Monday, October 13, 2008

ஈமெயில் forwards - ஒரு பார்வை

நாள்தோறும் நமது இன்பாக்ஸ் திறந்தால் பல Forwards குவிந்திருக்கும். நம் வெட்டிப் பொழுதைக் கழிக்க பெரிதும் உதவுபவை இவை. இவற்றில் பல ரகம் இருக்கிறது.


"so cute" forwards:

குழந்தைகளில் ஆரம்பித்து நாய்க்குட்டி, பூனைக்குட்டி. பன்றிக்குட்டி, கோழிக்குஞ்சு என எல்லாம் "So cute" சப்ஜெக்டுடன் வரும். இவை எல்லாம் தொண்ணூறு சதவிகிதம் பெண்களால் forward செய்யப்படுபவை.

ஆண்களுக்கு "so cute" forwards: நயந்தாரா, ஷ்ரேயா, இலியானா, த்ரிஷா, அசின் படங்களுடன் வரும் forwards தான்! மலையாள மயில்கள், தெலுங்கு தேச கிளிகள், மும்பை இறக்குமதிகள் என இதற்கு 'எல்லைகளே' இல்லை.

காதல், நட்பு, பாசம் Forwards:

நீ மழையில் நனைந்தால் நான் குடையாய் வருவேன் ; உனக்கு சளி பிடித்தால் நான் விக்ஸாக வருவேன் என வரும் காதல் கவிதைகள். இவை வித விதமான 'ரசிகர்'களால் எழுதப்படும். (நானும் பல முயன்றிருக்கிறேன்)

காதலித்து பார்! கரும்பு கசக்கும்; வேப்பங்காய் இனிக்கும்; உப்பு புளிக்கும்; புளி உவர்க்கும் என்பது போல் பல Forwards பொன்மொழிகளுடன் வரும்.

இதை எல்லாம் படித்து விட்டு அடுத்த சீட்டு அம்பிகாவிற்கு உடனே அல்வா வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து impress பண்ணலாமா என்று தோன்றும். (அவளிடன் ஏற்கனவே இரண்டு மூன்று அல்வா பாக்கெட்டுகள் இருப்பதை பார்த்து விட்டு மனம் சோர்ந்து விடும். எல்லா இடங்களிலும் competition!!)

சில மக்கள் தங்கள் கல்லூரி, ஐடி-அலுவலக காதல் கதைகள் எல்லாம் எழுதுவார்கள் - எவ்வாறு இருவரும் நண்பர்களாய் இருந்தார்கள். வாடா போடா என்று செல்லமாய் பேசிக் கொண்டார்கள். காதலை சொல்லாமல் மனதிலேயே வைத்து துடித்தார்கள். புத்தகம், ஜோக், திரைப்படம், பிறந்தநாள் கேக் , சுற்றுலா என தாங்கள் அன்னியோன்யமாய் பழகிய நாட்களை நினைவு கூர்ந்து கடைசியில் "பட்சி பறந்தது" என்று சோக கீதம் வாசிப்பார்கள். (அல்டர்நேட் எண்டிங்: பறக்க போகும் சமயத்தில் காதலை சொல்லி பிறகு சுபம் சுபம்!)

அடுத்த வகை நட்பு வகையறா - கஞ்சி குடித்த நாட்களில் இருந்து சரக்கு அடித்த நாட்கள் வரை, கடலை கொறித்த நாட்களில் இருந்து கடலை வறுத்த நாட்கள் வரை , நாயர் கடையில் சாயா குடித்தோமே, ஆயா வீட்டில் பாயா குடித்தோமே, பிட்டு அடித்தோமே, பன் தின்னோமே, சைட் அடித்தோமே, பலான படம் பார்த்தோமே இன்று நீ எங்கேயோ, நான் எங்கேயோ என நெஞ்சை நக்கும் வரிகளுடம் வரும் கவிதை, கட்டுரைகள் .

நண்பன் என்பவன் அழுதால் அரவணைப்பான்; விழுந்தால் தூக்கி விடுவான் ; தூங்கினா எழுப்பி விடுவான் என இலக்கணம் சொல்லி இதை உங்களின் நண்பர்கள் பத்து பேருக்கு forward செய்யுங்கள் என்று வரும்.

அடுத்து தாய்ப்பாசம் வகையறா - பத்து மாதம் சுமந்து பெற்றவள் தாய் ; பிறந்தவுடன் பால் கொடுத்தவள் தாய் ; பசித்தால் சோறு போடுபவள் தாய் என நாம் இதுவரை கேள்வியே பட்டிராத பல புது தகவல்களுடன் பாசத்தை பிழியும் வகைகள். பீம் சிங், லிங்குசாமி படங்களுக்கு வசனம் எழுதுபவர்கள் இவற்றை உருவாக்கி இருக்கலாம் என்பது என் ஊகம்.


இவை போக திடுக்கிடும் தகவல்களுடன் மக்களுக்கு "விழிப்புணர்ச்சி" அளிக்கும் Forwards:

தியேட்டரில் எய்ட்ஸ் ஊசி வைப்பார்கள்;
மருத்துவமனை டாய்லெட்டில் கருஞ் சிலந்தி கடித்து கொடிய நோய் வரும்

திவ்யா சிங்-இன் கணவர் நுரையீரல் புற்று நோயால் அவதிப்படுகிறார் அவருக்கு உதவுங்கள் (இந்த ஈமெயில் மட்டும் பத்து வருடங்களாக உலா வருகிறது. அவர் கணவருக்கு புற்று நோய் இல்லை என்பது தான் உண்மை. யாரோ செய்த விஷமம் இது.)

இத்தகைய மெயில்களை forward செய்வதற்கு முன்பு இவை உண்மையா பொய்யா என்று கண்டு பிடிக்க கூகிளில் ஒரு முறை தேடினாலே போதும்; தெரிந்து விடும். ஆனால் செய்ய மாட்டார்கள் நம் மக்கள்!!

ஒழுங்காக அறிந்து கொள்ளாமல் செய்யும் தவறான பிரச்சார forwards:

ஜன கன மன கிங் ஜார்ஜை புகழ்ந்து எழுதியது
தாஜ் மகால் உண்மையில் "தேஜோ மகாலயா" என்ற சிவன் கோயில்

(இவை ஏன் தவறான பிரச்சாரம் என்பது விக்கிபீடியா , கூகிளில் பார்த்தால் தெரிந்து விடும்.)

பல Forwards அருமையான இருக்கும். management lessons, உணவு முறைகள், எளிய உடற்பயிற்சி முறைகள் என்று. ஆனால் சில forward-களில் விஷயமே எங்கிருக்கிறதென்று தெரியாது. ஈமெயில் செயின் அவ்வளவு பெரிதாக இருக்கும். ஐம்பது பக்கங்கள் scroll பண்ண வேண்டி இருக்கும்.

ஈமெயில் எட்டிகெட்(email etiquette) பற்றி பலருக்கு தெரிவதில்லை. இதோ எனக்குத் தெரிந்த சில: (இவை forward சம்மந்தப்பட்டவை மட்டுமே)

1. பல வகை நட்பு வட்டங்களுக்கு ஒரே மெயிலில் forward செய்வதாக இருந்தால் அவர்கள் மெயில் ID-ஐ BCC-ல் போட வேண்டும். (தங்கள் மெயில் ஐடி தங்களுக்கு சம்மந்தம் இல்லாத ஒருவருக்கு தெரிவதில் பலருக்கு சம்மதம் இல்லை.)

2. சப்ஜெக்டில் ஆயிரம் தரம் "fwd:" இருந்தால் அவற்றை நீக்க வேண்டும்

3. வேறு ஒருவர் நமக்கு forward செய்ததை நாம் மற்றவருக்கு அனுப்பும் முன் அந்த ஈமெயில் செயின்-ஐ நீக்கி விட்டு விஷயத்தை மட்டும் வைக்க வேண்டும்.

4. தவறான பிரச்சாரங்களை "Forward" செய்யக் கூடாது.

5. "Hoax mails" எனப்படும் புரளி வகையறாக்களை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். இல்லையென்றால் கூகிளில் தேடி உண்மை என்று அறிந்த பிறகே forward செய்ய வேண்டும்.

உங்களுக்கு மேலும் தெரிந்தால் தெரிவியுங்களேன்!

6 comments:

ARV Loshan said...

சிலவேளைகளில் மகிழ்ச்சியையும் ,பெரும்பாலான வேளைகளில் எரிச்சலையும் ஏற்படுத்துபவை இந்த fwd mails.. நல்ல அலசல். ஆராய்ச்சி.. வாழ்க வந்தியத்தேவன்.

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி லோஷன். நீங்கள் சொல்வது உண்மை தான். இந்த குவியலில் நல்லவற்றை பொறுக்கி படிப்பதே பெரிய காரியமாகி விடுகிறது!

Kumaresan said...

ஆஹா ஆஹா ..வருக வருக

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

நன்றி! நன்றி !! :)

வே.நடனசபாபதி said...

உபயோகமான பதிவு. எனக்கு வரும் தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பும்போது மற்ற ஈமெயில் தொடர் சங்கிலியை நீக்கிவிட்டே அனுப்புகிறேன்.வந்திருக்கும் செய்தி உண்மையானதா அல்லது புரளியா என அறிய கூகிள் செல்ல வேண்டாம். கீழ் கண்ட web சைட்டுக்கு சென்றால் உண்மையை அறியலாம்.
http://www.hoax-slayer.காம்
வே.நடனசபாபதி.

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

மிக்க நன்றி நடனசபாபதி சார்! உண்மையில் 'கூகிளாண்டவர் இருக்க பயமேன்' என்று இருப்பதால் வலைதள முகவரிகளை நினைவில் கொள்ள தனி முயற்சி எடுப்பதில்லை. எல்லாம் சோம்பேறித்தனம் தான்! :)