Thursday, April 3, 2008

கல்வி என்பது ...

கஞ்சி குடிப்பதற்கும் இலார் - அதன்
காரணம் இவை எனும் அறிவும் இலார்

என்று சொன்னான் பாரதி.

வறுமை மட்டும் அல்ல, அனைத்து சமூக அவலங்களுக்கும் மக்களிடையே விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது தான் காரணம் ; இந்த விழிப்புணர்வைக் கொண்டு வரக் கூடியது கல்வியறிவு மட்டுமே என்று தான் நினைத்திருந்தேன்.

ஆனால் படித்தவர்கள் அதிகம் நிறைந்த நகர்புறத்தில் நடக்கும் சில நிகழ்வுகளை பார்த்தால் இந்த நம்பிக்கை பொய்யோ என்று ஐயம் எழுகிறது. கூடவே பெரிய சோகமும் எழுகிறது. நான் கற்ற கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தாத கல்வியோ? அறிவை அன்றி போட்டியை மட்டுமே பெருக்கும் கல்வியோ?

Education is what is passed on from the notes of the professor to the notes of the students without passing into the minds of either.

என்றான் ஒரு அறிஞன்.

இது வெறும் கேலி மட்டும் இல்லை. பல இடங்களில் உண்மையும் கூட.

நானும் சேலம், ஆரணி, சென்னை, வேலூர் என அந்தந்த ஊர்களில் நன்றாக அறியப்பட்ட பள்ளி கல்லூரிகளில் தான் படித்தேன்.

எனக்குத் தெரிந்து பாடம் என்பதை ஒழுங்காக நடத்தியவர்கள் வெகு சிலரே. அதில் சுவையாக நடத்தியவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

"அம்மா சுட்ட தோசையை ஒண்ணு மேல ஒண்ணா வெச்சு பாருங்க..அது தான் Congruency" என்ற கணக்கு வாத்தியார் இன்னும் நினைவில் இருக்கிறார். "A good teacher teaches; An excellent teacher inspires" என்று பல அருமையான புதிர்களை கொடுத்து பந்தயம் கட்டி ஊக்குவித்த அல்காரிதம் வாத்தியார் நினைவில் இருக்கிறார்.

மற்றவர்களும் சுவாரசியமானவர்கள் தான் - வேறு வகையில் .

சில ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பாடம் நடத்துவதை விட்டு விட்டு தன் சொந்த கதை, சோக கதை எல்லாம் சொல்வார்கள். என் வரலாறு ஆசிரியர் இப்படி தான். கலிங்க படையெடுப்பு நடத்துவதாக சொல்லி விட்டு , அவர் படவேடு போய் வந்த கதையை சொல்லிக் கொண்டு இருப்பார். இதில் பெருமை வேறு அவருக்கு! 'இந்த மாதிரி வேற எந்த வாத்தியாராவது உங்களுக்கு சொல்வாங்களா?..பாடத்த நீங்க வீட்டுல கூட போய் படிச்சுக்கலாம்'...'ஐயா, இதே மாதிரி தன் போன வகுப்புல தமிழ் வாத்தியும், அதுக்கு முன்னாடி இங்க்லீஷ் சாரும் சொன்னாங்க!' - நிலைமை இப்படி ஆயி போச்சே! - மனதில் மட்டுமே நினைத்துக் கொள்வோம்!

ஆசிரியைகள் நேர் எதிர். மிக கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள். இவர்கள் கடமை உணர்ச்சி அசாத்தியமானது. ஒரு நிமிடம் கூட வீணாக்க மாட்டார்கள். என் கெமிஸ்ட்ரி ஆசிர்யை அப்படி தான். வகுப்புக்குள் நுழையும் போதே சோடியம் , மெர்குரி, க்ரோமியம், பாஸ்பரஸ் என எதோ பீரியாடிக் டேபிள் போல் ஒப்பித்துக் கொண்டே வருவார். மணி அடித்து வெளியில் போகும் வரை அந்த பாராயணம் - மக்னீசியம், க்ளோரின், கார்பன்,நைட்ரோஜன். இப்படி இடைவிடாது இவர் மூளைக்கு கொடுத்த அதிர்ச்சியில் மாணவர்கள் கிறுகிறுத்து போய் அடுத்த இரண்டு வகுப்புக்கு அந்த பக்கமே தலை வைக்க மாட்டார்கள்.

இன்னும் சிலர் இருக்கிறார்கள். இவர்கள் சாக்பீசே தொடாமல் நடத்துவார்கள். differential calculus, integral calculus-ஐ யே என் கணித ஆசிரியை அப்படி தான் நடத்தினார்! லிமிட் எக்ஸ் டர்ன்ஸ் டு ஜீரோ, டி எக்ஸ் பை டி ஒய் .... என எதோ வாய்பாடு போல சொல்லி கடைசியில் L.H.S. equals R.H.S என்பார். 'மச்சான்..இப்போ என்ன சொன்னாங்க?' என்பான் என் அப்பாவி நண்பன். பாவம் அவன் கண்ணம்மாபேட்டையில் இருந்து வருவான். நான் என்ன சொல்ல? 'ஒண்ணும் பெருசா இல்ல மச்சான், சோத்தாங் கையும், பீச்சாங்கையும் ஒண்ணு னு சொல்றாங்க!'

சிலர் போர்டு பக்கம் திரும்பி விட்டால் , மணி அடிக்கும் போது மட்டும் தான் மாணவர்கள் பக்கம் திரும்புவார்கள். கையில் பிட்டு பேப்பர் வைத்துக் கொண்டு, போர்டுடன் மட்டும் பேசிக் கொண்டு அதன் மேல் எதையோ எழுதி எழுதி அழித்துக் கொண்டு இருப்பார்கள். அவர் என்ன பாடத்திற்கு ஆசிரியர் என்று கண்டு பிடித்தாலே அது பெரிய விஷயம்.

இப்படி ஆசிரியரில் வகை இருப்பது போல மாணவர்களிலும் உண்டு. கல்லூரியில் இது நன்றாகத் தெரியும்.

தேர்வுக்கு அன்றி அறிவுக்கும் ஆசைக்கும் படிக்கும் மாணவர்கள் - இவர்கள் சொற்பம் தான். இவர்களை வகுப்பில் காண்பது அபூர்வம். பேப்பர் பரசன்டேஷன், செமினார், சிம்போசியம் என்று ஏதாவது செய்துக் கொண்டே இருப்பார்கள். எனக்கு தெரிந்து பெரும்பாலும் இவர்கள் துரோணாசாரியார் கிடைக்கப் பெறாத ஏகலவ்யர்கள் தான்.

முதல் பெஞ்சில் இருக்கும் "சாம்பு மவன்கள்" - இவர்கள் வாத்தியார் வாயிலிருந்து வருவது எல்லாமே வேத வாக்காய் எண்ணி அவர் சொல்லும் ஜோக் முதற்கொண்டு எல்லாவற்றையும் குறிப்பெடுத்துக் கொள்வார்கள். வாத்தியார் தும்முவதை கூட "அச்சூ" என்று எழுதிக் கொண்டாலும் ஒன்றும் ஆச்சர்யப்டுவதற்கில்லை!

அடுத்து நடு பெஞ்சு நாயகர்கள் - இங்கு பல ரோமியோக்கள் தங்களின் ஜூலியெட்களுக்கு எல்லாம் (அடுத்த சந்திப்புக்கான) செய்தி அனுப்புவதிலேயே மும்முரமாய் இருப்பார்கள்! நான் படித்தது காதல் சரித்திரத்தில் எஸ்.எம்.எஸ் காலத்திற்கு முந்தைய காலமாய் அறியப்பட்ட துண்டு சீட்டு காலம்! 'டேய் நவீன்...இத சாந்தி கிட்ட குடுத்து ரம்யாக்கு பாஸ் பண்ண சொல்லு !!' இந்த ராமர்களுக்கும் சீதைகளுக்கும் நடுவே உள்ள அனைவர்களும் அனுமார்கள் தான். இப்போது சீதைகள் எல்லாம் அமெரிக்காவில் செட்டில் ஆகி "லவ குசா" பெற்று விட்டார்கள். ராமர்கள் இங்கே செல்வராகவன் படம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். (அனுமார்கள்?? இன்னமும் அனுமார்கள் தான்!)

கடைசி பெஞ்சு காளைகள் - இதில் சிலர் பார்ப்பதற்கு இரண்டு குழந்தைக்கு தகப்பன் போல் இருப்பார்கள். கவனம் முழுக்க வகுப்புக்கு வெளியே தான். மச்சான் அதோ பாருடா மஞ்சக் காட்டு மைனா! இங்க பாருடா கும்மு பிகுரு!
என ஆச்சர்யக்குறி வாக்கியங்களை அள்ளித் தெளித்துக் கொண்டு இருப்பார்கள்.

ஆக இப்படியாய் போயிற்று மாணவப் பருவம். இதில் (நான்) கற்றது இரண்டு சிட்டிகை கூட இருக்குமா தெரியவில்லை. (இதில் நான் எந்த ரகம்? அது ரகசியம்!)

எப்படியோ தகவல் தொழில்நுட்ப புரட்சியினால் எல்லோருக்கும் எதோ கம்பெனியில் வேலை கிடைத்து கீபோர்ட் தட்டிக் கொண்டு இருக்கிறோம்.

'கல்வி என்பது கசடற கற்றல்
பண்பு என்பது பாடறிந்து ஒழுகல்'

என்று பள்ளிக் கூட மதில்களில் பார்க்கும் பொழுது எல்லாம் சிரிப்பதா அழுவதா என்று தான் எனக்கு புரியவில்லை.

3 comments:

Unknown said...

arputhamana katturai (appadi thaan ithai azhaika vendum endri ninaikiraen... enakku tamizhil epadi script kondu varuvathu endru theriyathathal aangilathil ezhudugiraen.. mannikavum... ungazh tamizh aatral.. ooohoo!!! arivaatral... aaha!!! innum sollaponal nagaichuvai thaan seyya vendiya velaiyai seriana nerathil seriyana idathil seythuvitathu.. kalviyin indraya nilamaiyai eduthu kooruvathudan athai ivalavu azhagagavum menmayudanum kooriyathu paratukuriyadhu!! seri adutha blog poi padikaraen na ippo!! :)

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

மிகைப் புகழ்ச்சியா இல்லை வஞ்சப் புகழ்ச்சியா ? எப்படி இருந்தாலும் நன்றி ! :)

Unknown said...

"இதில் நான் எந்த ரகம்?"
அது எனக்கு தெரியும் :). எனது தமிழ் அறிவை உங்கள் கட்டுரைகளைப் படித்து தான் வளர்க்க போகிறேன்.. so start blogging again!