்தில் ஏதாவது நமக்கும் வருமா என்று ஒரு முனைப்பாய் முக்கியதில் ஆறுதலாய் ஆறு வரிகள் வந்தன!

புதுக் கவிதை என்ற பெயரில் பிட்டு பிட்டு ஏழெட்டு பததிகளாய் வைத்து இருக்கிறேன் - பாருங்கள் ஏதாவது தேறுமா என்று!

பௌர்ணமி இரவில்:
--------------------------------------
கடற்கரை மணலில் கைவிரலால்
நீ கோலமிடும் அழகைக் கண்டு தான்
சிப்பிகள் தங்கள் முத்துப்பல் இழந்து
வாய் பிளந்து நிற்கின்றனவோ?

வளை பறிக்கும் நண்டுகள்
நீ கால் பதித்த இடங்களில் எல்லாம்
பாத பூஜை செய்கின்றனவோ?

உன் பார்வையின் வீரியம்
தாங்காமல் தான்
முகம் சிவந்து அந்திச்சூரியனும்
கடலில் குதித்து விட்டானோ?

நீ கண் சிமிட்டும் அழகைக்
காணத் தான் மேற்கில்
வீனஸ் தேவதையும்
இமைக்க மறந்து பார்க்கிறாளோ?

உன் பத்து விரல்களிலும்
குட்டி நிலவுகளை கண்டு
விண்மீன்கள் எல்லாம் உன்
பணிப்பெண்களாக வர
விண்ணப்பம் இடுகின்றனவோ?

உன் கன்னக்கதுப்பில்
முத்தமிட்டுச் சென்ற விட்டில் பூச்சிகள்
பிறவிப்பயன் பெற்ற மகிழ்ச்சியில் தான்
உயிர் நீத்து விடுகிறனவோ?

நேற்று வரை பாதி முகம் காட்டி
பவனி வந்த குறைமதி ஒன்று
உன் முன் மண்டியிடத்தான்
இன்று முந்தி வந்து நிற்கிறதோ?

வழி காட்டும் திசை காட்டிகள்
உன் காந்த விழிகளில் ஈர்க்கப்பட்டு
இடம் மாறிக் காட்டுவதால்
கப்பல்கள் கடலில்
தடம் மாறி செல்கிறதாம்!

இத்தனை நேரம் உன் பாதம்
வருடி வந்த அலைகளும்
அத்துமீற ஆரம்பித்து விட்டனவே!

உன் கூந்தல் கோதி வந்த காற்று
உன் சுவாசமாகி உன்னுள்
நுழைந்தெழுந்ததும்
இப்படிக் கள்வெறி கொண்டு விட்டதே!

போதும் கண்ணே,
உன்னால் ஒரு புயற் சின்னம்
உருவாவதற்குள் கிளம்பி விடு!

Monday, July 30, 2007

யாரிந்த வந்தியத்தேவன்? எதற்காக நீர்க்குமிழி?

என் உண்மையான பெயர் வந்தியத்தேவன் இல்லை. பெரிய பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் வைத்துக் கொள்கிறார்களே அது போல் நாமும் வைத்துக் கொண்டால் தான் என்ன என்று கொண்ட புனைப்பெயர் அது. ஒரு வேளை அபத்தக் களஞ்சியமாய் உளறிக் கொட்டினால் நான் தான் அது என்று சுத்து வட்டாரத்தில் தெரியக் கூடாது என்பது கூட ஒரு காரணமாய் இருக்கலாம். எழுத்தாளர்களின் இந்த தனக்கு தானே பெயரிட்டுக்கொள்ளும் பழக்கமும் பிடித்திருக்கிறது. நமக்கு தான் ஒரு வலைப்பதிவை ஆரம்பித்தாலே எழுத்தாளன் ஆகி விட்ட உணர்வு ஏற்பட்டு விடுகிறதே!

பொன்னியின் செல்வனை படித்து விட்டு அந்த தாக்கத்தில் "வானதி பதிப்பகம்" என்று பெயரிட்டார்களாம். அது மாதிரி ஒன்றும் எனக்கு கல்கியின் வந்தியத்தேவன் மேல் அசாத்திய பிரியம் கிடையாது. ஆனால் பெயர் பிடித்திருக்கிறது.

ஒரு மனிதன் என்பவன் அவன் எண்ணங்களால் ஆனவன் என்பதால் என் குலம், கோத்திரம், ஊர், பெயர் எல்லாம் முக்கியம் இல்லை என்று நினைக்கிறேன்.

எனக்கு சாப்பாட்டிலும் குழம்பு தான் பிடிக்கும். வாழ்க்கையிலும் குழம்பத் தான் பிடிக்கிறது. முடிந்த முடிவு என்பது எதிலும் கிடையாது. சரியாகத் தெரியும் ஒன்று பின்னர் தப்பாக தோன்றுகிறது. அதனால் குழம்பி குழம்பி எப்பொழுது எந்த இடத்தில் சோர்ந்து விடுகிறோமோ அது தான் பாதி நேரம் முடிவாகி விடுகிறது என்று நினைக்கிறேன். இப்படி குழம்புவதில் எனக்கு ஒன்றும் வருத்தம் இல்லை.
Inconsistency is the result of rationality - என்று நமக்கு சாதகமான பழமொழி ஏதாவது ஒன்றை வைத்துக் கொண்டு ஓட்டைப் பெருமை பட்டுக் கொள்ளலாம் இல்லையா?

நீர்க்குமிழி எதற்காக? படிக்கும் பார்க்கும் கேட்கும் விஷயங்களால் தோன்றி மறையும் எண்ணங்களை பதிவு செய்தால் தான் என்ன என்று தோன்றியது. (இதிலாவது ஒரு தெளிவு கிடைக்காதா என்ற நப்பாசை) அதனால் விளைந்தது தான் இந்த நீர்க்குமிழி.

கட்டுரையின் கருவை சீர்படுத்தி பேனாவின் மூலம் பிரசவிப்பதற்கு சற்று பிரயத்தனப்பட வேண்டி இருக்கிறது. (அதனால் தான் ஆங்கிலத்தில் Brain Child என்று கூறுகிறார்களோ?!) சில சமயம் குறை பிரசவம் ஆகி விடும் என்ற பயமும் இருக்கிறது. இத்தனைக்கும் எழுதப் போவது என்னமோ "காலையில் எழுந்தேன் காபி குடித்தேன்" வகையறாக்களைத் தான். முதலில் அதை உருப்படியாக சொல்ல முடிகிறதா என்று பார்க்க வேண்டும். இது எனக்காக எழுதும் ஒன்று என்றாலும், எதிலும் பாராட்டைத் தேடி அலையும் அசட்டு மனம் இதிலும் ஒரு அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறது.

நூலகத்தில் இருந்து நா. பார்த்தசாரதி புத்தகம் எடுத்து வந்தால் "அவன் வள வளனு எழுதுவான். அவனை ஏன்டா எடுத்துண்டு வந்த" என்று அம்மா கேட்பாள். அது போல ஆகி விட்டதோ என்ற பயத்துடனே இதை முடித்துக் கொள்கிறேன்.