Friday, July 12, 2013

ஆங்கிலமும், அனுபவமும்

சிறு வயதில்  எனக்கு ஆங்கிலத்தின் பால் பெரிய ஈர்ப்பு இருந்தது இல்லை. பூந்தளிர், ரத்னபாலா, அம்புலிமாமா , கோகுலம், அமர்சித்திரக் கதைகள், லயன்,ராணி,முத்து காமிக்ஸ் என்று படித்ததெல்லாம் தமிழ் ; கிழித்ததெல்லாம்   தமிழ். 

ஐந்தாம் வகுப்பு வரை  சேலத்தில் மரவனேரியில் உள்ள பள்ளிக்கு உடையாப்பட்டியில் இருந்து ஒரு டவுன் பஸ்ஸில் செல்வது வழக்கம். ஒரு முறை பேருந்தில் பக்கத்தில் இருந்த பெரியவர் “what is your name?” என்றார். சொன்னதும், which standard are you in now?” என்றார். இரண்டாம் வகுப்பில் மூன்று ஆங்கில கேள்விக்கு தான் எனக்கு பதில் தெரியும். What is your name, what is your father’s name, what is your mother’s name. இப்படி அவுட் ஆப் போர்ஷனில் இருந்து  கேள்வி கேட்டு விட்டதால் மலங்க மலங்க   விழித்துக் கொண்டிருந்தேன். பெரியவர் உடனே “இங்கிலீஷ் மீடியம் னு சொன்ன.இது கூட தெரியலயே . “எனக்கு தெரிஞ்ச ஒரு பையன். ஒன்னவிட சின்னவன். ஹோலி கிராஸ் ல   பஸ்ட் ஸ்டாண்டர்ட் தான் படிக்கறான். பிரமாதமா இங்கிலீஷ் பேசுவான்” என்று  சிலாகித்தார்.  அருகில் நின்றிருந்த அண்ணனுக்கு மானம் போனது. “டேய், என்ன ஸ்டாண்டர்ட்னு  சொல்லுடா” என்றான். “ஹி இஸ் ஸ்டடியிங் இன் தேர்ட் ஸ்டாண்டர்ட்” - அவனே சொல்லி விட்டு என்னை பார்த்து முறைத்தான். பெரியவர் தனக்கு ஆங்கிலத்தில் பேச ஆள் கிடைத்த சந்தோஷத்தில் மீதி பொது நல விசாரிப்புகளை அவனிடம் நிகழ்த்திக் கொண்டார். நான் ஜன்னல் ஓரத்தில் வைத்த  முகத்தையும் , அதற்கு வெளியே வைத்த பார்வையையும் இறங்கும் வரை அகற்றவில்லை. அது சொல்லிக் கொடுத்த பாடத்தை இன்று வரை மறக்கவும் இல்லை -  குழந்தைகளை கேள்வி கேட்டு மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு மட்டம் தட்டக் கூடாது.

அப்பொழுதெல்லாம் பள்ளி பிரின்சிபால் மேடத்திடம் பேசவேண்டும் என்றால் அரை மணி முன்பாகவே சொல்ல வேண்டியதை  ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அதை ஒரு ஐம்பது தடவை மனனம் செய்துக் கொண்டு போவேன். இந்த கொடுமை சகிக்காமல் என் அப்பாவிடம் ஒரு நாள் “ஏன்பா, எல்லாரும் பேசறதுக்கும் தமிழ்லேர்ந்து இங்க்லீஷ்ல மாத்தணும். புரிஞ்சிக்கறதுக்கும் மனசுக்குள்ள இங்கிலீஷ்லேர்ந்து தமிழ்ல மாத்திக்கணும். இதுக்கு எல்லாரும்  தமிழ்லயே பேசிட்டு போயிடலாமே” என்றேன். 

அப்பாவிற்கு அதிலுள்ள நியாயம் கொஞ்சம் புலப்பட்டிருக்க வேண்டும். 

“இல்லடா , சில பேர் இங்க்லீஷ்லயே புரிஞ்சிப்பாங்களாம்”. 
“அதெப்படி?” 
“அதெல்லாம் அப்படி தான். நீ நன்னா இங்க்லீஷ் பேசினா ஒனக்கு தெரியும்”.
“நீங்களும் இங்கிலீஷ்லேயே தான் புரிஞ்சிபீங்களா”?
“எனக்கு அவ்வளவு தெரியாது. நான் தமிழ்ல தான் புரிஞ்சிப்பேன்”.

தன  இயலாமையை தன் மகனிடம் சொல்வதில் என் தந்தை என்றும் கூச்சப்பட்டதில்லை. தன்னை  சூப்பர் ஹீரோவாக அன்றி  சாதாரண மனிதானாகவே தன்னை தன் மகனுக்கு நிறுவினார். என் விடலை பருவத்திலும், வளர்ந்த பருவத்திலும் தந்தை-மகனுக்கு இடையில் இடைவெளி விழாததற்கு இது ஒரு பெரிய காரணம். 

ஆறாம் வகுப்பில் ஆரணிக்கு  வந்தாகி விட்டது. அந்த ஊரின் பெரிய மேல்நிலைப் பள்ளி இருந்தது பழைய ஆங்கிலேயர் கோட்டையில். படித்தது  பரங்கியனின் குதிரை லாயத்தில் தான்.  இருந்தும் அங்கிருந்த சில ஆங்கில வாத்திகளுக்கு தெரிந்தது புத்தகத்தை படித்து ஆங்கில வாந்தி எடுக்க மட்டுமே. அரைகுறைக்கும் கம்மியாக கால் குறை தெரிந்த எனக்கே சில சமயம் சகிக்கவில்லை.  கூடப் படித்த சேட்டுப் பெண்ணையும், ஒரு டாக்டரின் டாட்டரையும்  சைட் அடிப்பதிலேயே ஆங்கில வகுப்பு சென்றது. 

கேள்வி: சிங் எங்கிருந்து வந்தார்? 
பதில் :பஞ்சாபில் இருந்து வந்தார். 
கேள்வி : எப்படி வந்தார்  ?
பதில்: ட்ரைன் ஏறி வந்தார். 

படித்த ஆங்கிலம் இவ்வளவே.

 எட்டாம் வகுப்பு வரை கூடப் படித்த ஒருவனுக்கு  ஏபிசிடி முழுமையாகத்  தெரியவில்லை. 

“நண்பா, அப்பா என்னடா பண்றாரு?”
“கல் உடைக்கறாரு”
“எவ்ளோடா சம்பாதிப்பாரு”
“ஒரு நாளைக்கு அஞ்சு ரூபா”.

வேறு எந்த ஆங்கில வகுப்பிலும் அறிய முடியாத பல விஷயங்கள்  அன்று விளங்கின.

பத்தாம் வகுப்பில் எல்லாம் அண்ணனுடன் வெட்டு குத்து.   ஏதோ ஒரு சண்டையில் “பாஸ்டர்ட்” என்று திட்டி விட்டான். “கம்முனா கம்மு கம்முனாட்டி கோ” என்ற  மனோரமா வசனம் பேசினாலே கம்னாட்டி என்பது   கெட்ட  வார்த்தை என்று அம்மாவிடம் கோள் சொல்பவன் எப்படி இப்படி ? ஆக்ஸ்போர்ட் அகராதியை எடுத்து அம்மாவிடம் காமித்து “பாத்தியா, ஒன்ன தான்  திட்டிட்டான்”  என்றேன்,  அம்மாவும் பார்த்து விட்டு பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அண்ணனும் “வேற எதுக்கும் பாத்து இங்க்லீஷ் கத்துக்காத, கெட்ட வார்த்தை எல்லாம் பாத்து  தெரிஞ்சுக்கோ” என்றான்.

அதெப்படி, அதே கெட்ட வார்த்தை அவன் தமிழில் சொல்லி இருந்தால் அம்மா இரண்டு நாள் பேசி இருந்திருக்க மாட்டாள். ஆங்கிலம் எப்படி கெட்ட  வார்த்தையை கூட நல்லதாக்குகிறது.

 தமிழில் வார்த்தைக்கு வார்த்தை “ஒத்தா, ஒம்மாள” என்று சொல்பவன்  பொறுக்கி. ஆனால் நேற்று கூட  என்  மேனேஜர் “I’ll go and fix this fucking bug in this fucking script” என்றார். அவர் படித்தவர். பண்பாளர்.
 மார்டின் ஸ்கார்சேஸியின் கேங்ஸ்டர் படங்களை பார்த்து விட்டு இப்பொழுதெல்லாம் எல்லாரும் நாளுக்கு நூற்றியெட்டு தரம் காயத்ரி மந்த்ரம் போல் fuck ,fuck and  fuck...அது கெட்ட  வார்த்தையே இல்லையாம் இப்பொழுது. ஓஷோவின் இந்த  உபன்யாசம் கேட்டதில்லையா நீங்கள்? 

தமிழ் கெட்ட வார்த்தைகள் தான் நாராசம். ஆங்கில கெட்ட வார்த்தைகள் நாகரிகம் என்று புலனானது எனக்கு.

பதினொன்று  பன்னிரெண்டாம் வகுப்புகள் சென்னையில். மோகம் ஆரம்பிக்கும் பருவம், எனக்கும் வந்தது - ஆங்கிலத்தின் மீதும் , அதை நடத்தும் ஆசிரியை மீதும். அதென்னமோ தெரியவில்லை, பதின் பருவத்து பையன்களுக்கு  முதல் காதல் ஆங்கில ஆசிரியை மீது தான் வருகிறது. அவர் சிரிப்பும், ஆங்கிலம் பேசும் ஸ்டைலும் ஈர்த்தன. அவர் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் முந்திக்கொண்டு விடை அளிப்பேன். அவர் கவனம் என் மேல் விழும் முன்பே அவர் பள்ளியை விட்டு சென்று விட்டார். ஒரு வருடம் கழித்து அவர் பள்ளிக்கு வந்த போது  நிறைமாத கர்பிணி.

அழகு  நிலையில்லாதது. அதை ரசிக்கும் மனமும் நிலையில்லாதது தான்.  
வேலூரில் தான் என் கல்லூரிக் காலம். காலில் மாட்டி குதித்துப் போட்டுக் கொண்ட ஜீன்ஸுகளும், கையை லேசாகத் தூக்கினாலே தொப்புளுக்கு மேலே ஏறிக் கொள்ளும்  குட்டி டி-ஷர்டுகளும் அழகாக ஆங்கிலம் பேசி  ஹிந்து கிராஸ்வோர்ட் போட்டுக் கொண்டிருக்கும்  புனித பூமி அது.  அவற்றுடன் ஓரிருமுறை  பேச  தாமஸ் க்ரேயின் எலிஜி, அயன் ராண்ட் எல்லாம் சொல்லி பீட்டர் விடும் அளவிற்கு ஓரளவிற்கு என் ஆங்கிலத்தை தேற்றி இருந்தேன்.  பல ஆசிரியர்கள் பேசும் ஆங்கிலம் எனக்கு நகைப்புக்குரியதாகவே இருந்தது. 

 ஒரு முறை வகுப்பில்  சிவில் இன்ஜினியரிங் நடத்தும் வாத்தியாரின் ஆங்கிலத்தை கண்டு ஒரு பத்மா சேஷாத்ரி நகைத்தான். 
  
அவனை  எழுப்பி கர்ஜித்தார்   - “இந்த மீசை மசுருக்கு வயசு தெரியுமா ஒனக்கு?” 

அது ஒரு வெற்று  அஹங்காரத்தின்  ஒலி அல்ல. அதன் பின் அறிவும் அனுபவமும் இருந்தது,  

“ஒன்னவிட பத்து வயசு இதுக்கு அதிகம். இதுக்கே நீ மரியாதை குடுக்கணும்”.

அவனுக்கு சப்த நாடியும் ஒடுங்கியது. 

ஆங்கிலம் நன்றாக அறியாத மெக்கானிக்கல்  இன்ஜினியரிங் ஆசிரியர் தனக்கு சட்டென்று ஆங்கில வார்த்தை மூலம் நிரப்ப முடியாத இடங்களில் ஜாக்கி சான் போல்  உற்சாகம் பெருக்கோடும் தன்  உடல் மொழி மூலம் நிரப்பிக் கொண்டிருந்தார்,

ஆங்கிலம் என்பதே அறிவல்ல என்று அங்கு  பல கணங்களில் விளங்கியது எனக்கு. 

இப்பொழுது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை. என் அணியில் மட்டும் அமெரிக்கர்கள் , சீனர்கள், ஒரு மத்திய கிழக்கு நாட்டினன், ஒரு ஆப்பிரிக்கன், ஒரு ரஷ்யன், ஒரு தென் அமெரிக்கன் ,  வட  இந்தியர்கள் என அவியலில் போடும் காய்கறிகளாக  பல தேசத்து மக்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த  ஆங்கிலத்தை தங்கள் மொழி வாடையுடன் பேசிக்  கொண்டிருக்கிறார்கள். ஒருவர் பேசுவது சில சமயம் மற்றவர்க்கு புரிவதில்லை. ஆனால் யாரும் யாரையும் கிண்டல் செய்வதில்லை.

 திறமைக்கு தான் மதிப்பு . ஆங்கிலத்திற்கு அல்ல என்ற புரிதலுடன் நானும் என் வேலையை  செய்துக் கொண்டிருக்கிறேன். 

 பின் குறிப்பு: ஆங்கிலத்தின் அவசியத்தை குறைக்க முயற்சிக்கும் கட்டுரை அல்ல இது. நாகர்களிடம் இருந்து சாதுவன் மீண்ட கதை அறிந்த அனைவருக்கும் ஒரு மொழியின் அவசியம் தெரியும். ஆங்கிலம் நவீன உலகின் சாளரம். தன்னம்பிக்கைக்கும், துறை சார் அறிவிற்கும் இன்றியமையாதது. ஆனால் ஆங்கிலம் அளிக்கும் அறிவைக் காட்டிலும் வாழ்க்கை கொடுக்கும் படிப்பு முக்கியமானது. ஆங்கில அறிவு மண்டையை நிறைக்கலாம். ஆனால் அனுபவ அறிவு மனதை நிறைக்கிறது. ஒருவனை மனிதனாக்குகிறது. வாழ்க்கையை கூர்ந்து நோக்குதல் அந்த வகையில் நம் கடமையாகிறது.