Sunday, November 23, 2008

வாரணம் ஆயிரம் - பட விமர்சனம்



நடிகர்களை விடவும் இயக்குனர்களுக்காக படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவன் நான். கில்லி, சுள்ளி, பில்லா, குல்லா எல்லாம் பார்த்தது இல்லை. இது கௌதம் படம் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் இணையத்தில் ஒரு நல்ல ப்ரிண்டாக தேடிப் பார்த்தேன். (நான் ப்ளோரிடாவில் இருக்கும் இந்த ஊரில் தமிழ் படங்கள் வெளியாகும் வாய்ப்பே இல்லை. என்ன செய்வது? தியேட்டரில் பார்க்கும் அனுபவம் கிடைக்கவில்லை என்றாலும் ஒன்றும் மோசம் இல்லை.)

வாரணம் ஆயிரம் - ஆயிரம் யானைகள். பெயர் கம்பீரமாக இருக்கிறது. ஆனால் படத்திற்கு ஏன் இந்த பெயர் என்று தான் புரியவில்லை. பெயர் பிடித்திருக்கிறது என்று நான் வந்தியதேவன் என்று வைத்துக் கொண்டது போல கெளதம் வைத்திருக்க வேண்டும். பட இறுதியில் பெயர் விளக்கம் சொல்வெதெல்லாம் சப்பைக்கட்டு தான்!

சரி படத்திற்கு வருவோம். ஒரு வரியில் கதை சொல்ல வேண்டும் என்றால் தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு - மகன் பார்வையில்.
தந்தையாகவும் மகனாகவும் சூர்யா. எப்படி இந்தியன் படத்தில் தாத்தா கமல் தான் ஹீரோவோ அது போல இதில் தந்தை சூர்யா தான் உண்மையான ஹீரோ. எல்லா காலங்களிலும் மகனுக்கு உற்சாகம், ஆதரவு, வழி காட்டுதல் தந்து தந்தை என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என்று நம்மை சொல்ல வைக்கிறார். பாச போராட்டங்களோ, மிகை உணர்ச்சி காட்சிகளோ இல்லை என்பது பெரிய ஆறுதல். ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுவது சற்று பணக்கார மற்றும் உயர் மத்திய தர குடும்பங்களுக்கு உரித்தான விஷயம் என்றாலும், இதில் சிம்ரனும், சூர்யாவும் பேசுவது அவ்வளவாக உறுத்தலாக இல்லை. ரசிக்கும்படியாகத் தான் இருக்கிறது. french beard அருமையாக பொருந்துகிறது. Respectability கொண்டு வருகிறது. நடிப்பும், பாடி லாங்வேஜும் சூப்பர். விஜய், அஜித்தை விட சூர்யா மேல் என்ற என் எண்ணம் வலுக்கிறது.

மகன் சூர்யா - ஒல்லி ஸ்டுடென்ட் சூர்யா, தாடிக்கார சூர்யா, பாடி பில்டர் சூர்யா (கட்டுமஸ்தான சிக்ஸ்-பேக் உடம்பு பல இடங்களில் நடித்திருக்கிறது) - எல்லாவற்றுக்கும் மெனக்கட்டு இருக்கிறார் - அதற்காக சபாஷ் சொல்லலாம். நடனத்திலும் நல்ல தேர்ச்சி. காதலிப்பதில் ஆரம்பத்தில் ஒரே வழிசல். போக போக தேறி விடுகிறார். அங்கங்கே மெல்லிய நகைச்சுவை நம்மிடம் புன்னகையை வரவழைக்கிறது. (Woods are lovely, dark and deep! அப்படியா மச்சான்?) (நான் எம் எஸ் படிக்க போறேன். - இந்த அமெரிக்காவுல ரெண்டு வருஷம் சொல்லிக் கொடுப்பாங்களே அதுவா?). கிடார் மீட்டிக் கொண்டு வரும் இடங்களில் தானே பாடி இருப்பார் போல. இன்னும் கொஞ்சம் ப்ராக்டிஸ் செய்திருக்கலாமோ?

சிம்ரன் - தந்தை சூர்யாவின் ஜோடி - அடக்கமான நடிப்பில் மிளிர்கிறார். கல்லூரி கால சிம்ரனின் மேக்-அப் - உடை, சிகை, நகை - எல்லாம் அச்சு அசல் ஓம் சாந்தி ஓம் தீபிகா படுகோனை ஞாபகப்படுத்துகிறது. - (உப செய்தி : தீபிகா தான் இதில் நடிப்பதாக இருந்தார் - ஓம் சாந்தி ஓம்-இல் நடிப்பதற்காக விலகிக் கொண்டார்). வழக்கமான தமிழ் சினிமா அம்மாக்களை போல் அழுகை, அலட்டல், புலம்பல் எல்லாம் இல்லை. ஆனால் ஒரு குறை. இந்த அம்மாக்களுக்கு ஏன் கொஞ்சம் மேக்-அப் போடக் கூடாது? கதா நாயகிகளை விட அழகாக தெரிந்து விடக் கூடாதே என்பதற்காகவா? கதாநாயகிகள் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக ஒரு சொத்தை தங்கையை எங்கிருந்தோ பிடித்துக் கொண்டு வருவார்களே, அது போலவா? ஒரு காலத்தில் கனவுக் கன்னியாக எங்கள் உறக்கத்தில் உலா வந்த தங்கத் தலைவியை கொஞ்சம் அழகான அம்மாவாக காட்டி இருக்கக் கூடாதா?

சமீரா ரெட்டி - நமக்கு பிடித்த கொழுக் மொழுக் வகை. இவரின் சிறப்பம்சம் கண்களா, கன்னமா, உதடுகளா என்று குமுதம் கேள்வி- பதிலுக்கு எழுதிக் கேட்கலாம். சிரிக்கும் போதெல்லாம் "அழகோ அள்ளுதே" என்று சூர்யா போல் பாட வைக்கிறார். ஹிந்தியில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்டவருக்கு இதில் படு பாந்தமான ரோல். நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் ஒரு சில இடங்களில் இன்னும் அழகாக இவரைக் காட்டி இருக்க முடியும் என்று தோன்றுகிறது. மேக்-அப்பில் நம்மவர்கள் இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டுமோ? இருந்தாலும் பரவாயில்லை. அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளலாம். கௌதமின் கதாநாயகிகள் கொஞ்சம் நிதானமான வகை என்பது தெரிந்தது தான். இருந்தாலும் இவரை கொஞ்சம் 'துரு துரு' பெண்ணாக காண்பித்து இருக்கலாமோ? பின்னணிக் குரலும் பெரிதாக ஒத்துப் போவதாக தெரியவில்லை. இவராவது பரவாயில்லை. அடுத்த கதாநாயகி ஒரே கரகர பிரியா!

திரைக்கதை:

இதை தான் ஒரு வரியில் முன்பே சொல்லி ஆகி விட்டதே. தந்தை சூர்யா, சிம்ரன் என்று மெச்சூர்டான இரண்டு கதாபாத்திரங்களை படைத்ததற்கு கௌதமை பாராட்டலாம். மகன் சூர்யா, முன் பாதியில் வீடு கட்ட வேண்டும், துரத்தி துரத்தி காதலிக்க வேண்டும் என்றெல்லாம் இலக்கு வைத்திருந்தார். பின் பாதியில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதோ, இப்படி வாரணம் ஆயிரம் படத்திற்கு எல்லாம் விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கும் என்னைப் போல. இரண்டு கதாநாயகிகள் என்பதால் முதல் காதல் கை கூடவில்லை என்று ஊகிப்பது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை. அதற்கு பிறகு போதை, கஞ்சா, கன்றாவி என்று ஒரே இழுவை. அது தான் முடிந்தது என்றால் குழந்தை கடத்தல், ஹிந்திக்கார வில்லன், போரடிக்கும் சண்டைகள் - வேண்டாத 'தம்'மை அடிக்கவும், வராத சிறுநீரை கழிக்கவும் பலர் எழுந்து சென்றிருக்க வேண்டும் என்பது நான் பார்த்த திருட்டு வீடியோவில் நன்றாகவே தெரிந்தது.

இன்னும் எத்தனை காலத்திற்கு தான் மூக்கில் பஞ்சடைத்த பிணமும், திவச காட்சிகளும் காட்டிக் கொண்டிருக்கப் போகிறார்கள்? யதார்த்தம் என்றாலும் அருவருப்பு தான்!

படம் நெடுகிலும் பல நல்ல வசனங்கள் உள்ளன.

"ஒருத்தன் தெருவுல எறங்கினா எல்லாமே கெடைக்கும்".
"கோபம், ஏமாற்றம் எல்லாத்தையும் பாசிடிவ் எனர்ஜியா மாத்தணும்."
"உங்க உடம்ப ரெடி பண்ணுங்க. எல்லா வலியும் போய்டும்."


துணுக்கு:
இந்த படத்தில் யாரும் " I love you" என்று சொல்வதில்லை. "I am in love with you" என்று தான் சொல்கிறார்கள். அப்படி சொல்ல வைப்பதில் என்ன அலாதி பிரியமோ கௌதமிற்கு.

இசை:

ஹாரிஸ் ஜெயராஜ். பாடல்கள் எல்லாம் கேட்டிருப்பீர்கள். சொல்ல வேண்டுமா? முன் தினம் பார்த்தேனே, நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, அடியே கொல்லுதே - இவை எல்லாம் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு நம்மை முணுமுணுக்க வைக்கும். நித்யஸ்ரீ , பாம்பே ஜெயஸ்ரீ-ஐ தொடர்ந்து சுதா ரகுநாதனும் வந்தாகி விட்டது - "அனல் மேலே பனித்துளி" நம்மை மயிலிறகால் வருடுகிறது.

பாடல் வரிகள்:

தாமரை சும்மா கலக்கி இருக்கிறார். சொல்ல வேண்டும் என்றால் எல்லா பாடல்களையும் எழுத வேண்டும். நேரம், அளவு கருதி இரண்டு பாடல்களின் பல்லவி மட்டும் இங்கு !

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சற்றென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை!!
நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை!!

அனல் மேலே பனித்துளி
அலை பாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவை தானே இவள் இனி
இமை இரண்டும் தனித் தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி?


படத்திற்கு பலம் சூர்யாவும் பாடல்களும். பலவீனம் திரைக்கதை. இடைவேளை வரை ராஜ நடை போட்ட வாரணங்கள் , பிறகு வாரிக் கொண்டு விழுகின்றன. யானைக்கும் அடி சறுக்கும் என்பது இது தானோ? என் நண்பர்கள் பலருக்கு படம் மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று முயன்று பாருங்கள். ஒன்றும் தப்பில்லை!

10 comments:

SurveySan said...

நல்ல விமர்சனம்.

//விஜய், அஜித்தை விட சூர்யா மேல் என்ற என் எண்ணம் வலுக்கிறது.
/////

மேலும் மேலும் மேலும் மேலும் மேலும்.... மேலும் வலுக்கிறது ;)

//ஒருத்தன் தெருவுல எறங்கினா எல்லாமே கெடைக்கும்//
நல்ல டயலாக் இது.

இதே போல், ஒரு பாட்டுல (நெஞ்சத்தில்?) என் வீட்டைப் பார் என்னை பிடிக்கும்னு வரும், சூப்பர்ப்.

தமிழன்-கறுப்பி... said...

இவ்வளவு பெரிய விமர்சனம்...

தமிழன்-கறுப்பி... said...

இணையத்தில இறக்கி பார்த்திருந்தாலும் இவ்வளவு கவனிக்கக்கூடியதாக இருக்கிறதா அந்த பிரிண்ட...:)

இதுக்காக உங்களுக்கு ஒரு தனி பாராட்டே தரலாம்...

பாராட்டுக்கள்...

Bee'morgan said...

விமர்சனத்தைக் கூட நல்லா சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க.. :)

//
தாமரை சும்மா கலக்கி இருக்கிறார். சொல்ல வேண்டும் என்றால் எல்லா பாடல்களையும் எழுத வேண்டும்.
//
:) உண்மை..

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

வருகைக்கு நன்றி சர்வேசன்.

சூர்யாவின் தேர்ந்தெடுக்கும் படங்களில் ஸ்டைல்-ஐ தாண்டி நடிப்புக்கும் முக்கியத்துவம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

ஆம். 'நெஞ்சுக்குள்' பாட்டில் தான் வருகிறது நீங்கள் சொன்ன வரி.

"என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்!"

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

வாங்க தமிழன்-கறுப்பி. கொஞ்சம் தேடிப் பார்த்தா சுமாரான பிரிண்ட் எல்லாம் கெடைக்குது இணையத்துல. தமிழ்மணத்துல ஏற்கனவே இத்தனை விமர்சனங்கள் எழுதியாகிவிட்டதுனு தெரிஞ்சிருந்தா வேலை மெனக்கெட்டு இவ்வளவு பெரிய விமர்சனம் எல்லாம் எழுதி இருக்கவே மாட்டேன். பாராட்டுக்கு நன்றி! :)

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

நன்றி Bee'morgan. (பெயர் வித்தியாசமா இருக்கே! ஏதாவது காரணம் இருக்கா?) தாமரை இதுக்கு முன்னாடியே சில படங்கள்ல நல்லா எழுதி இருக்காங்க. பாட்டு ஹிட் ஆனா தான் கவிஞரும் புகழப்படுகிறார்கள் அப்படீங்கறது தான் சோகம்.

முரளிகண்ணன் said...

சுவையான விமர்சனம்

Bee'morgan said...

அது கொஞ்சம் பெரிய காரணம்ங்க.. அப்புறமா நேரம் கிடைக்கையில் சொல்றேன்.. :)

ஆம்.. நீங்கள் சொல்வது உண்மைதான்.. பொதுவாகவே தாமரையின் அனைத்துப் பாடல்களும் எனக்குப் பிடிக்கும்.. இம்முறை அவருக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பும் மகிழ வைக்கிறது.

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

நன்றி முரளி கண்ணன்.

Bee'morgan சாவகாசமா சொல்லுங்க. ஒண்ணும் அவசரம் இல்லை! :)