Friday, April 25, 2008

முருகன் கொடுக்காத இரண்டு! (வ.வா.ச. போட்டிக்கு )

"பரத், ரெடியா, பிராக்டீஸ் போலாமா?" விக்னேஷ் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான்.

"அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு...டிரஸ் சேஞ் பண்ணிட்டு வரேன் !"

சுற்றி பார்த்தான் விக்னேஷ். மேசைக்கு அடியில் இருந்த ஆல்பம் புக் ஒன்று கண்ணில் பட்டது. எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தான். டபுள்யு. ஜி.கிரேஸில் இருந்து ஆரம்பித்து ரஞ்சித் சிங்க்ஜி, ப்ராட்மன், லென் ஹட்டன் , கேரி சோபர்ஸ், கவாஸ்கர் என வரிசையாக படங்கள். இவற்றுக்கு நடுவில் சட்டென்று கண்ணில் பட்டது அந்த தினமணி நாளிதழ் துண்டு. ஏதோ ரஞ்சி இறுதி விளையாட்டை பற்றி எழுதி இருந்தது.

பரத் வந்ததும் கேட்டான்.. " இது என்ன? அப்பா விளையாடினதுனு எடுத்து வெச்சுருக்கியா?"

" அது மட்டும் காரணம் இல்லை... இதுக்கு பின்னாடி ஒரு பெரிய்ய கதை இருக்கு...கேட்டா நீயே நம்ப மாட்ட....."

பரத் சொல்ல ஆரம்பித்தான்.....
----------------x-------------------x ---------------X-----------------X--------X----

1972 - ரஞ்சிக் கோப்பையின் இறுதி போட்டி - பாம்பே அணிக்கும் தமிழகத்திற்கும் இடையே.

பாம்பேயின் இரண்டாம் இன்னிங்க்ஸ் துவங்க இன்னும் ஐந்து நிமிடம் இருந்தது.

தமிழக அணியின் ரஞ்சி காப்டன் சுந்தரம் தன் டீம் மேட்களை கூப்பிட்டான்.

"வாமனா, நீயும் கல்யாணும எப்படி முதல் பதினைந்து ஓவர் எப்படி போட போறீங்க அப்படீங்கரதுல தான் நம்ப வெற்றியே அடங்கி இருக்கு. ஷர்மா,

வடேகர், மங்கட் மூணு பேரும் நேஷனல் லெவல் ப்ளேயர்ஸ். யாரையும் செட்டில் ஆக விடக் கூடாது. இவங்களை எடுத்துட்டா வெங்கி மீதி பேரை காலி பண்ணிடுவான்.

"பெல்லியப்பா, விக்கெட் கீபிங் பண்ற நீ! கோல் கீபிங் இல்ல. பந்தை தடுத்தா போதாது. கேச் பிடிக்கணும். கோட்டை விட்டு நிக்காத...! பர்ஸ்ட் இன்னிங்க்ஸ்ல் ஏற்கனவே நாம்ப பத்து ரன் கம்மி. "

"க்ளோஸ் பீல்டிங்க் எல்லாம் டைட்டா இருக்கணும். சும்மா முன்னாடி நின்னு தூங்கி வழியாதீங்க. புரிஞ்சுதா?

"கமான் பாய்ஸ் , பக்கில் அப் ....!!"

போட்டிக்கு முன்பிருந்தே ஒரேயடியாக தலை கனம் பிடித்து ஆடிக் கொண்டிருந்தார்கள் பாம்பேகாரர்கள்..."தோற்பது என்றால் என்ன என்பது மறந்து விட்டது" என்றார்கள். "தமிழக அணி ஒரு பொருட்டே அல்ல" என்றார்கள். அதுவும் வடேகரும், ஷிவல்கரும் பேசும் அராஜகம் இருக்கிறதே! அதற்காகவே அவர்கள் மூக்கை உடைக்க வேண்டும் என்று நினைத்தான் சுந்தரம்.

முருகன் படம் முன்பு நின்று வேண்டிக் கொண்டான். இந்த திமிர் பிடித்த பாம்பே அணியை வென்று இவர்கள் கொட்டத்தை அடக்க வேண்டும்.....அதற்கு நீ தான் அருள் புரிய வேண்டும்....பழனி வந்து மொட்டை போடுகிறேன் முருகா!!"

ஆட்டம் ஆரம்பித்தது.

முதல் ஐந்து ஓவர்கள் - விக்கெட் எதுவும் விழவில்லை. ஆறாவது ஓவர் - வாமனன் போட்ட முதல் பந்து ஒரு அற்புதம் - டாப் ஸ்பின்னர் போட்ட டாப் ஸ்பின்னர் அது! லெக் ஸ்பின்னுக்காக ஷர்மா விளையாட. பந்து உள்ளே புகுந்து கில்லி எகிறியது.

அடுத்த வந்த வடேகருக்கு வாத்து முட்டை! மீண்டும் வாமன வித்தை!

"நீ வாமனன் இல்லை...திருவிக்கிரமன்".....சுந்தரம் மகிழ்ச்சியில் வாமனனை கட்டிக் கொண்டான்.

இரண்டாம் செஷன் ஆரம்பத்தில் பந்தை வெங்கியிடம் வீசினான் சுந்தரம். இந்த்ரஜாலம் மந்திர ஜாலம் எல்லாம் என்ன என்று அப்போது காட்டினான் வெங்கி. அடுத்த முப்பது ரன்னில் மூன்று விக்கெட் காலி! எல்லாம் வெங்கிக்கே!

எழுவதுக்கு ஏழு!

இன்னும் மங்கட் மட்டும் தேவி தேவி ஆடிக் கொண்டிருந்தான். கடைசியில் அந்த மொக்கை நாயக்குடன் சேர்ந்து நூற்றி இருபது வரை கொண்டு போய் விட்டான். இதற்குள் தமிழகத்தின் விக்கட் வேட்டை அலுவலகங்கள் எல்லாம் பரவி பாதி நாள் மட்டம் போட்டு விட்டு சோற்று மூட்டையுடன் சேப்பாக்கம் ஓடி வந்த விட்டார்கள் பலர்.

கடைசி மூன்று விக்கட்டை முகுந்தன் முடித்தான். அந்த நாள் இறுதியில் பாம்பே நூற்றி நாற்பதுக்கு ஆல் அவுட்! அந்த தலைவலி மங்கட் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நாற்பத்தைந்து எடுத்திருந்தான்.

சுந்தரத்திற்கு ஒரே குதூகலம். இரவெல்லாம் தூக்கமில்லை ! நூற்றி ஐம்பத்தி ஒன்று எடுத்தாலே வெற்றி! நன்றி முருகா!

அடுத்த நாள் - வெள்ளிக்கிழமை விடிந்தது. எட்டு மணிக்கே சேப்பாக்கம் நிறைந்தது!

தமிழக வீரர்கள் அதிர்ஷ்டம் போய் விடும் என்று அதற்கு முந்தின நாள் போட்ட ஆடையை கூட கழற்றவில்லை பந்தின் சுழற்சி அதிகம் இருப்பது நேற்று வெங்கி போடும் போதே தெரிந்திருந்தது. " ஜப்பார், ராமு - பாத்து விளையாடுங்க...பால் ரொம்ப டுர்ன் ஆகுது.
அன் ஈவேன் பௌன்ஸ் வேற.." எச்சரித்து அனுப்பினான் சுந்தரம்.

முப்பது ரன் வரை அருமையாக ஆடிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது எதிர் பாராமல் ரன் எடுப்பதில் குழப்பம். விளைவு ஜப்பார் - ரன் அவுட் !

சுந்தரத்திற்கு எரிச்சல் வந்தது. 'வா' வராதே' எதாவது கம்யூனிகேஷேன் உண்டா? வாயில் என்ன கொழுக்கட்டையா?

அடுத்த பந்தில் ராமமூர்த்தியும் அவுட் ஆகி போனான் .

மீண்டும் உதவிக்கு வந்தது வாமனன் தான். சுந்தரமும் வாமனனும் சேர்ந்து ஐம்பது ரன்கள் எடுத்து ஒரு பார்ட்னர்ஷிப் அமைந்த நிலையில்....வில்லன் சோல்கர் பந்தில் வாமனன் - போல்ட்!

நூறுக்கு மூன்று!

அடுத்து வந்தவர்கள் 'ஒன்றுக்கு' போகும் நேரம் கூட கிரீசில் தங்கவில்லை. ஷிவால்கரும் சோல்கரும் மாறி மாறி விக்கெட் எடுத்தார்கள். ஒரு வெங்கிக்கு இரண்டு வெங்கியாய் இருந்தார்கள்.!!

நூற்றி இருபத்தி ஏழுக்கு ஏழு!

நூற்றி முப்பதைந்துக்கு எட்டு!

சுந்தரம் மட்டும் ஒரு முனையில் தன் டாலரில் உள்ள முருகனை பார்த்து தலை ஆட்டினான்....

நூற்றி நாற்பதைந்துக்கு ஒன்பது!!

வெற்றிக்கும் தோல்விக்கும் இடைவெளி ஆறு ரன்களும் ஒரு விக்கெட்டும்.

இனி இருப்பது வெங்கி மட்டும் தான். மட்டையை எந்த பக்கம் பிடிப்பது என்பது கூட தெரியாதவன் போல ஆடுவான். இவனை வைத்து என்ன செய்வது ? இன்னொரு முறை தோல்வியா?..வேண்டாம் முருகா!

வெங்கி வந்தவுடன் சுந்தரம் சொன்னான் "வெங்கி - நான் கூப்பிட்ட உடனே வரதுக்கு ரெடியா இரு...வேற எதுவும் பண்ண வேண்டாம்"

பந்தை சோல்கரிடம் கொடுத்தான் வடேகர்.

சுந்தரத்திற்கு இருதய வேகம் எகிறிக் கொண்டிருந்தது.

முதல் பந்து - டீபென்ஸ்...

இரண்டாம் பந்து...லெக் ஸ்டம்ப் வெளியே குத்தி அடித்து தொடையில்....சோல்கர் அரை மனதாக அவுட் கேட்டான்... - இல்லை, நாட் அவுட்!

மூன்றாவது பந்து...துரத்தி அடித்தான் சுந்தரம்! பறந்தது பந்து ஸ்கொயர் லெக்-ல்! நான்கு ரன்கள்!! அரங்கமே ஆரவாரித்தது! சத்தம் திருவல்லிக்கேணியை தாண்டி கேட்டிருக்கும். வடேகர் முகத்தில் ஈயாடவில்லை.

இன்னும் இரண்டே ரன்கள் வெற்றிக்கு!

சீட்டில் ஒருவர் கூட அமர்திருக்கவில்லை. கை நகங்களை எல்லாம் வேகமாக கடித்து துப்பிக் கொண்டிருந்தார்கள்...இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டார்கள்.....

சுந்தரத்திற்கு வியர்த்து. மட்டை வேறு கையை விட்டு நழுவியது..

இதோ மீண்டும் சோல்கர்.

"காக்க காக்க கனகவேல் காக்க"
நோக்க நோக்க......."

பந்து பிச்சில் பட்டு எழுந்தது. மட்டையில் படாமல் - படாமல் தானா? - விக்கெட் கீபர் கையில் தஞ்சம் அடைந்தது.

சொல்கர் குட்டிகரணம் போட்டு அப்பீல் கேட்டான்! மட்டையை சுற்றி இருந்த ஐவரும் கையைத் தூக்கினர் ஒரு சேர!!

ஆனால் யாருக்கும் தெரியவில்லை பட்டதா இல்லையா என்று - சுந்தரத்தை தவிர. அம்பயர் பட்டச்சர்யா "benefit of doubt goes to batsman" என்று கையை தூக்காமல் இருந்தார்.

அப்பொழுது சுந்தரம் எதிர்பாராமல் ஒன்று செய்தான். யாரும் செய்யத் துணியாத காரியம்!!

மட்டையை மடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. வெங்கி சுந்தரத்தை நோக்கி ஓடினான். சேப்பாக்கமே ஸ்தம்பித்தது. அம்பயர் அவுட் கொடுத்தார். என்ன பைத்தியக்காரத்தனம் இது? அரங்கம் நிசப்தமானது. பாம்பே வீரர்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து கத்தினார்கள்.

உடைந்த கனவுடன் முருகன் டாலரை பார்த்துக் கொண்டே சுந்தரம் .... துக்கம் தொண்டையை அடைத்தது!!

----------------x-------------------x ---------------X-------------------X---------

இமைக்க மறந்து கேட்டுக் கொண்டிருந்த விக்னேஷ், சிறிது நேர மௌனத்திற்கு பிறகு சொன்னான்.

"பரத், நான் ஒன்னு சொல்லவா.? எனக்கு தெரிஞ்சு கொஞ்சம் அளவுக்கு அதிகமா நேர்மையா இருந்துட்டார்னு தான் நான் சொல்லுவேன். எத்தனையோ தரம் தப்பா அவுட் ஆகி போயிருக்கார். இன்னும் ரெண்டு ரன் ல....."

"ஜெயிக்கறது முக்கியம் இல்லை விக்னேஷ் ...எப்படி ஜெயிக்கறோம் அப்படீங்கறது தான் முக்கியம். ஏமாத்தி ஜெயிக்கறது தோக்கறதுக்கு சமம் தான்! அவர் அவுட்னு அவரை தவிர யாருக்கும் தெரியாதுன்னு போகாம இருந்துருக்கலாம். மீதி பேரு பாக்கறாங்க அப்படீங்கறதுக்காக ஒழுங்கா நடந்துக்கறது பேரு நேர்மையா? ...யாரும் பாக்காம இருக்கும் போதும் சரியா நடந்துக்கறது தானே நேர்மை?

எப்பவும் அப்பா அவுட் ஆனா அம்பயருக்காக வெயிட் பண்ண மாட்டார். இப்போ நின்னுருந்தா ஜெயித்திருக்கலாம், ஜெயிக்காம போயிருக்கலாம். ஆனா சூழ்நிலை குற்றவாளியாய் ஆகாம கடைசியில் ஒரு நல்ல மனிதனாய் ஜெயித்தது அப்பா தானே! இந்த நாளிதழ் துண்டு எனக்கு எப்பவும் நினைவு படுத்தறது இது தான். எந்த நிலைமையிலும் நேர்மை தவறக் கூடாது - என் அப்பா போல!"

அது வரை பக்கத்து அறையில் படுத்து கேட்டுக் கொண்டிருந்த சுந்தரத்தின் கண்ணில் நீர் துளித்தது. இருபத்தைந்து வருடம் முன்னர் ஜெயித்தால் பழனி சென்று மொட்டை போடுவதாய் செய்த வேண்டுதலை நிறைவேற்ற முடிவு செய்தார்.

மேலே படத்தில் இருந்த முருகன் அழகாய் அவரை பார்த்து சிரித்தான்!


பி.கு. - உண்மையில் 1972-ல் பாம்பேக்கும் தமிழகத்திற்கும் ரஞ்சி இறுதி போட்டி சேப்பாக்கத்தில் நடந்தது உண்மை. ஆனால் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே!


வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை

4 comments:

இரா. வசந்த குமார். said...

ஆ... புல்லரிக்க வெச்சிட்டீங்க...

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

நன்றி வசந்த குமார். சேப்பாக்கம் மைதானத்துல கொஞ்சம் புல் அதிகமோ? :)

Kumaresan said...

சும்மா சொல்லக்கூடாது..எங்கேயோ ஆரம்பிச்சு.. எங்கேயோ முடிசிருகீங்க..சூப்பர்

Kumaresan said...

சும்மா சொல்லக்கூடாது..எங்கேயோ ஆரம்பிச்சு.. எங்கேயோ முடிசிருகீங்க..சூப்பர் !