Wednesday, December 3, 2008

மணிநூபுரதாரீ

ஏர் டெல் சூப்பர் சிங்கர் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொருவரும் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தார்கள். ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருந்தது. சில பாடல்கள் நமக்கு படத்தில் பார்க்கும் பொழுது கூட அத்தனை பிடிக்காது; ஆனால் இந்த மாதிரி நிகழ்ச்சியில் யாராவது பாடி விட்டால் உடனே சட்டென்று பிடித்து விடும். ஜி டிவியின் 'சரிகமப'வில் அமானத் அலி பாடி இருக்கும் "அலுபேலா சஜனு ஆயோரி" கேட்டு இருக்கிறீர்களா ? சரி, ஹிந்திக்கு போவானேன், சூப்பர் சிங்கர் ஜூனியரில் கிருஷ்ணமூர்த்தி பாடி இருக்கும் சிங்காரி சரக்கு நல்ல சரக்கு கேட்டு இருக்கிறீர்களா? அல்லது பாடும் ஆபீஸில் திவ்யா பாடியிருக்கும் "இசையில் தொடங்குதம்மா" பாட்டு? சும்மா பிரித்து மேய்ந்து இருப்பார்கள்.

இப்படி எல்லாம் பாட்டு கேட்டால் எனக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் சங்கீதக் குயில் (காகம், கழுதை எல்லாம் கூட) விழித்துக் கொண்டு விடும். உடனே குளியலறைக்குள் சென்று தாழ் போட்டுக் கொண்டு ஒரு அரை மணி நேரம் பாடினால் தான் என் இசைத் தாகம் அடங்கும். அதற்கு குளியலறை ஏன் ? மற்றவர்களுக்கு நம் இசைக் கடாட்சத்தை அருள வேண்டாம் என்பது ஒன்று. இன்னொன்று கமல் ஒரு முறை சொன்னது போல குளியலறையில் பாடும் பொழுது அந்த ஈரபதத்திற்கும், நம் குரல் அந்த நெருங்கிய சுவர்களில் எதிரொலித்து கேட்பதற்கும், மிக நன்றாக பாடுவதாக தோன்றும். அந்த தோற்ற மயக்கமே கொடுக்கும் ஒரு சந்தோஷ மயக்கம். ஆக இப்படியாக சூப்பர் சிங்கர் பார்த்து விட்டு நான் பாத்ரூம் சிங்கர் ஆகிவிடுவேன்.

என் சரீரம் குச்சி என்றாலும் சாரீரம் கட்டை தான் . அதை வைத்துக் கொண்டு தான் சங்கீத சாகரத்துக்குள் மூழ்கி முத்தெடுப்பது எல்லாம். சங்கீத சாகரம் - நான் பாடினால் சங்கீதம் நாங்கள் சாகிறோம் என்று தான் சொல்லுமோ என்னவோ.

இப்படித் தான் ஒரு முறை, இளையராஜா முதன் முறையாக மேடைக் கச்சேரி போட்டார், தெரியும் தானே? அவர் "நான் தேடும் செவ்வந்தி பூவிது" பாட பாட இங்கு வினுச் சக்கரவர்த்தி தாரை தாரையை கண்ணீர் வார்த்துக் கொண்டிருப்பார். அதை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு நானும் உடனே எழுந்து ஓடினேன். வேறு எங்கு? குளியலறைக்கு தான். சுமார் ஒரு மணி நேரம் அங்கு சாதகம். அதுவும் என் தேவீஈஈ இ இ இ இ இ ஈ ஈ என்று வரும் நடுவில். இந்த தேவியை மட்டும் ரசித்து ருசித்து ஆலாபனை செய்துக் கொண்டிருந்தேன். என் நண்பன் வந்து கதவை தட்டினான்.

"நண்பா, நானும் ஒரு அரை மணி நேரமா பாக்கறேன். அந்த தேவியை இப்படி போட்டு இழுத்தீனா மூதேவி கூட கிட்ட வர மாட்டா என்றான். சரி வெளிய வா, பாத்ரூம எதுக்கு யூஸ் பண்ணனுமோ அதுக்கு நான் பண்ணனும்". ( அது அட்டச்டு பாத்ரூம் என்றும் சொல்ல வேண்டுமா ? )

"ஹும், நானும் பாடி இளகிய மனச கரச்சு அழுகை வர வெக்கணும்னு பாக்கறேன்.. இதை கேட்டு ஒனக்கும் வருதே...சரி சரி..போ போ..."

ஆனால் இதற்காக எல்லாம் நான் மனம் சோர்ந்து விடுவதில்லை. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமனாய் இன்னமும் இந்த சங்கீத வேதாளத்தை பிடிக்க ஓடிக் கொண்டு தான் இருக்கிறேன் - குளியலறைக்கு.

நான் பிறந்தது என்னமோ இத்தனைக்கும் திருவையாற்றில். "இங்கா" சொல்லும் குழந்தையாய் தியாகராஜர் சமாதியின் முன் தான் விளையாடி இருக்கிறேன். இருந்தும் எந்த பாட்டு ஞானமும் வந்ததாய் தெரியவில்லை.

ஆரம்பத்தில் எனக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கும் முயற்சியில் தான் இறங்கினாள் என் அம்மா.

"எங்க என் பின்னாடியே பாடு பாக்கலாம்."

"மணி நூ புரதாரி......ராஜ கோபால..."

"அம்மா என்னமா நீ, சித்தப்பா பேர எல்லாம் சொல்ற...".

"மணிகோ மேதக லோஹித க நீல
மரகத ஜால வாயூஜ ஜாலா....."

அம்மா , நீ அப்பா பேரு சொல்ல மாட்ட தான...ஆனா " ஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம் ".. அப்படீன்னு சுலோகம் சொல்றா மாதிரி அப்பா பேரையும் சொல்லிடுவ தான? தாத்தா பேரையும் இந்த மாதிரி எங்கயாவது நைசா சொல்லிடுவியாம்மா ?

இதென்னடா வம்பு என்று "சரி, நீ பாட்டு கத்துண்டது போறும். ஏந்து போ" என்றாள்.

அப்பாடா நிம்மதி என்று நானும் ஓடி போய் விட்டேன்.

ஒரு முறை மாமா வீட்டிற்கு சென்ற பொது அவர் பெண் பாட்டு வகுப்புக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். நானும் வருகிறேன் என்றேன். பாட்டு தெரியுமா என்றாள்.

ஓ! என்று சொல்லி, 'ஸ்ரீ கன நாத சிந்துரா வர்ண' என்று ஒரு ஆரம்ப வகுப்பின் அரிச்சுவடி பாட்டை ஆரம்பித்து 'லம்போதர லகு மிக ரா' என்று சொல்லும் போதே, நல்ல வேளையாய்,

" சரி , நீயும் என்னோட ரா" என்று அழைத்துக் கொண்டு போனாள். ( அந்த வரிக்கு அடுத்து வரி என்ன என்று எனக்கு தெரியாது! )

"மாமி, அத்தை பையன்."..

"வாடா கொழந்தை, உக்காரு. பேரு என்ன?"

சொன்னேன்.

"நான் பாட பாட இதோ இவாளோட சேர்ந்து நீயும் பாடணும் சரியா?"

தலையை நன்றாக ஆட்டிவிட்டு போய் அமர்ந்தேன்.

"காவிரியும் கொள்ளிடமும் கூடும் இடம் தனிலே
வானளாவ கோவில் கொண்ட அரங்கனே!"

எல்லாரோடு நானும் பாட, என் சத்தத்தில் அனைவரின் குரலும் அடங்கி விட்டது.

"கொழந்தை, அவ்ளோ சத்தமா எல்லாம் அரங்கனை அழைக்க வேண்டாம். மெதுவா பாடு. சரியா?"

வாயைத் திறந்தாலே "பே" என்று தான் வரும். நமக்கு சுருதி பேதமும் தெரியாது, சத்த பேதமும் தெரியாது.

"சரி கொழந்த, இன்னிக்கு நீ இவா எல்லாம் எப்படி பாடறானு கவனி போறும்."

அடுத்த நாளில் இருந்து அரங்கனை வீட்டில் இருந்தே கூப்பிடுவதாய் முடிவு செய்து விட்டேன்.

இப்படியாக போய் விட்டது என் பாட்டு படிப்பு.

கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்வது மட்டுமல்ல; கேட்பதற்கு கூட பிரம்ம பிரயத்தனம் பட வேண்டும். எதோ இம்போசிஷன் கொடுத்து போல ஒவ்வொரு வரியையும் நூறு முறை பாடுவார்கள். அதை கொஞ்சமேனும் கற்றுக் கொள்ளாதவர்களுக்கு கேட்பதே பனிஷ்மென்ட் போல தான். டெஸ்ட் மாட்ச் கிரிகெட் கூட பார்த்து விடலாம். இதற்கு அதையெல்லாம் தாண்டிய அசாத்திய பொறுமை வேண்டும். நமக்கு தான் அது கிஞ்சித்தும் இல்லையே!

கர்நாடக சங்கீதத்தில் எனக்கு பிடித்தது என்றால் தியாகராஜ ஆராதனையின் போது அனைவரும் சேர்ந்து பஞ்ச ரத்ன கீர்த்தனை பாடுவார்கள் பாருங்கள் அது தான். சும்மா விறு விறு வென போகும்! அதிலும் கடைசியில் 'எந்தரோ மகானுபாவுலு' வந்து விட்டால் இதில் ஏபிசிடி தெரியாதவர்கள் கூட தலையை ஆட்டி தொடையில் தட்டி பாட ஆரம்பித்து விடுவார்கள். படு ஜோராக இருக்கும்.

இப்பொழுது அதை எல்லாம் தாண்டி அனைவரையும் போல அமெரிக்கா வந்தாகி விட்டது. இங்கு பிரிட்னி , பியான்சே, ஷகிரா தான் சங்கீத மும்மூர்த்திகள். இப்பொழுது நாம் கேட்பதெல்லாம் உலக இசையாக்கும் - விவால்டி, ரஷ்யன் ஹிப் ஹாப், பிரஞ்சு மெலடி, ஆஸ்திரேலியன் ராக், ஆப்ரிகன் மியூசிக் இப்படியாக பல! ( ஹி ஹி, சில பிரபல எழுத்தாளர்கள் போல எழுத முயன்றேன், அவ்வளவு தான்!)

ஆனால் தமிழிலும் மற்றதிலும் எத்தனையோ பாடல்கள் பிடித்தாலும் பாட்டு முடிந்த மாத்திரத்தில் என்னை இன்றும் குளியலறைக்கு ஓட வைக்கும் திறன் பெரும்பாலும் இளையராஜாவின் இசைக்கு தான் உண்டு.

தியாகராஜரோ திருவையாறு பாட்டு டீச்சரோ உண்டாக்காத ரசனையை எனக்குள் கொண்டு வந்தது இசைஞானி தான். எனக்கு மட்டும் அல்ல, என்னைப் போல் சங்கீதம் அறியாத பல கோடானு கோடி சாமான்யர்களுக்கும் இசைஞானி தான் குரு ; அவர் இசை தான் தோழன்!

5 comments:

selventhiran said...

அருமையான நிகழ்ச்சி. ஒரே ஒரு குறை நடுவர்கள், தொகுப்பாளினி தொடங்கி பங்கேற்பாளர்கள்வரை பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசி 'கான்வெண்ட் காம்பெடிஷன்' மாதிரி ஆக்கி விடுகிறார்கள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பாட்டு டீச்சரோ உண்டாக்காத ரசனையை எனக்குள் கொண்டு வந்தது இசைஞானி தான். ////////////////////


வழிமொழிகிறேன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சில பாடல்கள் நமக்கு படத்தில் பார்க்கும் பொழுது கூட அத்தனை பிடிக்காது; ஆனால் இந்த மாதிரி நிகழ்ச்சியில் யாராவது பாடி விட்டால் உடனே சட்டென்று பிடித்து விடும்.////////////////////////////////





உண்மை

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

// அருமையான நிகழ்ச்சி. ஒரே ஒரு குறை நடுவர்கள், தொகுப்பாளினி தொடங்கி பங்கேற்பாளர்கள்வரை பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே பேசி 'கான்வெண்ட் காம்பெடிஷன்' மாதிரி ஆக்கி விடுகிறார்கள். //

நம் பேச்சு மொழியில் ஆங்கிலம் எவ்வாறு நீக்கமற கலந்து விட்டது என்பதை தான் இது காட்டுகிறது. நன்றி செல்வேந்திரன்.

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

வருகைக்கு நன்றி SUREஷ்.