Wednesday, December 31, 2008

கொஞ்சம் ரம்யா கிருஷ்ணன் + கொஞ்சம் ஜுலியா ராபர்ட்ஸ் = ஒரு நாட்டின் ராணி!

கொஞ்சம் ரம்யா கிருஷ்ணன் சாயல்:



கொஞ்சம் ஜுலியா ராபர்ட்ஸ் சாயல்:



ஒரு நாட்டின் ராணி:



சரி யாரிவர்? எந்த நாட்டு ராணி?



ராஜாக்கள் ராணிகள் மேல் நமக்கு என்றும் ஒரு தனி அபிமானம் உண்டு. பாட்டி சொல்லும் கதைகளாகட்டும், அம்புலிமாமாவின் கதைகளாகட்டும் - "ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம்" என்று தானே கேட்டும் படித்தும் வளர்ந்திருக்கிறோம். கல்கி சாண்டில்யனின் சரித்திர கதைகளின் வெற்றி , வளர்ந்த பின்பும் நமக்கு ராஜா ராணி கதைகளில் இருக்கும் மோகம் கொஞ்சமும் குறையவில்லை என்று தானே பறை சாற்றுகின்றன.(ஒரு வேளை, வளர்ந்த பின்பு நம் மோகம் எல்லாம் சாண்டில்யனின் இளவரசிகளில் மேல் மாறி விடுகிறதோ?!). இப்பொழுது ராணி என்றால் நமக்கு எலிசபெத் பாட்டி மட்டும் தான் நினைவிற்கு வருகிறார். ஹிந்தி படம் பார்பவர்களுக்கு ராணி முகர்ஜி நினைவிற்கு வரலாம்.

ஆனால் நான் சொல்லப் போகும் ராணி ஐ-டெக்ஸ் விளம்பரம் சொல்லும் 'இன்றைய மங்கை'.

இவரைப் பற்றி சிறு குறிப்பு வரைக என்று யாரேனும் உங்களைக் கேட்டால் நீங்கள் கீழ் கண்டவாறு விடை அளிக்கலாம். (அவ்வாறு யாரும் கேட்க வாய்ப்பில்லை என்றாலும் நீங்களே உங்களை கேட்டுக் கொண்டு மேலெந்த தர்க்கமும் செய்யாமல் கீழுள்ள கதையை படியுங்கள்!)

பால காண்டம் முதல் வேலை காண்டம் வரை.

பிறந்தது குவைத். பெற்றோர்கள் பாலஸ்தீனியர்கள். கற்றது மேலைநாட்டுக் கல்வி. கைரோவில் உள்ள அமெரிக்க பல்கலைக் கழகத்தில் பிசினஸ் டிகிரி. வளைகுடா போரின் போது அம்மான் நகரம். சிறிது காலம் சிடி பேங்க், மற்றும் ஆப்பிள் கம்ப்யூட்டரில் வேலை.

காதல் காண்டம் முதல் குழந்தை காண்டம் வரை:

இளவரசர் நடத்தும் ஒரு விருந்துக்கு இவருக்கும் அதிர்ஷ்டவசமாக அழைப்பு கிடைத்தது. அதற்கு பிறகு நிகழ்ந்தது என்ன என்று புத்திசாலி வாசகர்கள் நீங்கள் யூகிக்க மாட்டீர்களா? ஒரு 'கப்புச்சினோ காபி'யின் போது 'கண்ணும் கண்ணும் நோக்கியா'. அதன் விளைவாய் இப்பொழுது நான்கு 'குவா குவா'.

இதற்கு நடுவில் என்ன ஆயிற்று தெரியுமா?

தனக்கு பிறகு அரியணை தன் தம்பிக்கு தான் என்று சொல்லி வைத்திருந்த அந்த நாட்டு மஹாராஜா மரணப் படுக்கையில் மனம் மாற்றிக் கொண்டார். யாரும் எதிர் பார்க்காத விதமாய் அரியணை தன் மகனுக்குத் தான் என்று சொல்லி விட்டு சென்று விட்டார் அந்த புண்ணியவான்.

இளவரசர் ராஜாவானார். இளவரசி ராணியானார். மக்களெல்லாம் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

எல்லாம் சுபம் சுபம் சுபம்.

இதில் பங்கேற்றவர்கள்:

காலம் சென்ற ராஜா - ஹுசைன்
ராஜாவான இளவரசர் - அப்துல்லா
ராணியான இளவரசி - நம் காவியத் தலைவி - இந்த கட்டுரையின் நாயகி - தலைநகரமான அம்மானில் இருந்து ஆட்சி செய்யும் பெண் மான் - ரானியா!

சரி எந்த நாடு என்று கண்டு பிடித்தீர்களா? ஜோர்டான் என்று நீங்கள் சொல்லி இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள்!

சரி இவரைப் பற்றி பேச காரணம் என்ன? இவருக்கு சமீபத்தில் "youtube visionary award" கொடுத்தார்கள்.

எதற்கு?

ஜோர்டான் அரபு நாடுகளில் ஒன்று என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த அரபு நாடுகள் பற்றிய நம் அபிப்பிராயம் என்ன?

அரபு நாடுகளில் இருப்பவர்கள் அனைவரும் முஸ்லீம்கள். ஆண்கள் எல்லாம் வெள்ளை அங்கி அணிந்து குல்லா போட்டு தாடி வைத்திருப்பார்கள். பெண்கள் எல்லாம் கண்கள் கூட வெளியே தெரியாதபடி பர்தா அணிந்திருப்பார்கள். இதில் பெரும்பானோர் பணக்கார ஷேக்குகள். எண்ணைக் கிணறு வைத்திருப்பார்கள். வேண்டுமளவு பணம், வேண்டுமளவு மனைவிகள். கல்யாணத்திற்கு முன் 'கச முசா' என்றால் கல்லால் அடித்துக் கொல்வார்கள். பெண்கள் கலவிக்கு மட்டுமே ; கல்விக்கு இல்லை என்பது தான் இல்லையா ?

(ஒரு வேலை நீங்கள் சவுதியிலோ, ஐக்கிய அரபு நாடுகளிலோ பணி புரிந்திருந்தால் நீங்கள் அதிகமாக அறிந்திருக்கக் கூடும். இருந்தாலும் அரபு நாடுகள் அனைத்தும் ஒரு போலவே அல்ல. )

ஓரளவுக்கு உலகம் பற்றி அறிந்த நாமே இவ்வாறு தான் கருத்து வைத்திருப்போம் என்றால் அமெரிக்கா தான் உலகம் என்று நினைத்திருக்கும் அமெரிக்கர்கள் என்ன நினைத்திருப்பர்கள்? சி.என்.என்னிலும் fox நியூசிலும் காட்டும் அரைகுறை செய்தியை பார்த்து ஒரு லூசுத்தனமான அபிப்பிராயம் வைத்திருப்பார்கள். இத்தகைய தப்பான எண்ணங்களை களைவதற்கு இவர் ஒரு "youtube channel" ஆரம்பித்தார். அனைவரையும் இஸ்லாத்தை பற்றியும், அரபு நாடுகள் பற்றியும் அங்கு பெண்களின் நிலை பற்றியும் கேள்விகள் கேட்கச் செய்து விளக்கம் அளித்துள்ளார்.

பெண்கள் பள்ளிக்கு செல்வார்களா இல்லை பள்ளிவாசல் மட்டும் தான் செல்வார்களா, ஆண்கள் எத்தனை பேருக்கு குண்டு வைப்பது குலத்தொழில் என்று பல கேள்விகள் கேட்டுள்ளனர் மக்கள்.

அதெல்லாம் நீங்கள் இங்கு காணலாம்.

அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு "லேட் ஷோ வித் லெட்டர்மேன்" தெரியாமல் இருக்காது. அந்த பாணியில் இவர் செய்த ஒரு நக்கல் முகப்பிலேயே இருக்கிறது. அதற்கு போவதற்கு முன் நீங்கள் இங்கேயும் சென்று பார்க்க வேண்டும். கூகுளின் Zeitgeist(2008) என்ற கருத்தரங்கில் இவர் பேசியதையும் கேளுங்கள். ஆரம்பமே அபாரம்.

" ஜோர்டான் என்று கூகிள் செய்தால் 184 மில்லியன் ஹிட்ஸ். UK என்று செய்தால் 358 மில்லியன் ஹிட்ஸ். US என்று செய்தால் 795 மில்லியன் ஹிட்ஸ். ஆனால் கூகிள் என்றே கூகிள் செய்தால் 1.9 பில்லியன் ஹிட்ஸ். இப்பொழுது தெரிகிறது உலகை யார் ஆளுகிறார்கள் என்று! "

(இதை நான் இப்பொழுது செய்து பார்த்தேன். எல்லாம் வேறு வேறாக வருகிறது என்பது தனி செய்தி!)

இவர் பேசியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. (கூடவே இவர் கண்களும்). இவர் பெண் உரிமை பற்றி பேசியது, உலக பொருளாதார கருத்தரங்கில் பேசியது, எவ்வாறு ஜோர்டனை ஆட்சி செய்கிறார் என்பது பற்றி எல்லாம் வலையில் விஷயங்கள் விரவி கிடக்கிறது. கூடவே இவர் மூக்கு ஆப்பரேஷன் செய்து கொண்டாரா, நாக்கு ஆப்பரேஷன் செய்து கொண்டாரா என்பது போன்ற சுவையான தகவல்களும் கிடைக்கலாம். ஆக இதையெல்லாம் பொறுமையாக மொழிமாற்றம் செய்வதற்கு எனக்கு கொஞ்சம் போரடிக்கிறது. இந்த கட்டுரை ஒரு அறிமுகமும், சிறு குறிப்பும் மட்டும் தான். இவர் பேசியது பிடித்திருந்தால் நீங்களே கொஞ்சம் தேடிப் படிக்க மாட்டீர்கள்? அதற்கு ஒரு ஆரம்பமாக இதோ இவரின் வலைத்தளம் இங்கே.

3 comments:

SKP said...

உனக்கு கார்லா ப்ருனீ, Queen ராணியா போன்ற மனிதர்கள் மீது பெரிய மதிப்பு வருவதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. :-)
சில சமயம் அழகும் அறிவும் பார்க்கும்போது பொறாமை வரத்தான் செய்கிறது. :-) எனக்கு Shreya Ghosal-ஐ பார்த்துத் தோன்றியது உனக்கு தெரிந்ததே, ஆமாம் ஆண்களுக்கு எல்லாம் இந்த விருந்து அழைப்புகள் வந்தது போல தெரியவில்லை. Cinderella, Jane Austen கதாநாயகிகள் பல பேர் விருந்து சென்றே பெரிய மனிதர்கள் ஆனார்கள். நமக்கு எந்த நாட்டு ராணி அழைப்பு விடுகரர் என்று காத்துக் கொண்டே...

SKP said...

Great thinking man!! Hats off to her.

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

நண்பா,

கார்லா ப்ருனி, குவீன் ராணியா போன்றவர்களின் மேலுள்ள மதிப்பைக் காட்டிலும் பலர் மேல் எனக்கு அதிக மதிப்புண்டு. ஆனால் நாம் மதிப்பவர்கள் அனைவரும் சுவாரஸ்யமானவர்கள் அல்ல.

ஆண்களுக்கு பெண் என்றாலே கவர்ச்சி. அழகான பெண்ணோ, அறிவுள்ள பெண்ணோ அதிக கவர்ச்சி. அழகும் அறிவும் நிறைந்த பெண் அதை விட அதிக கவர்ச்சி. ஆக நான் இவர்களை பற்றி எழுதியதில் ஒன்றும் வியப்பில்லை தான். (இதில் பொறாமை இருக்கிறதா என்று நான் யோசித்து தான் சொல்ல வேண்டும்.) என்னைக் கவர்ந்தவர்கள் நான் எழுதுவதைப் படிப்பவர்களையும் கவர்வார்கள் என்பது தான் காரணம். ஆக இதில் கொஞ்சம் வியாபார உள் நோக்கமும் இருப்பதாகக் கொள்ளலாம். (ஆனால் நான் எழுதுவதை நிறைய பேர் படிக்கிறார்கள் என்ற தப்பு கணக்கெல்லாம் போடவில்லை. ;) ).

இதை சொல்லும் பொழுது எனக்கு மீண்டும் தலைவர் ஆஸ்கார் ஒயில்ட் ஞாபகம் தான் வருகிறது.

Good people, belonging as they do to the normal, and so, commonplace, type, are artistically uninteresting.
Bad people are, from the point of view of art, fascinating studies. They represent colour, variety and strangeness. Good people exasperate one's reason; bad people stir one's imagination.

நேரமிருந்தால் இதைப் படித்துப் பார். http://www.readbookonline.net/readOnLine/9894/

நான் எடுத்துள்ளவர்கள் - நல்லவர்கள் + சுவாரஸ்யமானவர்கள்.(முன்னமேயே நான் சொன்ன காரணங்களுக்காக).

// நமக்கு எந்த நாட்டு ராணி அழைப்பு விடுகரர் என்று காத்துக் கொண்டே..//

ஆனாலும் நண்பா, உனக்கு அளவிட முடியாத தன்னம்பிக்கையா அல்லது நகைச்சுவை உணர்வா தெரியவில்லை. கோடி வீட்டு ராணியே நம்முடன் முகம் கொடுத்து பேசுவதில்லை. நாட்டு ராணியின் அழைப்புக்காக காத்திருக்கிறாயே! :)