Wednesday, December 31, 2008

கொஞ்சம் ரம்யா கிருஷ்ணன் + கொஞ்சம் ஜுலியா ராபர்ட்ஸ் = ஒரு நாட்டின் ராணி!

கொஞ்சம் ரம்யா கிருஷ்ணன் சாயல்:



கொஞ்சம் ஜுலியா ராபர்ட்ஸ் சாயல்:



ஒரு நாட்டின் ராணி:



சரி யாரிவர்? எந்த நாட்டு ராணி?



ராஜாக்கள் ராணிகள் மேல் நமக்கு என்றும் ஒரு தனி அபிமானம் உண்டு. பாட்டி சொல்லும் கதைகளாகட்டும், அம்புலிமாமாவின் கதைகளாகட்டும் - "ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம்" என்று தானே கேட்டும் படித்தும் வளர்ந்திருக்கிறோம். கல்கி சாண்டில்யனின் சரித்திர கதைகளின் வெற்றி , வளர்ந்த பின்பும் நமக்கு ராஜா ராணி கதைகளில் இருக்கும் மோகம் கொஞ்சமும் குறையவில்லை என்று தானே பறை சாற்றுகின்றன.(ஒரு வேளை, வளர்ந்த பின்பு நம் மோகம் எல்லாம் சாண்டில்யனின் இளவரசிகளில் மேல் மாறி விடுகிறதோ?!). இப்பொழுது ராணி என்றால் நமக்கு எலிசபெத் பாட்டி மட்டும் தான் நினைவிற்கு வருகிறார். ஹிந்தி படம் பார்பவர்களுக்கு ராணி முகர்ஜி நினைவிற்கு வரலாம்.

ஆனால் நான் சொல்லப் போகும் ராணி ஐ-டெக்ஸ் விளம்பரம் சொல்லும் 'இன்றைய மங்கை'.

இவரைப் பற்றி சிறு குறிப்பு வரைக என்று யாரேனும் உங்களைக் கேட்டால் நீங்கள் கீழ் கண்டவாறு விடை அளிக்கலாம். (அவ்வாறு யாரும் கேட்க வாய்ப்பில்லை என்றாலும் நீங்களே உங்களை கேட்டுக் கொண்டு மேலெந்த தர்க்கமும் செய்யாமல் கீழுள்ள கதையை படியுங்கள்!)

பால காண்டம் முதல் வேலை காண்டம் வரை.

பிறந்தது குவைத். பெற்றோர்கள் பாலஸ்தீனியர்கள். கற்றது மேலைநாட்டுக் கல்வி. கைரோவில் உள்ள அமெரிக்க பல்கலைக் கழகத்தில் பிசினஸ் டிகிரி. வளைகுடா போரின் போது அம்மான் நகரம். சிறிது காலம் சிடி பேங்க், மற்றும் ஆப்பிள் கம்ப்யூட்டரில் வேலை.

காதல் காண்டம் முதல் குழந்தை காண்டம் வரை:

இளவரசர் நடத்தும் ஒரு விருந்துக்கு இவருக்கும் அதிர்ஷ்டவசமாக அழைப்பு கிடைத்தது. அதற்கு பிறகு நிகழ்ந்தது என்ன என்று புத்திசாலி வாசகர்கள் நீங்கள் யூகிக்க மாட்டீர்களா? ஒரு 'கப்புச்சினோ காபி'யின் போது 'கண்ணும் கண்ணும் நோக்கியா'. அதன் விளைவாய் இப்பொழுது நான்கு 'குவா குவா'.

இதற்கு நடுவில் என்ன ஆயிற்று தெரியுமா?

தனக்கு பிறகு அரியணை தன் தம்பிக்கு தான் என்று சொல்லி வைத்திருந்த அந்த நாட்டு மஹாராஜா மரணப் படுக்கையில் மனம் மாற்றிக் கொண்டார். யாரும் எதிர் பார்க்காத விதமாய் அரியணை தன் மகனுக்குத் தான் என்று சொல்லி விட்டு சென்று விட்டார் அந்த புண்ணியவான்.

இளவரசர் ராஜாவானார். இளவரசி ராணியானார். மக்களெல்லாம் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

எல்லாம் சுபம் சுபம் சுபம்.

இதில் பங்கேற்றவர்கள்:

காலம் சென்ற ராஜா - ஹுசைன்
ராஜாவான இளவரசர் - அப்துல்லா
ராணியான இளவரசி - நம் காவியத் தலைவி - இந்த கட்டுரையின் நாயகி - தலைநகரமான அம்மானில் இருந்து ஆட்சி செய்யும் பெண் மான் - ரானியா!

சரி எந்த நாடு என்று கண்டு பிடித்தீர்களா? ஜோர்டான் என்று நீங்கள் சொல்லி இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள்!

சரி இவரைப் பற்றி பேச காரணம் என்ன? இவருக்கு சமீபத்தில் "youtube visionary award" கொடுத்தார்கள்.

எதற்கு?

ஜோர்டான் அரபு நாடுகளில் ஒன்று என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

இந்த அரபு நாடுகள் பற்றிய நம் அபிப்பிராயம் என்ன?

அரபு நாடுகளில் இருப்பவர்கள் அனைவரும் முஸ்லீம்கள். ஆண்கள் எல்லாம் வெள்ளை அங்கி அணிந்து குல்லா போட்டு தாடி வைத்திருப்பார்கள். பெண்கள் எல்லாம் கண்கள் கூட வெளியே தெரியாதபடி பர்தா அணிந்திருப்பார்கள். இதில் பெரும்பானோர் பணக்கார ஷேக்குகள். எண்ணைக் கிணறு வைத்திருப்பார்கள். வேண்டுமளவு பணம், வேண்டுமளவு மனைவிகள். கல்யாணத்திற்கு முன் 'கச முசா' என்றால் கல்லால் அடித்துக் கொல்வார்கள். பெண்கள் கலவிக்கு மட்டுமே ; கல்விக்கு இல்லை என்பது தான் இல்லையா ?

(ஒரு வேலை நீங்கள் சவுதியிலோ, ஐக்கிய அரபு நாடுகளிலோ பணி புரிந்திருந்தால் நீங்கள் அதிகமாக அறிந்திருக்கக் கூடும். இருந்தாலும் அரபு நாடுகள் அனைத்தும் ஒரு போலவே அல்ல. )

ஓரளவுக்கு உலகம் பற்றி அறிந்த நாமே இவ்வாறு தான் கருத்து வைத்திருப்போம் என்றால் அமெரிக்கா தான் உலகம் என்று நினைத்திருக்கும் அமெரிக்கர்கள் என்ன நினைத்திருப்பர்கள்? சி.என்.என்னிலும் fox நியூசிலும் காட்டும் அரைகுறை செய்தியை பார்த்து ஒரு லூசுத்தனமான அபிப்பிராயம் வைத்திருப்பார்கள். இத்தகைய தப்பான எண்ணங்களை களைவதற்கு இவர் ஒரு "youtube channel" ஆரம்பித்தார். அனைவரையும் இஸ்லாத்தை பற்றியும், அரபு நாடுகள் பற்றியும் அங்கு பெண்களின் நிலை பற்றியும் கேள்விகள் கேட்கச் செய்து விளக்கம் அளித்துள்ளார்.

பெண்கள் பள்ளிக்கு செல்வார்களா இல்லை பள்ளிவாசல் மட்டும் தான் செல்வார்களா, ஆண்கள் எத்தனை பேருக்கு குண்டு வைப்பது குலத்தொழில் என்று பல கேள்விகள் கேட்டுள்ளனர் மக்கள்.

அதெல்லாம் நீங்கள் இங்கு காணலாம்.

அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு "லேட் ஷோ வித் லெட்டர்மேன்" தெரியாமல் இருக்காது. அந்த பாணியில் இவர் செய்த ஒரு நக்கல் முகப்பிலேயே இருக்கிறது. அதற்கு போவதற்கு முன் நீங்கள் இங்கேயும் சென்று பார்க்க வேண்டும். கூகுளின் Zeitgeist(2008) என்ற கருத்தரங்கில் இவர் பேசியதையும் கேளுங்கள். ஆரம்பமே அபாரம்.

" ஜோர்டான் என்று கூகிள் செய்தால் 184 மில்லியன் ஹிட்ஸ். UK என்று செய்தால் 358 மில்லியன் ஹிட்ஸ். US என்று செய்தால் 795 மில்லியன் ஹிட்ஸ். ஆனால் கூகிள் என்றே கூகிள் செய்தால் 1.9 பில்லியன் ஹிட்ஸ். இப்பொழுது தெரிகிறது உலகை யார் ஆளுகிறார்கள் என்று! "

(இதை நான் இப்பொழுது செய்து பார்த்தேன். எல்லாம் வேறு வேறாக வருகிறது என்பது தனி செய்தி!)

இவர் பேசியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. (கூடவே இவர் கண்களும்). இவர் பெண் உரிமை பற்றி பேசியது, உலக பொருளாதார கருத்தரங்கில் பேசியது, எவ்வாறு ஜோர்டனை ஆட்சி செய்கிறார் என்பது பற்றி எல்லாம் வலையில் விஷயங்கள் விரவி கிடக்கிறது. கூடவே இவர் மூக்கு ஆப்பரேஷன் செய்து கொண்டாரா, நாக்கு ஆப்பரேஷன் செய்து கொண்டாரா என்பது போன்ற சுவையான தகவல்களும் கிடைக்கலாம். ஆக இதையெல்லாம் பொறுமையாக மொழிமாற்றம் செய்வதற்கு எனக்கு கொஞ்சம் போரடிக்கிறது. இந்த கட்டுரை ஒரு அறிமுகமும், சிறு குறிப்பும் மட்டும் தான். இவர் பேசியது பிடித்திருந்தால் நீங்களே கொஞ்சம் தேடிப் படிக்க மாட்டீர்கள்? அதற்கு ஒரு ஆரம்பமாக இதோ இவரின் வலைத்தளம் இங்கே.

Wednesday, December 3, 2008

மணிநூபுரதாரீ

ஏர் டெல் சூப்பர் சிங்கர் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொருவரும் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தார்கள். ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருந்தது. சில பாடல்கள் நமக்கு படத்தில் பார்க்கும் பொழுது கூட அத்தனை பிடிக்காது; ஆனால் இந்த மாதிரி நிகழ்ச்சியில் யாராவது பாடி விட்டால் உடனே சட்டென்று பிடித்து விடும். ஜி டிவியின் 'சரிகமப'வில் அமானத் அலி பாடி இருக்கும் "அலுபேலா சஜனு ஆயோரி" கேட்டு இருக்கிறீர்களா ? சரி, ஹிந்திக்கு போவானேன், சூப்பர் சிங்கர் ஜூனியரில் கிருஷ்ணமூர்த்தி பாடி இருக்கும் சிங்காரி சரக்கு நல்ல சரக்கு கேட்டு இருக்கிறீர்களா? அல்லது பாடும் ஆபீஸில் திவ்யா பாடியிருக்கும் "இசையில் தொடங்குதம்மா" பாட்டு? சும்மா பிரித்து மேய்ந்து இருப்பார்கள்.

இப்படி எல்லாம் பாட்டு கேட்டால் எனக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் சங்கீதக் குயில் (காகம், கழுதை எல்லாம் கூட) விழித்துக் கொண்டு விடும். உடனே குளியலறைக்குள் சென்று தாழ் போட்டுக் கொண்டு ஒரு அரை மணி நேரம் பாடினால் தான் என் இசைத் தாகம் அடங்கும். அதற்கு குளியலறை ஏன் ? மற்றவர்களுக்கு நம் இசைக் கடாட்சத்தை அருள வேண்டாம் என்பது ஒன்று. இன்னொன்று கமல் ஒரு முறை சொன்னது போல குளியலறையில் பாடும் பொழுது அந்த ஈரபதத்திற்கும், நம் குரல் அந்த நெருங்கிய சுவர்களில் எதிரொலித்து கேட்பதற்கும், மிக நன்றாக பாடுவதாக தோன்றும். அந்த தோற்ற மயக்கமே கொடுக்கும் ஒரு சந்தோஷ மயக்கம். ஆக இப்படியாக சூப்பர் சிங்கர் பார்த்து விட்டு நான் பாத்ரூம் சிங்கர் ஆகிவிடுவேன்.

என் சரீரம் குச்சி என்றாலும் சாரீரம் கட்டை தான் . அதை வைத்துக் கொண்டு தான் சங்கீத சாகரத்துக்குள் மூழ்கி முத்தெடுப்பது எல்லாம். சங்கீத சாகரம் - நான் பாடினால் சங்கீதம் நாங்கள் சாகிறோம் என்று தான் சொல்லுமோ என்னவோ.

இப்படித் தான் ஒரு முறை, இளையராஜா முதன் முறையாக மேடைக் கச்சேரி போட்டார், தெரியும் தானே? அவர் "நான் தேடும் செவ்வந்தி பூவிது" பாட பாட இங்கு வினுச் சக்கரவர்த்தி தாரை தாரையை கண்ணீர் வார்த்துக் கொண்டிருப்பார். அதை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு நானும் உடனே எழுந்து ஓடினேன். வேறு எங்கு? குளியலறைக்கு தான். சுமார் ஒரு மணி நேரம் அங்கு சாதகம். அதுவும் என் தேவீஈஈ இ இ இ இ இ ஈ ஈ என்று வரும் நடுவில். இந்த தேவியை மட்டும் ரசித்து ருசித்து ஆலாபனை செய்துக் கொண்டிருந்தேன். என் நண்பன் வந்து கதவை தட்டினான்.

"நண்பா, நானும் ஒரு அரை மணி நேரமா பாக்கறேன். அந்த தேவியை இப்படி போட்டு இழுத்தீனா மூதேவி கூட கிட்ட வர மாட்டா என்றான். சரி வெளிய வா, பாத்ரூம எதுக்கு யூஸ் பண்ணனுமோ அதுக்கு நான் பண்ணனும்". ( அது அட்டச்டு பாத்ரூம் என்றும் சொல்ல வேண்டுமா ? )

"ஹும், நானும் பாடி இளகிய மனச கரச்சு அழுகை வர வெக்கணும்னு பாக்கறேன்.. இதை கேட்டு ஒனக்கும் வருதே...சரி சரி..போ போ..."

ஆனால் இதற்காக எல்லாம் நான் மனம் சோர்ந்து விடுவதில்லை. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமனாய் இன்னமும் இந்த சங்கீத வேதாளத்தை பிடிக்க ஓடிக் கொண்டு தான் இருக்கிறேன் - குளியலறைக்கு.

நான் பிறந்தது என்னமோ இத்தனைக்கும் திருவையாற்றில். "இங்கா" சொல்லும் குழந்தையாய் தியாகராஜர் சமாதியின் முன் தான் விளையாடி இருக்கிறேன். இருந்தும் எந்த பாட்டு ஞானமும் வந்ததாய் தெரியவில்லை.

ஆரம்பத்தில் எனக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கும் முயற்சியில் தான் இறங்கினாள் என் அம்மா.

"எங்க என் பின்னாடியே பாடு பாக்கலாம்."

"மணி நூ புரதாரி......ராஜ கோபால..."

"அம்மா என்னமா நீ, சித்தப்பா பேர எல்லாம் சொல்ற...".

"மணிகோ மேதக லோஹித க நீல
மரகத ஜால வாயூஜ ஜாலா....."

அம்மா , நீ அப்பா பேரு சொல்ல மாட்ட தான...ஆனா " ஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம் ".. அப்படீன்னு சுலோகம் சொல்றா மாதிரி அப்பா பேரையும் சொல்லிடுவ தான? தாத்தா பேரையும் இந்த மாதிரி எங்கயாவது நைசா சொல்லிடுவியாம்மா ?

இதென்னடா வம்பு என்று "சரி, நீ பாட்டு கத்துண்டது போறும். ஏந்து போ" என்றாள்.

அப்பாடா நிம்மதி என்று நானும் ஓடி போய் விட்டேன்.

ஒரு முறை மாமா வீட்டிற்கு சென்ற பொது அவர் பெண் பாட்டு வகுப்புக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். நானும் வருகிறேன் என்றேன். பாட்டு தெரியுமா என்றாள்.

ஓ! என்று சொல்லி, 'ஸ்ரீ கன நாத சிந்துரா வர்ண' என்று ஒரு ஆரம்ப வகுப்பின் அரிச்சுவடி பாட்டை ஆரம்பித்து 'லம்போதர லகு மிக ரா' என்று சொல்லும் போதே, நல்ல வேளையாய்,

" சரி , நீயும் என்னோட ரா" என்று அழைத்துக் கொண்டு போனாள். ( அந்த வரிக்கு அடுத்து வரி என்ன என்று எனக்கு தெரியாது! )

"மாமி, அத்தை பையன்."..

"வாடா கொழந்தை, உக்காரு. பேரு என்ன?"

சொன்னேன்.

"நான் பாட பாட இதோ இவாளோட சேர்ந்து நீயும் பாடணும் சரியா?"

தலையை நன்றாக ஆட்டிவிட்டு போய் அமர்ந்தேன்.

"காவிரியும் கொள்ளிடமும் கூடும் இடம் தனிலே
வானளாவ கோவில் கொண்ட அரங்கனே!"

எல்லாரோடு நானும் பாட, என் சத்தத்தில் அனைவரின் குரலும் அடங்கி விட்டது.

"கொழந்தை, அவ்ளோ சத்தமா எல்லாம் அரங்கனை அழைக்க வேண்டாம். மெதுவா பாடு. சரியா?"

வாயைத் திறந்தாலே "பே" என்று தான் வரும். நமக்கு சுருதி பேதமும் தெரியாது, சத்த பேதமும் தெரியாது.

"சரி கொழந்த, இன்னிக்கு நீ இவா எல்லாம் எப்படி பாடறானு கவனி போறும்."

அடுத்த நாளில் இருந்து அரங்கனை வீட்டில் இருந்தே கூப்பிடுவதாய் முடிவு செய்து விட்டேன்.

இப்படியாக போய் விட்டது என் பாட்டு படிப்பு.

கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்வது மட்டுமல்ல; கேட்பதற்கு கூட பிரம்ம பிரயத்தனம் பட வேண்டும். எதோ இம்போசிஷன் கொடுத்து போல ஒவ்வொரு வரியையும் நூறு முறை பாடுவார்கள். அதை கொஞ்சமேனும் கற்றுக் கொள்ளாதவர்களுக்கு கேட்பதே பனிஷ்மென்ட் போல தான். டெஸ்ட் மாட்ச் கிரிகெட் கூட பார்த்து விடலாம். இதற்கு அதையெல்லாம் தாண்டிய அசாத்திய பொறுமை வேண்டும். நமக்கு தான் அது கிஞ்சித்தும் இல்லையே!

கர்நாடக சங்கீதத்தில் எனக்கு பிடித்தது என்றால் தியாகராஜ ஆராதனையின் போது அனைவரும் சேர்ந்து பஞ்ச ரத்ன கீர்த்தனை பாடுவார்கள் பாருங்கள் அது தான். சும்மா விறு விறு வென போகும்! அதிலும் கடைசியில் 'எந்தரோ மகானுபாவுலு' வந்து விட்டால் இதில் ஏபிசிடி தெரியாதவர்கள் கூட தலையை ஆட்டி தொடையில் தட்டி பாட ஆரம்பித்து விடுவார்கள். படு ஜோராக இருக்கும்.

இப்பொழுது அதை எல்லாம் தாண்டி அனைவரையும் போல அமெரிக்கா வந்தாகி விட்டது. இங்கு பிரிட்னி , பியான்சே, ஷகிரா தான் சங்கீத மும்மூர்த்திகள். இப்பொழுது நாம் கேட்பதெல்லாம் உலக இசையாக்கும் - விவால்டி, ரஷ்யன் ஹிப் ஹாப், பிரஞ்சு மெலடி, ஆஸ்திரேலியன் ராக், ஆப்ரிகன் மியூசிக் இப்படியாக பல! ( ஹி ஹி, சில பிரபல எழுத்தாளர்கள் போல எழுத முயன்றேன், அவ்வளவு தான்!)

ஆனால் தமிழிலும் மற்றதிலும் எத்தனையோ பாடல்கள் பிடித்தாலும் பாட்டு முடிந்த மாத்திரத்தில் என்னை இன்றும் குளியலறைக்கு ஓட வைக்கும் திறன் பெரும்பாலும் இளையராஜாவின் இசைக்கு தான் உண்டு.

தியாகராஜரோ திருவையாறு பாட்டு டீச்சரோ உண்டாக்காத ரசனையை எனக்குள் கொண்டு வந்தது இசைஞானி தான். எனக்கு மட்டும் அல்ல, என்னைப் போல் சங்கீதம் அறியாத பல கோடானு கோடி சாமான்யர்களுக்கும் இசைஞானி தான் குரு ; அவர் இசை தான் தோழன்!