Monday, January 18, 2010

ஆயிரத்தில் ஒருவன் - அஜீர்ணம் ஏற்படுத்தும் அரைவேக்காடு!

ஆயிரத்தில் ஒருவன் பற்றி ஆயிரம் பேர் விமர்சனம் எழுதிவிட்டார்கள். ஆயிரத்தி ஒருவனாய் (1001) நானும் இதோ! மற்றவர்களை விட வித்தியாசமான ஒரு விமர்சனத்தை எழுதி விடுவேன் என்றெல்லாம் என்னையும் உங்களையும் ஏமாற்ற விரும்பவில்லை. எழுதி ஒரு ஆண்டாகி விட்டது. சுயமாய் ஒன்றை பற்றி எழுதுவதை விட ஒரு திரைப்பட விமர்சனம் எழுதுவது எளிதாக படுகிறது என்பது தான் முக்கிய காரணம்.



ஒரு படம் ஆனால் இரண்டு கதைகள். இடைவேளைக்கு முன்பு ஒன்று அதன் பின் மற்றொன்று.

இடைவேளைக்கு முன்பு :
ஒரு கட்டுமஸ்தான், இரண்டு கட்டழகிகள், சில கூட்டாளிகள், பல காவலாளிகள் ஒரு தீவுக்கு செல்கின்றனர். கிராபிக்ஸ் இன்னல்கள்  கூட்டாளிகளையும் , காவலாளிகளையும் இந்த முக்கிய மூவரிடமிருந்து பிரித்து விட நம் கட்டுமஸ்தானும், கட்டழகிகளும் கட்டிக் கொள்கிறார்கள், ஒட்டிக் கொள்கிறார்கள் பின்னர் என்ன காரணத்தினாலோ வெட்டிக் கொண்டு ஆங்கிலத்தில் வசை பாடிக் கொள்கிறார்கள். இந்த வசை தான் ஹாலிவுட் தரத்திற்கு நிகரான ஒன்று. (தமிழில் முதல் முயற்சி. இதையெல்லாம் நாம் கை தட்டி ஆதரிக்க வேண்டாமா? )
நடுவில் கிராபிக்ஸ் துணையுடன் கோவிந்தா கோவிந்தா வெங்கட்ரமணா கோவிந்தா சாயலில் ஒரு பாடல்!

பின்னர் இவர்கள் இரண்டு மூன்று ரீலுக்கு சுற்றியலைந்து சோழ குடியிருப்பை கண்டறியும் வேளையில் இவர்களுக்கு காதுகளில் இரத்தம் கொட்டி பைத்தியம் வேறு பிடித்து விடுகிறது. இரண்டாம் பகுதியின் இறுதியில் படம் பார்ப்பவர்களுக்கு நடக்கப் போவதை இது முன் கூட்டியே சொல்வது போல் இருக்கிறது. புரிந்துக் கொண்ட சிலர் இடைவேளையிலேயே எஸ்கேப் ஆனார்கள். 
 
பிடித்த காட்சி:
நடராஜர் சிலை போல் நிழல் விழுவதும் கூடவே ஒலிக்கும் பின்னணி இசையும் அபாரம். இந்த நிழல் சமாசாரம் பல ஆங்கில படங்களில் பார்த்த ஒன்றென்றாலும் இதில் அற்புதமாக வந்துள்ளது. என் தொய்ந்த தோள்களையும், சொருகிய கண்களையும், சரிந்த மனதையும் சற்று தூக்கி நிறுத்தியது. (கொசுறு: நிறுத்தி வைக்கப்படிருந்த கல்லின் இருபுறமும் நிழல் விழும் அதிசயத்தை கார்த்தி எதோ ஒரு டி வி. சேனலில் அறிவியல் துணை கொண்டு விளக்கி கொண்டிருந்தார்).

புரியாத காட்சி:
ஒரு இடத்தில காட்டுவாசிகள் இவர்கள் மேல் தாக்குதல் நடத்துவார்கள். அங்கு அழகம் பெருமாள்  அவர்கள் அருகே வந்து தாக்கும் வரை "ஹோல்ட் பயர்" செய்யச் சொல்வார். எதற்கு என்று தான் புரியவில்லை. இந்த இடம் பிரேவ் ஹார்ட் நகல். ஆனால் அங்கு மெல் கிப்சன் சொல்வதற்கு அர்த்தம் இருக்கிறது. இங்கு அபத்தம் தான் இருப்பது போல் தோன்றுகிறது.

இடைவேளைக்குப் பின்: 

மூக்கில் சிவப்பு புல்லாக்கு போட்டுக் கொண்டு  நாலு பேரை 300 பட ரேஞ்சில் அடித்து விட்டு தன் தலை கவசம் கழற்றி பார்த்திபன் அறிமுகமாகிறார் - குழம்பிய குட்டையை இன்னும் கலக்க!

சோழ நாட்டு குல குருவிற்கு உடம்பெல்லாம் சொறி வந்திருக்கிறது. மக்கள் எல்லாரும் கரி பூசிக் கொண்டிருக்கிறார்கள். (apocalypto!)  வெள்ளையும் சொள்ளையுமாய்  வரும் ரீமாசென்னிற்கு தான் எல்லா மஞ்சளும் குங்குமமும் போல.

எல்லாரும் செந்தமிழில் பேச வேண்டும் என்பதற்காக எளிய  சொற்களுக்கெல்லாம்  தமிழ் அகராதியில் கடினமான சொற்களை தேடி பிடித்து பேசுகிறார்கள். பதினெண் கீழ் கணக்கு நூல்களை எழுதிய புலவப் பெருந்தகைகள் கூட இவ்வாறு பேசி இருக்க மாட்டார்கள். ( தமிழில் வர்த்தமானம் என்ற சொல் இல்லை;சமஸ்க்ருதம் என்றான் நண்பன். ஒரு வேளை சோழத் தமிழில் இல்லையென்றால் ஈழத்தமிழில் உண்டோ என்னவோ! அந்த வாசனையில் தான் பேசுகிறார்கள்.  சோழநாட்டு சின்னம் தானே நம் ஈழ விடுதலைப் புலிகளுக்கும். )

கல்கி , விக்ரமன், சாண்டிலயன் கதைகள் போல ஒரு முத்திரை மோதிரம் கேட்பார்கள்  என்று பார்த்தால், ரீமா சென் எப்பொழுது நம்மை ஆடை களையச் சொல்வார்கள் என்று காத்திருந்து 'டமால்' என்று கழற்றி முதுகில் புலிச் சின்னம் பச்சை குத்தி இருப்பதை காட்டுகிறார். முதல் பாதியில் 'மூடு' 'பொத்து' என்றெல்லாம் பேசியவர் பின் பாதியில் ஈறு கெட்ட எதிர் மறை பெயரச்சம் அறிவீரோ என்றெல்லாம் பேசுகிறார்! ஒரு சிறிய  இடைவேளையில் செல்வராகவன் தமிழ் சொல்லி கொடுத்து விட்டார் போல.  

பின்னர் ரீமாசென்  கண் சிமிட்டி, வாள் சுழற்றி, இடை அசைத்து,  மார் குலுக்கி, கால் அகற்றி பார்த்திபனை வசியப்படுத்துகிறார். பார்த்திபன் ஏதோ ஆப்பிரிக்க நடனம் எல்லாம் ஆடுகிறார். என் கண்ணுக்கு இவர் சுத்த கோமாளி தான். ரீமாசென்னை கட்டியணைத்து விட்டு பின்னர் கண்ணீர் சிந்துகிறார்.    நடுவில் gladiator பட அடிமை-அரக்கன் சண்டை காட்சி. ஒரு அட்டை பாறையை சுழற்றி சுழற்றி அரக்கன் எல்லா அடிமைகளையும் சாகடித்து விடுகிறான். நம் பருத்திவீரன் பாறைக்கு டிமிக்கி குடுத்து அரக்கனை அழித்து விடுகிறான்.

பின்னர் கத்தி கம்புக்கும் துப்பாக்கிக்கும் சண்டை. துப்பாக்கி ஜெயிக்கிறது. வென்றவர் தோற்றவரை அவமானப்படுத்துகிறார்கள். தோற்றவர்களின் கண்ணீர் புலம்பல்கள். வென்றவர்களின் காம வெறி ஆட்டங்கள். பின்னர் படம் முடிந்து விட்டதாய் சொல்லி விடுகிறார்கள்.

இதில் ஈழத் தமிழ் சகோதரர்களின் உணர்வும், அவர்கள் அனுபவித்த கொடுமைகளும் வெளிப்படுத்தப்படுவதாய் கூறுகிறார்கள். பாராட்டலாம். மற்றபடி பல விஷயங்கள் படத்திலும்  மனதிலும் ஒட்டவில்லை. பின் பாதியில் பல நேரம் காதை பொத்திக் கொண்டு தான் பார்த்தேன். அவ்வளவு இரைச்சல். பல இடங்களில் ஒரே இழுவையாய் பட்டது.

உலுக்கும் காட்சிகள் இரண்டு:
கைக்குழந்தையுடன் வந்த தாய் தன் மார் பிசைய, முலையிலிருந்து பாலிற்கு பதில் ரத்தம் பீச்சும் காட்சி. அப்பப்பா!!
தஞ்சை எட்டியவுடன் அடியேனை ஒரு நொடி நின்னு நினையுங்கோள் என்று தன்னை பலியாக ஒரு தாத்தா தலை அறுத்துக் கொள்ளும் காட்சி - நெகிழ்ச்சி!

முதல் பாதியில் மனதிற்கு ஆறுதல் தருவன - கார்த்தி, ரீமா சென் நடிப்பு, அதுவும் ரீமா சென்னின் சிரிப்பு, பார்வை, கோபம், துப்பாக்கி எடுத்து சுடும் ஸ்டைல் எல்லாம் சூப்பர். இதுவே இரண்டாம் பாதியில் இவருக்கு  அளவுக்கு மிஞ்சி போய் விடுகிறது - கூடவே முகம் சுளிக்க வைக்கும் விரச பாவங்களும், விரித்த கால்களும், தெலுங்கு பாட்டு பாடிக்கொண்டு பரதமா, குத்தாட்டமா என்று கண்டறிய முடியாத  நளினமின்மையும் - ரீமா , இதெல்லாம் 'நோ' மா என்று சொல்ல வைக்கிறது!
 
படத்தில் வரும் நிறைகள் தரும் நிறைவை எல்லாம் உடனேயே வரும் குறைகள் குறைத்து விட்டு போகின்றன. உதாரணத்திற்கு,  கொடூர சண்டையின் விளைவாய் இருக்கும் பேரழிவுகள் ஊடே  மீன் முகத்துடன் மத்ஸ்யாவதார பெருமாள் போல் இருக்கும் பாண்டிய குல தெய்வச்  சிலையை சோழ நாட்டு இளவரசன் எடுத்துச் செல்லும் முதல் காட்சி அமைப்பு  ஏற்படுத்தும் வியப்பை பின்னால் பேசும் குரல் குலைத்து விடுகிறது. செல்வராகவன் குரலா தெரியவில்லை. லகர, ளகர வேற்றுமை இல்லாமல் அழுத்தமான உச்சரிப்பு இல்லாமல் என்னை  நெளிய வைத்தது. என்னமோ தெரியவில்லை. இப்படிஏதாவது கேட்டால், பார்த்தால் எனக்கு இருப்பு கொள்ளாத சங்கடம் ஏற்படுகிறது. தமிழ் உச்சரிப்பு வகுப்பு என்று யாரேனும் பள்ளிகளில் ஆரம்பித்தால் அவர்களுக்கு கோடி புண்ணியமாய் போகும். வைரமுத்துவை பேச வைத்திருக்கலாம். 

தான் பார்த்த படங்களில் தனக்கு பிடித்த விஷயங்களை எல்லாம் ஒரே படத்தில் சொல்ல நினைத்தார் போல இருக்கிறது செல்வராகவன். நான் பத்து பன்னிரண்டு வகுப்பு படித்த காலங்களில் கேட்ட படித்த விஷயங்களை எல்லாம் எங்காவது சொல்லி பெருமை அடித்துக் கொள்ள வேண்டும் போல இருக்கும். அது அங்கு தேவையா , பொருந்துமா என்றெல்லாம் பார்ப்பதில்லை. உதாரணத்திற்கு ஆலிவர் ட்விஸ்ட் பற்றிய  கட்டுரையில் நான் இப்படி ஆரம்பித்தேன். "The boy who shared his first name with Hardy of the famous (Stanley) Laurel and (Oliver) Hardy....) அப்பொழுது தான் சில நாட்கள் முன் லாரல் ஹார்டியின் முழு பெயர்களை எங்கயோ படித்திருந்தேன். அதை இங்கு சொல்லி வைத்தேன்.  இங்கு இது அவசியமா? இது போல தான் அண்ணன் செல்வராகவனும் என்று எனக்கு தோன்றுகிறது. 

தேர்வில்  அருகில் இருக்கும் மாணவனின்  பாதி மட்டுமே தெரியும் விடைத்தாளை பார்த்து தெரிந்த பகுதியை மட்டும் காப்பி அடித்தால் எப்படி இருக்குமோ  அப்படி இருந்தது படம். பல இடங்களில் முழுமை இல்லை. பார்த்தவர்களுக்கு நிறைவும் இல்லை!

கார்த்தி படம் மாறியும் இன்னும் பருத்தி வீரனாகவே வருகிறார். அண்ட்ரியா அடக்கமாய், அழகம் பெருமாள் ஆரவாரமாய். ரீமா சென் சில இடங்களில் அட்டகாசமாய் சில இடங்களில் அருவருப்பாய்!!

செல்வராகவன் - சொதப்பிய சோதனைக் கூடம்!
ஆயிரத்தில் ஒருவன் - அஜீர்ணம் ஏற்படுத்தும் அரைவேக்காடு !

கமல் கூறியிருப்பார் ஒரு நேர்காணலில். மக்களுக்கு படம் புரியவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்லி விடுகிறார்கள். இது எனக்கு கோபத்தை அளிக்கிறது என்று. எனக்கு படம் பிடிக்கவில்லை. ஒரு வேளை எனக்கு படம் புரியவில்லையோ என்னமோ. செல்வராகவன் என்னை மன்னிப்பாராக!