Friday, July 12, 2013
ஆங்கிலமும், அனுபவமும்
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) at 12:48 PM 4 comments
Monday, January 18, 2010
ஆயிரத்தில் ஒருவன் - அஜீர்ணம் ஏற்படுத்தும் அரைவேக்காடு!
ஆயிரத்தில் ஒருவன் பற்றி ஆயிரம் பேர் விமர்சனம் எழுதிவிட்டார்கள். ஆயிரத்தி ஒருவனாய் (1001) நானும் இதோ! மற்றவர்களை விட வித்தியாசமான ஒரு விமர்சனத்தை எழுதி விடுவேன் என்றெல்லாம் என்னையும் உங்களையும் ஏமாற்ற விரும்பவில்லை. எழுதி ஒரு ஆண்டாகி விட்டது. சுயமாய் ஒன்றை பற்றி எழுதுவதை விட ஒரு திரைப்பட விமர்சனம் எழுதுவது எளிதாக படுகிறது என்பது தான் முக்கிய காரணம்.
ஒரு படம் ஆனால் இரண்டு கதைகள். இடைவேளைக்கு முன்பு ஒன்று அதன் பின் மற்றொன்று.
இடைவேளைக்கு முன்பு :
ஒரு கட்டுமஸ்தான், இரண்டு கட்டழகிகள், சில கூட்டாளிகள், பல காவலாளிகள் ஒரு தீவுக்கு செல்கின்றனர். கிராபிக்ஸ் இன்னல்கள் கூட்டாளிகளையும் , காவலாளிகளையும் இந்த முக்கிய மூவரிடமிருந்து பிரித்து விட நம் கட்டுமஸ்தானும், கட்டழகிகளும் கட்டிக் கொள்கிறார்கள், ஒட்டிக் கொள்கிறார்கள் பின்னர் என்ன காரணத்தினாலோ வெட்டிக் கொண்டு ஆங்கிலத்தில் வசை பாடிக் கொள்கிறார்கள். இந்த வசை தான் ஹாலிவுட் தரத்திற்கு நிகரான ஒன்று. (தமிழில் முதல் முயற்சி. இதையெல்லாம் நாம் கை தட்டி ஆதரிக்க வேண்டாமா? )
நடுவில் கிராபிக்ஸ் துணையுடன் கோவிந்தா கோவிந்தா வெங்கட்ரமணா கோவிந்தா சாயலில் ஒரு பாடல்!
பின்னர் இவர்கள் இரண்டு மூன்று ரீலுக்கு சுற்றியலைந்து சோழ குடியிருப்பை கண்டறியும் வேளையில் இவர்களுக்கு காதுகளில் இரத்தம் கொட்டி பைத்தியம் வேறு பிடித்து விடுகிறது. இரண்டாம் பகுதியின் இறுதியில் படம் பார்ப்பவர்களுக்கு நடக்கப் போவதை இது முன் கூட்டியே சொல்வது போல் இருக்கிறது. புரிந்துக் கொண்ட சிலர் இடைவேளையிலேயே எஸ்கேப் ஆனார்கள்.
பிடித்த காட்சி:
நடராஜர் சிலை போல் நிழல் விழுவதும் கூடவே ஒலிக்கும் பின்னணி இசையும் அபாரம். இந்த நிழல் சமாசாரம் பல ஆங்கில படங்களில் பார்த்த ஒன்றென்றாலும் இதில் அற்புதமாக வந்துள்ளது. என் தொய்ந்த தோள்களையும், சொருகிய கண்களையும், சரிந்த மனதையும் சற்று தூக்கி நிறுத்தியது. (கொசுறு: நிறுத்தி வைக்கப்படிருந்த கல்லின் இருபுறமும் நிழல் விழும் அதிசயத்தை கார்த்தி எதோ ஒரு டி வி. சேனலில் அறிவியல் துணை கொண்டு விளக்கி கொண்டிருந்தார்).
புரியாத காட்சி:
ஒரு இடத்தில காட்டுவாசிகள் இவர்கள் மேல் தாக்குதல் நடத்துவார்கள். அங்கு அழகம் பெருமாள் அவர்கள் அருகே வந்து தாக்கும் வரை "ஹோல்ட் பயர்" செய்யச் சொல்வார். எதற்கு என்று தான் புரியவில்லை. இந்த இடம் பிரேவ் ஹார்ட் நகல். ஆனால் அங்கு மெல் கிப்சன் சொல்வதற்கு அர்த்தம் இருக்கிறது. இங்கு அபத்தம் தான் இருப்பது போல் தோன்றுகிறது.
இடைவேளைக்குப் பின்:
மூக்கில் சிவப்பு புல்லாக்கு போட்டுக் கொண்டு நாலு பேரை 300 பட ரேஞ்சில் அடித்து விட்டு தன் தலை கவசம் கழற்றி பார்த்திபன் அறிமுகமாகிறார் - குழம்பிய குட்டையை இன்னும் கலக்க!
சோழ நாட்டு குல குருவிற்கு உடம்பெல்லாம் சொறி வந்திருக்கிறது. மக்கள் எல்லாரும் கரி பூசிக் கொண்டிருக்கிறார்கள். (apocalypto!) வெள்ளையும் சொள்ளையுமாய் வரும் ரீமாசென்னிற்கு தான் எல்லா மஞ்சளும் குங்குமமும் போல.
எல்லாரும் செந்தமிழில் பேச வேண்டும் என்பதற்காக எளிய சொற்களுக்கெல்லாம் தமிழ் அகராதியில் கடினமான சொற்களை தேடி பிடித்து பேசுகிறார்கள். பதினெண் கீழ் கணக்கு நூல்களை எழுதிய புலவப் பெருந்தகைகள் கூட இவ்வாறு பேசி இருக்க மாட்டார்கள். ( தமிழில் வர்த்தமானம் என்ற சொல் இல்லை;சமஸ்க்ருதம் என்றான் நண்பன். ஒரு வேளை சோழத் தமிழில் இல்லையென்றால் ஈழத்தமிழில் உண்டோ என்னவோ! அந்த வாசனையில் தான் பேசுகிறார்கள். சோழநாட்டு சின்னம் தானே நம் ஈழ விடுதலைப் புலிகளுக்கும். )
கல்கி , விக்ரமன், சாண்டிலயன் கதைகள் போல ஒரு முத்திரை மோதிரம் கேட்பார்கள் என்று பார்த்தால், ரீமா சென் எப்பொழுது நம்மை ஆடை களையச் சொல்வார்கள் என்று காத்திருந்து 'டமால்' என்று கழற்றி முதுகில் புலிச் சின்னம் பச்சை குத்தி இருப்பதை காட்டுகிறார். முதல் பாதியில் 'மூடு' 'பொத்து' என்றெல்லாம் பேசியவர் பின் பாதியில் ஈறு கெட்ட எதிர் மறை பெயரச்சம் அறிவீரோ என்றெல்லாம் பேசுகிறார்! ஒரு சிறிய இடைவேளையில் செல்வராகவன் தமிழ் சொல்லி கொடுத்து விட்டார் போல.
பின்னர் ரீமாசென் கண் சிமிட்டி, வாள் சுழற்றி, இடை அசைத்து, மார் குலுக்கி, கால் அகற்றி பார்த்திபனை வசியப்படுத்துகிறார். பார்த்திபன் ஏதோ ஆப்பிரிக்க நடனம் எல்லாம் ஆடுகிறார். என் கண்ணுக்கு இவர் சுத்த கோமாளி தான். ரீமாசென்னை கட்டியணைத்து விட்டு பின்னர் கண்ணீர் சிந்துகிறார். நடுவில் gladiator பட அடிமை-அரக்கன் சண்டை காட்சி. ஒரு அட்டை பாறையை சுழற்றி சுழற்றி அரக்கன் எல்லா அடிமைகளையும் சாகடித்து விடுகிறான். நம் பருத்திவீரன் பாறைக்கு டிமிக்கி குடுத்து அரக்கனை அழித்து விடுகிறான்.
பின்னர் கத்தி கம்புக்கும் துப்பாக்கிக்கும் சண்டை. துப்பாக்கி ஜெயிக்கிறது. வென்றவர் தோற்றவரை அவமானப்படுத்துகிறார்கள். தோற்றவர்களின் கண்ணீர் புலம்பல்கள். வென்றவர்களின் காம வெறி ஆட்டங்கள். பின்னர் படம் முடிந்து விட்டதாய் சொல்லி விடுகிறார்கள்.
இதில் ஈழத் தமிழ் சகோதரர்களின் உணர்வும், அவர்கள் அனுபவித்த கொடுமைகளும் வெளிப்படுத்தப்படுவதாய் கூறுகிறார்கள். பாராட்டலாம். மற்றபடி பல விஷயங்கள் படத்திலும் மனதிலும் ஒட்டவில்லை. பின் பாதியில் பல நேரம் காதை பொத்திக் கொண்டு தான் பார்த்தேன். அவ்வளவு இரைச்சல். பல இடங்களில் ஒரே இழுவையாய் பட்டது.
உலுக்கும் காட்சிகள் இரண்டு:
கைக்குழந்தையுடன் வந்த தாய் தன் மார் பிசைய, முலையிலிருந்து பாலிற்கு பதில் ரத்தம் பீச்சும் காட்சி. அப்பப்பா!!
தஞ்சை எட்டியவுடன் அடியேனை ஒரு நொடி நின்னு நினையுங்கோள் என்று தன்னை பலியாக ஒரு தாத்தா தலை அறுத்துக் கொள்ளும் காட்சி - நெகிழ்ச்சி!
முதல் பாதியில் மனதிற்கு ஆறுதல் தருவன - கார்த்தி, ரீமா சென் நடிப்பு, அதுவும் ரீமா சென்னின் சிரிப்பு, பார்வை, கோபம், துப்பாக்கி எடுத்து சுடும் ஸ்டைல் எல்லாம் சூப்பர். இதுவே இரண்டாம் பாதியில் இவருக்கு அளவுக்கு மிஞ்சி போய் விடுகிறது - கூடவே முகம் சுளிக்க வைக்கும் விரச பாவங்களும், விரித்த கால்களும், தெலுங்கு பாட்டு பாடிக்கொண்டு பரதமா, குத்தாட்டமா என்று கண்டறிய முடியாத நளினமின்மையும் - ரீமா , இதெல்லாம் 'நோ' மா என்று சொல்ல வைக்கிறது!
படத்தில் வரும் நிறைகள் தரும் நிறைவை எல்லாம் உடனேயே வரும் குறைகள் குறைத்து விட்டு போகின்றன. உதாரணத்திற்கு, கொடூர சண்டையின் விளைவாய் இருக்கும் பேரழிவுகள் ஊடே மீன் முகத்துடன் மத்ஸ்யாவதார பெருமாள் போல் இருக்கும் பாண்டிய குல தெய்வச் சிலையை சோழ நாட்டு இளவரசன் எடுத்துச் செல்லும் முதல் காட்சி அமைப்பு ஏற்படுத்தும் வியப்பை பின்னால் பேசும் குரல் குலைத்து விடுகிறது. செல்வராகவன் குரலா தெரியவில்லை. லகர, ளகர வேற்றுமை இல்லாமல் அழுத்தமான உச்சரிப்பு இல்லாமல் என்னை நெளிய வைத்தது. என்னமோ தெரியவில்லை. இப்படிஏதாவது கேட்டால், பார்த்தால் எனக்கு இருப்பு கொள்ளாத சங்கடம் ஏற்படுகிறது. தமிழ் உச்சரிப்பு வகுப்பு என்று யாரேனும் பள்ளிகளில் ஆரம்பித்தால் அவர்களுக்கு கோடி புண்ணியமாய் போகும். வைரமுத்துவை பேச வைத்திருக்கலாம்.
தான் பார்த்த படங்களில் தனக்கு பிடித்த விஷயங்களை எல்லாம் ஒரே படத்தில் சொல்ல நினைத்தார் போல இருக்கிறது செல்வராகவன். நான் பத்து பன்னிரண்டு வகுப்பு படித்த காலங்களில் கேட்ட படித்த விஷயங்களை எல்லாம் எங்காவது சொல்லி பெருமை அடித்துக் கொள்ள வேண்டும் போல இருக்கும். அது அங்கு தேவையா , பொருந்துமா என்றெல்லாம் பார்ப்பதில்லை. உதாரணத்திற்கு ஆலிவர் ட்விஸ்ட் பற்றிய கட்டுரையில் நான் இப்படி ஆரம்பித்தேன். "The boy who shared his first name with Hardy of the famous (Stanley) Laurel and (Oliver) Hardy....) அப்பொழுது தான் சில நாட்கள் முன் லாரல் ஹார்டியின் முழு பெயர்களை எங்கயோ படித்திருந்தேன். அதை இங்கு சொல்லி வைத்தேன். இங்கு இது அவசியமா? இது போல தான் அண்ணன் செல்வராகவனும் என்று எனக்கு தோன்றுகிறது.
தேர்வில் அருகில் இருக்கும் மாணவனின் பாதி மட்டுமே தெரியும் விடைத்தாளை பார்த்து தெரிந்த பகுதியை மட்டும் காப்பி அடித்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது படம். பல இடங்களில் முழுமை இல்லை. பார்த்தவர்களுக்கு நிறைவும் இல்லை!
கார்த்தி படம் மாறியும் இன்னும் பருத்தி வீரனாகவே வருகிறார். அண்ட்ரியா அடக்கமாய், அழகம் பெருமாள் ஆரவாரமாய். ரீமா சென் சில இடங்களில் அட்டகாசமாய் சில இடங்களில் அருவருப்பாய்!!
செல்வராகவன் - சொதப்பிய சோதனைக் கூடம்!
ஆயிரத்தில் ஒருவன் - அஜீர்ணம் ஏற்படுத்தும் அரைவேக்காடு !
கமல் கூறியிருப்பார் ஒரு நேர்காணலில். மக்களுக்கு படம் புரியவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று சொல்லி விடுகிறார்கள். இது எனக்கு கோபத்தை அளிக்கிறது என்று. எனக்கு படம் பிடிக்கவில்லை. ஒரு வேளை எனக்கு படம் புரியவில்லையோ என்னமோ. செல்வராகவன் என்னை மன்னிப்பாராக!
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) at 11:10 AM 5 comments
Wednesday, December 31, 2008
கொஞ்சம் ரம்யா கிருஷ்ணன் + கொஞ்சம் ஜுலியா ராபர்ட்ஸ் = ஒரு நாட்டின் ராணி!
கொஞ்சம் ரம்யா கிருஷ்ணன் சாயல்:
கொஞ்சம் ஜுலியா ராபர்ட்ஸ் சாயல்:
ஒரு நாட்டின் ராணி:
சரி யாரிவர்? எந்த நாட்டு ராணி?
ராஜாக்கள் ராணிகள் மேல் நமக்கு என்றும் ஒரு தனி அபிமானம் உண்டு. பாட்டி சொல்லும் கதைகளாகட்டும், அம்புலிமாமாவின் கதைகளாகட்டும் - "ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம்" என்று தானே கேட்டும் படித்தும் வளர்ந்திருக்கிறோம். கல்கி சாண்டில்யனின் சரித்திர கதைகளின் வெற்றி , வளர்ந்த பின்பும் நமக்கு ராஜா ராணி கதைகளில் இருக்கும் மோகம் கொஞ்சமும் குறையவில்லை என்று தானே பறை சாற்றுகின்றன.(ஒரு வேளை, வளர்ந்த பின்பு நம் மோகம் எல்லாம் சாண்டில்யனின் இளவரசிகளில் மேல் மாறி விடுகிறதோ?!). இப்பொழுது ராணி என்றால் நமக்கு எலிசபெத் பாட்டி மட்டும் தான் நினைவிற்கு வருகிறார். ஹிந்தி படம் பார்பவர்களுக்கு ராணி முகர்ஜி நினைவிற்கு வரலாம்.
ஆனால் நான் சொல்லப் போகும் ராணி ஐ-டெக்ஸ் விளம்பரம் சொல்லும் 'இன்றைய மங்கை'.
இவரைப் பற்றி சிறு குறிப்பு வரைக என்று யாரேனும் உங்களைக் கேட்டால் நீங்கள் கீழ் கண்டவாறு விடை அளிக்கலாம். (அவ்வாறு யாரும் கேட்க வாய்ப்பில்லை என்றாலும் நீங்களே உங்களை கேட்டுக் கொண்டு மேலெந்த தர்க்கமும் செய்யாமல் கீழுள்ள கதையை படியுங்கள்!)
பால காண்டம் முதல் வேலை காண்டம் வரை.
பிறந்தது குவைத். பெற்றோர்கள் பாலஸ்தீனியர்கள். கற்றது மேலைநாட்டுக் கல்வி. கைரோவில் உள்ள அமெரிக்க பல்கலைக் கழகத்தில் பிசினஸ் டிகிரி. வளைகுடா போரின் போது அம்மான் நகரம். சிறிது காலம் சிடி பேங்க், மற்றும் ஆப்பிள் கம்ப்யூட்டரில் வேலை.
காதல் காண்டம் முதல் குழந்தை காண்டம் வரை:
இளவரசர் நடத்தும் ஒரு விருந்துக்கு இவருக்கும் அதிர்ஷ்டவசமாக அழைப்பு கிடைத்தது. அதற்கு பிறகு நிகழ்ந்தது என்ன என்று புத்திசாலி வாசகர்கள் நீங்கள் யூகிக்க மாட்டீர்களா? ஒரு 'கப்புச்சினோ காபி'யின் போது 'கண்ணும் கண்ணும் நோக்கியா'. அதன் விளைவாய் இப்பொழுது நான்கு 'குவா குவா'.
இதற்கு நடுவில் என்ன ஆயிற்று தெரியுமா?
தனக்கு பிறகு அரியணை தன் தம்பிக்கு தான் என்று சொல்லி வைத்திருந்த அந்த நாட்டு மஹாராஜா மரணப் படுக்கையில் மனம் மாற்றிக் கொண்டார். யாரும் எதிர் பார்க்காத விதமாய் அரியணை தன் மகனுக்குத் தான் என்று சொல்லி விட்டு சென்று விட்டார் அந்த புண்ணியவான்.
இளவரசர் ராஜாவானார். இளவரசி ராணியானார். மக்களெல்லாம் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
எல்லாம் சுபம் சுபம் சுபம்.
இதில் பங்கேற்றவர்கள்:
காலம் சென்ற ராஜா - ஹுசைன்
ராஜாவான இளவரசர் - அப்துல்லா
ராணியான இளவரசி - நம் காவியத் தலைவி - இந்த கட்டுரையின் நாயகி - தலைநகரமான அம்மானில் இருந்து ஆட்சி செய்யும் பெண் மான் - ரானியா!
சரி எந்த நாடு என்று கண்டு பிடித்தீர்களா? ஜோர்டான் என்று நீங்கள் சொல்லி இருந்தால் உங்களுக்கு பாராட்டுக்கள்!
சரி இவரைப் பற்றி பேச காரணம் என்ன? இவருக்கு சமீபத்தில் "youtube visionary award" கொடுத்தார்கள்.
எதற்கு?
ஜோர்டான் அரபு நாடுகளில் ஒன்று என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.
இந்த அரபு நாடுகள் பற்றிய நம் அபிப்பிராயம் என்ன?
அரபு நாடுகளில் இருப்பவர்கள் அனைவரும் முஸ்லீம்கள். ஆண்கள் எல்லாம் வெள்ளை அங்கி அணிந்து குல்லா போட்டு தாடி வைத்திருப்பார்கள். பெண்கள் எல்லாம் கண்கள் கூட வெளியே தெரியாதபடி பர்தா அணிந்திருப்பார்கள். இதில் பெரும்பானோர் பணக்கார ஷேக்குகள். எண்ணைக் கிணறு வைத்திருப்பார்கள். வேண்டுமளவு பணம், வேண்டுமளவு மனைவிகள். கல்யாணத்திற்கு முன் 'கச முசா' என்றால் கல்லால் அடித்துக் கொல்வார்கள். பெண்கள் கலவிக்கு மட்டுமே ; கல்விக்கு இல்லை என்பது தான் இல்லையா ?
(ஒரு வேலை நீங்கள் சவுதியிலோ, ஐக்கிய அரபு நாடுகளிலோ பணி புரிந்திருந்தால் நீங்கள் அதிகமாக அறிந்திருக்கக் கூடும். இருந்தாலும் அரபு நாடுகள் அனைத்தும் ஒரு போலவே அல்ல. )
ஓரளவுக்கு உலகம் பற்றி அறிந்த நாமே இவ்வாறு தான் கருத்து வைத்திருப்போம் என்றால் அமெரிக்கா தான் உலகம் என்று நினைத்திருக்கும் அமெரிக்கர்கள் என்ன நினைத்திருப்பர்கள்? சி.என்.என்னிலும் fox நியூசிலும் காட்டும் அரைகுறை செய்தியை பார்த்து ஒரு லூசுத்தனமான அபிப்பிராயம் வைத்திருப்பார்கள். இத்தகைய தப்பான எண்ணங்களை களைவதற்கு இவர் ஒரு "youtube channel" ஆரம்பித்தார். அனைவரையும் இஸ்லாத்தை பற்றியும், அரபு நாடுகள் பற்றியும் அங்கு பெண்களின் நிலை பற்றியும் கேள்விகள் கேட்கச் செய்து விளக்கம் அளித்துள்ளார்.
பெண்கள் பள்ளிக்கு செல்வார்களா இல்லை பள்ளிவாசல் மட்டும் தான் செல்வார்களா, ஆண்கள் எத்தனை பேருக்கு குண்டு வைப்பது குலத்தொழில் என்று பல கேள்விகள் கேட்டுள்ளனர் மக்கள்.
அதெல்லாம் நீங்கள் இங்கு காணலாம்.
அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு "லேட் ஷோ வித் லெட்டர்மேன்" தெரியாமல் இருக்காது. அந்த பாணியில் இவர் செய்த ஒரு நக்கல் முகப்பிலேயே இருக்கிறது. அதற்கு போவதற்கு முன் நீங்கள் இங்கேயும் சென்று பார்க்க வேண்டும். கூகுளின் Zeitgeist(2008) என்ற கருத்தரங்கில் இவர் பேசியதையும் கேளுங்கள். ஆரம்பமே அபாரம்.
" ஜோர்டான் என்று கூகிள் செய்தால் 184 மில்லியன் ஹிட்ஸ். UK என்று செய்தால் 358 மில்லியன் ஹிட்ஸ். US என்று செய்தால் 795 மில்லியன் ஹிட்ஸ். ஆனால் கூகிள் என்றே கூகிள் செய்தால் 1.9 பில்லியன் ஹிட்ஸ். இப்பொழுது தெரிகிறது உலகை யார் ஆளுகிறார்கள் என்று! "
(இதை நான் இப்பொழுது செய்து பார்த்தேன். எல்லாம் வேறு வேறாக வருகிறது என்பது தனி செய்தி!)
இவர் பேசியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. (கூடவே இவர் கண்களும்). இவர் பெண் உரிமை பற்றி பேசியது, உலக பொருளாதார கருத்தரங்கில் பேசியது, எவ்வாறு ஜோர்டனை ஆட்சி செய்கிறார் என்பது பற்றி எல்லாம் வலையில் விஷயங்கள் விரவி கிடக்கிறது. கூடவே இவர் மூக்கு ஆப்பரேஷன் செய்து கொண்டாரா, நாக்கு ஆப்பரேஷன் செய்து கொண்டாரா என்பது போன்ற சுவையான தகவல்களும் கிடைக்கலாம். ஆக இதையெல்லாம் பொறுமையாக மொழிமாற்றம் செய்வதற்கு எனக்கு கொஞ்சம் போரடிக்கிறது. இந்த கட்டுரை ஒரு அறிமுகமும், சிறு குறிப்பும் மட்டும் தான். இவர் பேசியது பிடித்திருந்தால் நீங்களே கொஞ்சம் தேடிப் படிக்க மாட்டீர்கள்? அதற்கு ஒரு ஆரம்பமாக இதோ இவரின் வலைத்தளம் இங்கே.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) at 11:03 AM 3 comments
Wednesday, December 3, 2008
மணிநூபுரதாரீ
ஏர் டெல் சூப்பர் சிங்கர் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொருவரும் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தார்கள். ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருந்தது. சில பாடல்கள் நமக்கு படத்தில் பார்க்கும் பொழுது கூட அத்தனை பிடிக்காது; ஆனால் இந்த மாதிரி நிகழ்ச்சியில் யாராவது பாடி விட்டால் உடனே சட்டென்று பிடித்து விடும். ஜி டிவியின் 'சரிகமப'வில் அமானத் அலி பாடி இருக்கும் "அலுபேலா சஜனு ஆயோரி" கேட்டு இருக்கிறீர்களா ? சரி, ஹிந்திக்கு போவானேன், சூப்பர் சிங்கர் ஜூனியரில் கிருஷ்ணமூர்த்தி பாடி இருக்கும் சிங்காரி சரக்கு நல்ல சரக்கு கேட்டு இருக்கிறீர்களா? அல்லது பாடும் ஆபீஸில் திவ்யா பாடியிருக்கும் "இசையில் தொடங்குதம்மா" பாட்டு? சும்மா பிரித்து மேய்ந்து இருப்பார்கள்.
இப்படி எல்லாம் பாட்டு கேட்டால் எனக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் சங்கீதக் குயில் (காகம், கழுதை எல்லாம் கூட) விழித்துக் கொண்டு விடும். உடனே குளியலறைக்குள் சென்று தாழ் போட்டுக் கொண்டு ஒரு அரை மணி நேரம் பாடினால் தான் என் இசைத் தாகம் அடங்கும். அதற்கு குளியலறை ஏன் ? மற்றவர்களுக்கு நம் இசைக் கடாட்சத்தை அருள வேண்டாம் என்பது ஒன்று. இன்னொன்று கமல் ஒரு முறை சொன்னது போல குளியலறையில் பாடும் பொழுது அந்த ஈரபதத்திற்கும், நம் குரல் அந்த நெருங்கிய சுவர்களில் எதிரொலித்து கேட்பதற்கும், மிக நன்றாக பாடுவதாக தோன்றும். அந்த தோற்ற மயக்கமே கொடுக்கும் ஒரு சந்தோஷ மயக்கம். ஆக இப்படியாக சூப்பர் சிங்கர் பார்த்து விட்டு நான் பாத்ரூம் சிங்கர் ஆகிவிடுவேன்.
என் சரீரம் குச்சி என்றாலும் சாரீரம் கட்டை தான் . அதை வைத்துக் கொண்டு தான் சங்கீத சாகரத்துக்குள் மூழ்கி முத்தெடுப்பது எல்லாம். சங்கீத சாகரம் - நான் பாடினால் சங்கீதம் நாங்கள் சாகிறோம் என்று தான் சொல்லுமோ என்னவோ.
இப்படித் தான் ஒரு முறை, இளையராஜா முதன் முறையாக மேடைக் கச்சேரி போட்டார், தெரியும் தானே? அவர் "நான் தேடும் செவ்வந்தி பூவிது" பாட பாட இங்கு வினுச் சக்கரவர்த்தி தாரை தாரையை கண்ணீர் வார்த்துக் கொண்டிருப்பார். அதை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு நானும் உடனே எழுந்து ஓடினேன். வேறு எங்கு? குளியலறைக்கு தான். சுமார் ஒரு மணி நேரம் அங்கு சாதகம். அதுவும் என் தேவீஈஈ இ இ இ இ இ ஈ ஈ என்று வரும் நடுவில். இந்த தேவியை மட்டும் ரசித்து ருசித்து ஆலாபனை செய்துக் கொண்டிருந்தேன். என் நண்பன் வந்து கதவை தட்டினான்.
"நண்பா, நானும் ஒரு அரை மணி நேரமா பாக்கறேன். அந்த தேவியை இப்படி போட்டு இழுத்தீனா மூதேவி கூட கிட்ட வர மாட்டா என்றான். சரி வெளிய வா, பாத்ரூம எதுக்கு யூஸ் பண்ணனுமோ அதுக்கு நான் பண்ணனும்". ( அது அட்டச்டு பாத்ரூம் என்றும் சொல்ல வேண்டுமா ? )
"ஹும், நானும் பாடி இளகிய மனச கரச்சு அழுகை வர வெக்கணும்னு பாக்கறேன்.. இதை கேட்டு ஒனக்கும் வருதே...சரி சரி..போ போ..."
ஆனால் இதற்காக எல்லாம் நான் மனம் சோர்ந்து விடுவதில்லை. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமனாய் இன்னமும் இந்த சங்கீத வேதாளத்தை பிடிக்க ஓடிக் கொண்டு தான் இருக்கிறேன் - குளியலறைக்கு.
நான் பிறந்தது என்னமோ இத்தனைக்கும் திருவையாற்றில். "இங்கா" சொல்லும் குழந்தையாய் தியாகராஜர் சமாதியின் முன் தான் விளையாடி இருக்கிறேன். இருந்தும் எந்த பாட்டு ஞானமும் வந்ததாய் தெரியவில்லை.
ஆரம்பத்தில் எனக்கு பாட்டு சொல்லிக் கொடுக்கும் முயற்சியில் தான் இறங்கினாள் என் அம்மா.
"எங்க என் பின்னாடியே பாடு பாக்கலாம்."
"மணி நூ புரதாரி......ராஜ கோபால..."
"அம்மா என்னமா நீ, சித்தப்பா பேர எல்லாம் சொல்ற...".
"மணிகோ மேதக லோஹித க நீல
மரகத ஜால வாயூஜ ஜாலா....."
அம்மா , நீ அப்பா பேரு சொல்ல மாட்ட தான...ஆனா " ஸ்ரீதரம் மாதவம் கோபிகா வல்லபம் ".. அப்படீன்னு சுலோகம் சொல்றா மாதிரி அப்பா பேரையும் சொல்லிடுவ தான? தாத்தா பேரையும் இந்த மாதிரி எங்கயாவது நைசா சொல்லிடுவியாம்மா ?
இதென்னடா வம்பு என்று "சரி, நீ பாட்டு கத்துண்டது போறும். ஏந்து போ" என்றாள்.
அப்பாடா நிம்மதி என்று நானும் ஓடி போய் விட்டேன்.
ஒரு முறை மாமா வீட்டிற்கு சென்ற பொது அவர் பெண் பாட்டு வகுப்புக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். நானும் வருகிறேன் என்றேன். பாட்டு தெரியுமா என்றாள்.
ஓ! என்று சொல்லி, 'ஸ்ரீ கன நாத சிந்துரா வர்ண' என்று ஒரு ஆரம்ப வகுப்பின் அரிச்சுவடி பாட்டை ஆரம்பித்து 'லம்போதர லகு மிக ரா' என்று சொல்லும் போதே, நல்ல வேளையாய்,
" சரி , நீயும் என்னோட ரா" என்று அழைத்துக் கொண்டு போனாள். ( அந்த வரிக்கு அடுத்து வரி என்ன என்று எனக்கு தெரியாது! )
"மாமி, அத்தை பையன்."..
"வாடா கொழந்தை, உக்காரு. பேரு என்ன?"
சொன்னேன்.
"நான் பாட பாட இதோ இவாளோட சேர்ந்து நீயும் பாடணும் சரியா?"
தலையை நன்றாக ஆட்டிவிட்டு போய் அமர்ந்தேன்.
"காவிரியும் கொள்ளிடமும் கூடும் இடம் தனிலே
வானளாவ கோவில் கொண்ட அரங்கனே!"
எல்லாரோடு நானும் பாட, என் சத்தத்தில் அனைவரின் குரலும் அடங்கி விட்டது.
"கொழந்தை, அவ்ளோ சத்தமா எல்லாம் அரங்கனை அழைக்க வேண்டாம். மெதுவா பாடு. சரியா?"
வாயைத் திறந்தாலே "பே" என்று தான் வரும். நமக்கு சுருதி பேதமும் தெரியாது, சத்த பேதமும் தெரியாது.
"சரி கொழந்த, இன்னிக்கு நீ இவா எல்லாம் எப்படி பாடறானு கவனி போறும்."
அடுத்த நாளில் இருந்து அரங்கனை வீட்டில் இருந்தே கூப்பிடுவதாய் முடிவு செய்து விட்டேன்.
இப்படியாக போய் விட்டது என் பாட்டு படிப்பு.
கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்வது மட்டுமல்ல; கேட்பதற்கு கூட பிரம்ம பிரயத்தனம் பட வேண்டும். எதோ இம்போசிஷன் கொடுத்து போல ஒவ்வொரு வரியையும் நூறு முறை பாடுவார்கள். அதை கொஞ்சமேனும் கற்றுக் கொள்ளாதவர்களுக்கு கேட்பதே பனிஷ்மென்ட் போல தான். டெஸ்ட் மாட்ச் கிரிகெட் கூட பார்த்து விடலாம். இதற்கு அதையெல்லாம் தாண்டிய அசாத்திய பொறுமை வேண்டும். நமக்கு தான் அது கிஞ்சித்தும் இல்லையே!
கர்நாடக சங்கீதத்தில் எனக்கு பிடித்தது என்றால் தியாகராஜ ஆராதனையின் போது அனைவரும் சேர்ந்து பஞ்ச ரத்ன கீர்த்தனை பாடுவார்கள் பாருங்கள் அது தான். சும்மா விறு விறு வென போகும்! அதிலும் கடைசியில் 'எந்தரோ மகானுபாவுலு' வந்து விட்டால் இதில் ஏபிசிடி தெரியாதவர்கள் கூட தலையை ஆட்டி தொடையில் தட்டி பாட ஆரம்பித்து விடுவார்கள். படு ஜோராக இருக்கும்.
இப்பொழுது அதை எல்லாம் தாண்டி அனைவரையும் போல அமெரிக்கா வந்தாகி விட்டது. இங்கு பிரிட்னி , பியான்சே, ஷகிரா தான் சங்கீத மும்மூர்த்திகள். இப்பொழுது நாம் கேட்பதெல்லாம் உலக இசையாக்கும் - விவால்டி, ரஷ்யன் ஹிப் ஹாப், பிரஞ்சு மெலடி, ஆஸ்திரேலியன் ராக், ஆப்ரிகன் மியூசிக் இப்படியாக பல! ( ஹி ஹி, சில பிரபல எழுத்தாளர்கள் போல எழுத முயன்றேன், அவ்வளவு தான்!)
ஆனால் தமிழிலும் மற்றதிலும் எத்தனையோ பாடல்கள் பிடித்தாலும் பாட்டு முடிந்த மாத்திரத்தில் என்னை இன்றும் குளியலறைக்கு ஓட வைக்கும் திறன் பெரும்பாலும் இளையராஜாவின் இசைக்கு தான் உண்டு.
தியாகராஜரோ திருவையாறு பாட்டு டீச்சரோ உண்டாக்காத ரசனையை எனக்குள் கொண்டு வந்தது இசைஞானி தான். எனக்கு மட்டும் அல்ல, என்னைப் போல் சங்கீதம் அறியாத பல கோடானு கோடி சாமான்யர்களுக்கும் இசைஞானி தான் குரு ; அவர் இசை தான் தோழன்!
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) at 5:11 PM 5 comments
Sunday, November 23, 2008
வாரணம் ஆயிரம் - பட விமர்சனம்
நடிகர்களை விடவும் இயக்குனர்களுக்காக படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவன் நான். கில்லி, சுள்ளி, பில்லா, குல்லா எல்லாம் பார்த்தது இல்லை. இது கௌதம் படம் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால் இணையத்தில் ஒரு நல்ல ப்ரிண்டாக தேடிப் பார்த்தேன். (நான் ப்ளோரிடாவில் இருக்கும் இந்த ஊரில் தமிழ் படங்கள் வெளியாகும் வாய்ப்பே இல்லை. என்ன செய்வது? தியேட்டரில் பார்க்கும் அனுபவம் கிடைக்கவில்லை என்றாலும் ஒன்றும் மோசம் இல்லை.)
வாரணம் ஆயிரம் - ஆயிரம் யானைகள். பெயர் கம்பீரமாக இருக்கிறது. ஆனால் படத்திற்கு ஏன் இந்த பெயர் என்று தான் புரியவில்லை. பெயர் பிடித்திருக்கிறது என்று நான் வந்தியதேவன் என்று வைத்துக் கொண்டது போல கெளதம் வைத்திருக்க வேண்டும். பட இறுதியில் பெயர் விளக்கம் சொல்வெதெல்லாம் சப்பைக்கட்டு தான்!
சரி படத்திற்கு வருவோம். ஒரு வரியில் கதை சொல்ல வேண்டும் என்றால் தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு - மகன் பார்வையில்.
தந்தையாகவும் மகனாகவும் சூர்யா. எப்படி இந்தியன் படத்தில் தாத்தா கமல் தான் ஹீரோவோ அது போல இதில் தந்தை சூர்யா தான் உண்மையான ஹீரோ. எல்லா காலங்களிலும் மகனுக்கு உற்சாகம், ஆதரவு, வழி காட்டுதல் தந்து தந்தை என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என்று நம்மை சொல்ல வைக்கிறார். பாச போராட்டங்களோ, மிகை உணர்ச்சி காட்சிகளோ இல்லை என்பது பெரிய ஆறுதல். ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுவது சற்று பணக்கார மற்றும் உயர் மத்திய தர குடும்பங்களுக்கு உரித்தான விஷயம் என்றாலும், இதில் சிம்ரனும், சூர்யாவும் பேசுவது அவ்வளவாக உறுத்தலாக இல்லை. ரசிக்கும்படியாகத் தான் இருக்கிறது. french beard அருமையாக பொருந்துகிறது. Respectability கொண்டு வருகிறது. நடிப்பும், பாடி லாங்வேஜும் சூப்பர். விஜய், அஜித்தை விட சூர்யா மேல் என்ற என் எண்ணம் வலுக்கிறது.
மகன் சூர்யா - ஒல்லி ஸ்டுடென்ட் சூர்யா, தாடிக்கார சூர்யா, பாடி பில்டர் சூர்யா (கட்டுமஸ்தான சிக்ஸ்-பேக் உடம்பு பல இடங்களில் நடித்திருக்கிறது) - எல்லாவற்றுக்கும் மெனக்கட்டு இருக்கிறார் - அதற்காக சபாஷ் சொல்லலாம். நடனத்திலும் நல்ல தேர்ச்சி. காதலிப்பதில் ஆரம்பத்தில் ஒரே வழிசல். போக போக தேறி விடுகிறார். அங்கங்கே மெல்லிய நகைச்சுவை நம்மிடம் புன்னகையை வரவழைக்கிறது. (Woods are lovely, dark and deep! அப்படியா மச்சான்?) (நான் எம் எஸ் படிக்க போறேன். - இந்த அமெரிக்காவுல ரெண்டு வருஷம் சொல்லிக் கொடுப்பாங்களே அதுவா?). கிடார் மீட்டிக் கொண்டு வரும் இடங்களில் தானே பாடி இருப்பார் போல. இன்னும் கொஞ்சம் ப்ராக்டிஸ் செய்திருக்கலாமோ?
சிம்ரன் - தந்தை சூர்யாவின் ஜோடி - அடக்கமான நடிப்பில் மிளிர்கிறார். கல்லூரி கால சிம்ரனின் மேக்-அப் - உடை, சிகை, நகை - எல்லாம் அச்சு அசல் ஓம் சாந்தி ஓம் தீபிகா படுகோனை ஞாபகப்படுத்துகிறது. - (உப செய்தி : தீபிகா தான் இதில் நடிப்பதாக இருந்தார் - ஓம் சாந்தி ஓம்-இல் நடிப்பதற்காக விலகிக் கொண்டார்). வழக்கமான தமிழ் சினிமா அம்மாக்களை போல் அழுகை, அலட்டல், புலம்பல் எல்லாம் இல்லை. ஆனால் ஒரு குறை. இந்த அம்மாக்களுக்கு ஏன் கொஞ்சம் மேக்-அப் போடக் கூடாது? கதா நாயகிகளை விட அழகாக தெரிந்து விடக் கூடாதே என்பதற்காகவா? கதாநாயகிகள் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக ஒரு சொத்தை தங்கையை எங்கிருந்தோ பிடித்துக் கொண்டு வருவார்களே, அது போலவா? ஒரு காலத்தில் கனவுக் கன்னியாக எங்கள் உறக்கத்தில் உலா வந்த தங்கத் தலைவியை கொஞ்சம் அழகான அம்மாவாக காட்டி இருக்கக் கூடாதா?
சமீரா ரெட்டி - நமக்கு பிடித்த கொழுக் மொழுக் வகை. இவரின் சிறப்பம்சம் கண்களா, கன்னமா, உதடுகளா என்று குமுதம் கேள்வி- பதிலுக்கு எழுதிக் கேட்கலாம். சிரிக்கும் போதெல்லாம் "அழகோ அள்ளுதே" என்று சூர்யா போல் பாட வைக்கிறார். ஹிந்தியில் கவர்ச்சி நடிகையாக அறியப்பட்டவருக்கு இதில் படு பாந்தமான ரோல். நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் ஒரு சில இடங்களில் இன்னும் அழகாக இவரைக் காட்டி இருக்க முடியும் என்று தோன்றுகிறது. மேக்-அப்பில் நம்மவர்கள் இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டுமோ? இருந்தாலும் பரவாயில்லை. அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளலாம். கௌதமின் கதாநாயகிகள் கொஞ்சம் நிதானமான வகை என்பது தெரிந்தது தான். இருந்தாலும் இவரை கொஞ்சம் 'துரு துரு' பெண்ணாக காண்பித்து இருக்கலாமோ? பின்னணிக் குரலும் பெரிதாக ஒத்துப் போவதாக தெரியவில்லை. இவராவது பரவாயில்லை. அடுத்த கதாநாயகி ஒரே கரகர பிரியா!
திரைக்கதை:
இதை தான் ஒரு வரியில் முன்பே சொல்லி ஆகி விட்டதே. தந்தை சூர்யா, சிம்ரன் என்று மெச்சூர்டான இரண்டு கதாபாத்திரங்களை படைத்ததற்கு கௌதமை பாராட்டலாம். மகன் சூர்யா, முன் பாதியில் வீடு கட்ட வேண்டும், துரத்தி துரத்தி காதலிக்க வேண்டும் என்றெல்லாம் இலக்கு வைத்திருந்தார். பின் பாதியில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. இதோ, இப்படி வாரணம் ஆயிரம் படத்திற்கு எல்லாம் விமர்சனம் எழுதிக் கொண்டிருக்கும் என்னைப் போல. இரண்டு கதாநாயகிகள் என்பதால் முதல் காதல் கை கூடவில்லை என்று ஊகிப்பது ஒன்றும் கம்ப சூத்திரம் இல்லை. அதற்கு பிறகு போதை, கஞ்சா, கன்றாவி என்று ஒரே இழுவை. அது தான் முடிந்தது என்றால் குழந்தை கடத்தல், ஹிந்திக்கார வில்லன், போரடிக்கும் சண்டைகள் - வேண்டாத 'தம்'மை அடிக்கவும், வராத சிறுநீரை கழிக்கவும் பலர் எழுந்து சென்றிருக்க வேண்டும் என்பது நான் பார்த்த திருட்டு வீடியோவில் நன்றாகவே தெரிந்தது.
இன்னும் எத்தனை காலத்திற்கு தான் மூக்கில் பஞ்சடைத்த பிணமும், திவச காட்சிகளும் காட்டிக் கொண்டிருக்கப் போகிறார்கள்? யதார்த்தம் என்றாலும் அருவருப்பு தான்!
படம் நெடுகிலும் பல நல்ல வசனங்கள் உள்ளன.
"ஒருத்தன் தெருவுல எறங்கினா எல்லாமே கெடைக்கும்".
"கோபம், ஏமாற்றம் எல்லாத்தையும் பாசிடிவ் எனர்ஜியா மாத்தணும்."
"உங்க உடம்ப ரெடி பண்ணுங்க. எல்லா வலியும் போய்டும்."
துணுக்கு:
இந்த படத்தில் யாரும் " I love you" என்று சொல்வதில்லை. "I am in love with you" என்று தான் சொல்கிறார்கள். அப்படி சொல்ல வைப்பதில் என்ன அலாதி பிரியமோ கௌதமிற்கு.
இசை:
ஹாரிஸ் ஜெயராஜ். பாடல்கள் எல்லாம் கேட்டிருப்பீர்கள். சொல்ல வேண்டுமா? முன் தினம் பார்த்தேனே, நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, அடியே கொல்லுதே - இவை எல்லாம் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு நம்மை முணுமுணுக்க வைக்கும். நித்யஸ்ரீ , பாம்பே ஜெயஸ்ரீ-ஐ தொடர்ந்து சுதா ரகுநாதனும் வந்தாகி விட்டது - "அனல் மேலே பனித்துளி" நம்மை மயிலிறகால் வருடுகிறது.
பாடல் வரிகள்:
தாமரை சும்மா கலக்கி இருக்கிறார். சொல்ல வேண்டும் என்றால் எல்லா பாடல்களையும் எழுத வேண்டும். நேரம், அளவு கருதி இரண்டு பாடல்களின் பல்லவி மட்டும் இங்கு !
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சற்றென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை!!
நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை
பெண்ணே நீ காஞ்சனை!!
அனல் மேலே பனித்துளி
அலை பாயும் ஒரு கிளி
மரம் தேடும் மழைத்துளி
இவை தானே இவள் இனி
இமை இரண்டும் தனித் தனி
உறக்கங்கள் உறைபனி
எதற்காக தடை இனி?
படத்திற்கு பலம் சூர்யாவும் பாடல்களும். பலவீனம் திரைக்கதை. இடைவேளை வரை ராஜ நடை போட்ட வாரணங்கள் , பிறகு வாரிக் கொண்டு விழுகின்றன. யானைக்கும் அடி சறுக்கும் என்பது இது தானோ? என் நண்பர்கள் பலருக்கு படம் மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று முயன்று பாருங்கள். ஒன்றும் தப்பில்லை!
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) at 6:40 PM 10 comments
Labels: பட விமர்சனம், வாரணம் ஆயிரம்
Monday, October 13, 2008
ஈமெயில் forwards - ஒரு பார்வை
நாள்தோறும் நமது இன்பாக்ஸ் திறந்தால் பல Forwards குவிந்திருக்கும். நம் வெட்டிப் பொழுதைக் கழிக்க பெரிதும் உதவுபவை இவை. இவற்றில் பல ரகம் இருக்கிறது.
"so cute" forwards:
குழந்தைகளில் ஆரம்பித்து நாய்க்குட்டி, பூனைக்குட்டி. பன்றிக்குட்டி, கோழிக்குஞ்சு என எல்லாம் "So cute" சப்ஜெக்டுடன் வரும். இவை எல்லாம் தொண்ணூறு சதவிகிதம் பெண்களால் forward செய்யப்படுபவை.
ஆண்களுக்கு "so cute" forwards: நயந்தாரா, ஷ்ரேயா, இலியானா, த்ரிஷா, அசின் படங்களுடன் வரும் forwards தான்! மலையாள மயில்கள், தெலுங்கு தேச கிளிகள், மும்பை இறக்குமதிகள் என இதற்கு 'எல்லைகளே' இல்லை.
காதல், நட்பு, பாசம் Forwards:
நீ மழையில் நனைந்தால் நான் குடையாய் வருவேன் ; உனக்கு சளி பிடித்தால் நான் விக்ஸாக வருவேன் என வரும் காதல் கவிதைகள். இவை வித விதமான 'ரசிகர்'களால் எழுதப்படும். (நானும் பல முயன்றிருக்கிறேன்)
காதலித்து பார்! கரும்பு கசக்கும்; வேப்பங்காய் இனிக்கும்; உப்பு புளிக்கும்; புளி உவர்க்கும் என்பது போல் பல Forwards பொன்மொழிகளுடன் வரும்.
இதை எல்லாம் படித்து விட்டு அடுத்த சீட்டு அம்பிகாவிற்கு உடனே அல்வா வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து impress பண்ணலாமா என்று தோன்றும். (அவளிடன் ஏற்கனவே இரண்டு மூன்று அல்வா பாக்கெட்டுகள் இருப்பதை பார்த்து விட்டு மனம் சோர்ந்து விடும். எல்லா இடங்களிலும் competition!!)
சில மக்கள் தங்கள் கல்லூரி, ஐடி-அலுவலக காதல் கதைகள் எல்லாம் எழுதுவார்கள் - எவ்வாறு இருவரும் நண்பர்களாய் இருந்தார்கள். வாடா போடா என்று செல்லமாய் பேசிக் கொண்டார்கள். காதலை சொல்லாமல் மனதிலேயே வைத்து துடித்தார்கள். புத்தகம், ஜோக், திரைப்படம், பிறந்தநாள் கேக் , சுற்றுலா என தாங்கள் அன்னியோன்யமாய் பழகிய நாட்களை நினைவு கூர்ந்து கடைசியில் "பட்சி பறந்தது" என்று சோக கீதம் வாசிப்பார்கள். (அல்டர்நேட் எண்டிங்: பறக்க போகும் சமயத்தில் காதலை சொல்லி பிறகு சுபம் சுபம்!)
அடுத்த வகை நட்பு வகையறா - கஞ்சி குடித்த நாட்களில் இருந்து சரக்கு அடித்த நாட்கள் வரை, கடலை கொறித்த நாட்களில் இருந்து கடலை வறுத்த நாட்கள் வரை , நாயர் கடையில் சாயா குடித்தோமே, ஆயா வீட்டில் பாயா குடித்தோமே, பிட்டு அடித்தோமே, பன் தின்னோமே, சைட் அடித்தோமே, பலான படம் பார்த்தோமே இன்று நீ எங்கேயோ, நான் எங்கேயோ என நெஞ்சை நக்கும் வரிகளுடம் வரும் கவிதை, கட்டுரைகள் .
நண்பன் என்பவன் அழுதால் அரவணைப்பான்; விழுந்தால் தூக்கி விடுவான் ; தூங்கினா எழுப்பி விடுவான் என இலக்கணம் சொல்லி இதை உங்களின் நண்பர்கள் பத்து பேருக்கு forward செய்யுங்கள் என்று வரும்.
அடுத்து தாய்ப்பாசம் வகையறா - பத்து மாதம் சுமந்து பெற்றவள் தாய் ; பிறந்தவுடன் பால் கொடுத்தவள் தாய் ; பசித்தால் சோறு போடுபவள் தாய் என நாம் இதுவரை கேள்வியே பட்டிராத பல புது தகவல்களுடன் பாசத்தை பிழியும் வகைகள். பீம் சிங், லிங்குசாமி படங்களுக்கு வசனம் எழுதுபவர்கள் இவற்றை உருவாக்கி இருக்கலாம் என்பது என் ஊகம்.
இவை போக திடுக்கிடும் தகவல்களுடன் மக்களுக்கு "விழிப்புணர்ச்சி" அளிக்கும் Forwards:
தியேட்டரில் எய்ட்ஸ் ஊசி வைப்பார்கள்;
மருத்துவமனை டாய்லெட்டில் கருஞ் சிலந்தி கடித்து கொடிய நோய் வரும்
திவ்யா சிங்-இன் கணவர் நுரையீரல் புற்று நோயால் அவதிப்படுகிறார் அவருக்கு உதவுங்கள் (இந்த ஈமெயில் மட்டும் பத்து வருடங்களாக உலா வருகிறது. அவர் கணவருக்கு புற்று நோய் இல்லை என்பது தான் உண்மை. யாரோ செய்த விஷமம் இது.)
இத்தகைய மெயில்களை forward செய்வதற்கு முன்பு இவை உண்மையா பொய்யா என்று கண்டு பிடிக்க கூகிளில் ஒரு முறை தேடினாலே போதும்; தெரிந்து விடும். ஆனால் செய்ய மாட்டார்கள் நம் மக்கள்!!
ஒழுங்காக அறிந்து கொள்ளாமல் செய்யும் தவறான பிரச்சார forwards:
ஜன கன மன கிங் ஜார்ஜை புகழ்ந்து எழுதியது
தாஜ் மகால் உண்மையில் "தேஜோ மகாலயா" என்ற சிவன் கோயில்
(இவை ஏன் தவறான பிரச்சாரம் என்பது விக்கிபீடியா , கூகிளில் பார்த்தால் தெரிந்து விடும்.)
பல Forwards அருமையான இருக்கும். management lessons, உணவு முறைகள், எளிய உடற்பயிற்சி முறைகள் என்று. ஆனால் சில forward-களில் விஷயமே எங்கிருக்கிறதென்று தெரியாது. ஈமெயில் செயின் அவ்வளவு பெரிதாக இருக்கும். ஐம்பது பக்கங்கள் scroll பண்ண வேண்டி இருக்கும்.
ஈமெயில் எட்டிகெட்(email etiquette) பற்றி பலருக்கு தெரிவதில்லை. இதோ எனக்குத் தெரிந்த சில: (இவை forward சம்மந்தப்பட்டவை மட்டுமே)
1. பல வகை நட்பு வட்டங்களுக்கு ஒரே மெயிலில் forward செய்வதாக இருந்தால் அவர்கள் மெயில் ID-ஐ BCC-ல் போட வேண்டும். (தங்கள் மெயில் ஐடி தங்களுக்கு சம்மந்தம் இல்லாத ஒருவருக்கு தெரிவதில் பலருக்கு சம்மதம் இல்லை.)
2. சப்ஜெக்டில் ஆயிரம் தரம் "fwd:" இருந்தால் அவற்றை நீக்க வேண்டும்
3. வேறு ஒருவர் நமக்கு forward செய்ததை நாம் மற்றவருக்கு அனுப்பும் முன் அந்த ஈமெயில் செயின்-ஐ நீக்கி விட்டு விஷயத்தை மட்டும் வைக்க வேண்டும்.
4. தவறான பிரச்சாரங்களை "Forward" செய்யக் கூடாது.
5. "Hoax mails" எனப்படும் புரளி வகையறாக்களை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். இல்லையென்றால் கூகிளில் தேடி உண்மை என்று அறிந்த பிறகே forward செய்ய வேண்டும்.
உங்களுக்கு மேலும் தெரிந்தால் தெரிவியுங்களேன்!
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) at 3:29 PM 6 comments
Friday, April 25, 2008
முருகன் கொடுக்காத இரண்டு! (வ.வா.ச. போட்டிக்கு )
"பரத், ரெடியா, பிராக்டீஸ் போலாமா?" விக்னேஷ் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான்.
"அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணு...டிரஸ் சேஞ் பண்ணிட்டு வரேன் !"
சுற்றி பார்த்தான் விக்னேஷ். மேசைக்கு அடியில் இருந்த ஆல்பம் புக் ஒன்று கண்ணில் பட்டது. எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தான். டபுள்யு. ஜி.கிரேஸில் இருந்து ஆரம்பித்து ரஞ்சித் சிங்க்ஜி, ப்ராட்மன், லென் ஹட்டன் , கேரி சோபர்ஸ், கவாஸ்கர் என வரிசையாக படங்கள். இவற்றுக்கு நடுவில் சட்டென்று கண்ணில் பட்டது அந்த தினமணி நாளிதழ் துண்டு. ஏதோ ரஞ்சி இறுதி விளையாட்டை பற்றி எழுதி இருந்தது.
பரத் வந்ததும் கேட்டான்.. " இது என்ன? அப்பா விளையாடினதுனு எடுத்து வெச்சுருக்கியா?"
" அது மட்டும் காரணம் இல்லை... இதுக்கு பின்னாடி ஒரு பெரிய்ய கதை இருக்கு...கேட்டா நீயே நம்ப மாட்ட....."
பரத் சொல்ல ஆரம்பித்தான்.....
----------------x-------------------x ---------------X-----------------X--------X----
1972 - ரஞ்சிக் கோப்பையின் இறுதி போட்டி - பாம்பே அணிக்கும் தமிழகத்திற்கும் இடையே.
பாம்பேயின் இரண்டாம் இன்னிங்க்ஸ் துவங்க இன்னும் ஐந்து நிமிடம் இருந்தது.
தமிழக அணியின் ரஞ்சி காப்டன் சுந்தரம் தன் டீம் மேட்களை கூப்பிட்டான்.
"வாமனா, நீயும் கல்யாணும எப்படி முதல் பதினைந்து ஓவர் எப்படி போட போறீங்க அப்படீங்கரதுல தான் நம்ப வெற்றியே அடங்கி இருக்கு. ஷர்மா,
வடேகர், மங்கட் மூணு பேரும் நேஷனல் லெவல் ப்ளேயர்ஸ். யாரையும் செட்டில் ஆக விடக் கூடாது. இவங்களை எடுத்துட்டா வெங்கி மீதி பேரை காலி பண்ணிடுவான்.
"பெல்லியப்பா, விக்கெட் கீபிங் பண்ற நீ! கோல் கீபிங் இல்ல. பந்தை தடுத்தா போதாது. கேச் பிடிக்கணும். கோட்டை விட்டு நிக்காத...! பர்ஸ்ட் இன்னிங்க்ஸ்ல் ஏற்கனவே நாம்ப பத்து ரன் கம்மி. "
"க்ளோஸ் பீல்டிங்க் எல்லாம் டைட்டா இருக்கணும். சும்மா முன்னாடி நின்னு தூங்கி வழியாதீங்க. புரிஞ்சுதா?
"கமான் பாய்ஸ் , பக்கில் அப் ....!!"
போட்டிக்கு முன்பிருந்தே ஒரேயடியாக தலை கனம் பிடித்து ஆடிக் கொண்டிருந்தார்கள் பாம்பேகாரர்கள்..."தோற்பது என்றால் என்ன என்பது மறந்து விட்டது" என்றார்கள். "தமிழக அணி ஒரு பொருட்டே அல்ல" என்றார்கள். அதுவும் வடேகரும், ஷிவல்கரும் பேசும் அராஜகம் இருக்கிறதே! அதற்காகவே அவர்கள் மூக்கை உடைக்க வேண்டும் என்று நினைத்தான் சுந்தரம்.
முருகன் படம் முன்பு நின்று வேண்டிக் கொண்டான். இந்த திமிர் பிடித்த பாம்பே அணியை வென்று இவர்கள் கொட்டத்தை அடக்க வேண்டும்.....அதற்கு நீ தான் அருள் புரிய வேண்டும்....பழனி வந்து மொட்டை போடுகிறேன் முருகா!!"
ஆட்டம் ஆரம்பித்தது.
முதல் ஐந்து ஓவர்கள் - விக்கெட் எதுவும் விழவில்லை. ஆறாவது ஓவர் - வாமனன் போட்ட முதல் பந்து ஒரு அற்புதம் - டாப் ஸ்பின்னர் போட்ட டாப் ஸ்பின்னர் அது! லெக் ஸ்பின்னுக்காக ஷர்மா விளையாட. பந்து உள்ளே புகுந்து கில்லி எகிறியது.
அடுத்த வந்த வடேகருக்கு வாத்து முட்டை! மீண்டும் வாமன வித்தை!
"நீ வாமனன் இல்லை...திருவிக்கிரமன்".....சுந்தரம் மகிழ்ச்சியில் வாமனனை கட்டிக் கொண்டான்.
இரண்டாம் செஷன் ஆரம்பத்தில் பந்தை வெங்கியிடம் வீசினான் சுந்தரம். இந்த்ரஜாலம் மந்திர ஜாலம் எல்லாம் என்ன என்று அப்போது காட்டினான் வெங்கி. அடுத்த முப்பது ரன்னில் மூன்று விக்கெட் காலி! எல்லாம் வெங்கிக்கே!
எழுவதுக்கு ஏழு!
இன்னும் மங்கட் மட்டும் தேவி தேவி ஆடிக் கொண்டிருந்தான். கடைசியில் அந்த மொக்கை நாயக்குடன் சேர்ந்து நூற்றி இருபது வரை கொண்டு போய் விட்டான். இதற்குள் தமிழகத்தின் விக்கட் வேட்டை அலுவலகங்கள் எல்லாம் பரவி பாதி நாள் மட்டம் போட்டு விட்டு சோற்று மூட்டையுடன் சேப்பாக்கம் ஓடி வந்த விட்டார்கள் பலர்.
கடைசி மூன்று விக்கட்டை முகுந்தன் முடித்தான். அந்த நாள் இறுதியில் பாம்பே நூற்றி நாற்பதுக்கு ஆல் அவுட்! அந்த தலைவலி மங்கட் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நாற்பத்தைந்து எடுத்திருந்தான்.
சுந்தரத்திற்கு ஒரே குதூகலம். இரவெல்லாம் தூக்கமில்லை ! நூற்றி ஐம்பத்தி ஒன்று எடுத்தாலே வெற்றி! நன்றி முருகா!
அடுத்த நாள் - வெள்ளிக்கிழமை விடிந்தது. எட்டு மணிக்கே சேப்பாக்கம் நிறைந்தது!
தமிழக வீரர்கள் அதிர்ஷ்டம் போய் விடும் என்று அதற்கு முந்தின நாள் போட்ட ஆடையை கூட கழற்றவில்லை பந்தின் சுழற்சி அதிகம் இருப்பது நேற்று வெங்கி போடும் போதே தெரிந்திருந்தது. " ஜப்பார், ராமு - பாத்து விளையாடுங்க...பால் ரொம்ப டுர்ன் ஆகுது.
அன் ஈவேன் பௌன்ஸ் வேற.." எச்சரித்து அனுப்பினான் சுந்தரம்.
முப்பது ரன் வரை அருமையாக ஆடிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது எதிர் பாராமல் ரன் எடுப்பதில் குழப்பம். விளைவு ஜப்பார் - ரன் அவுட் !
சுந்தரத்திற்கு எரிச்சல் வந்தது. 'வா' வராதே' எதாவது கம்யூனிகேஷேன் உண்டா? வாயில் என்ன கொழுக்கட்டையா?
அடுத்த பந்தில் ராமமூர்த்தியும் அவுட் ஆகி போனான் .
மீண்டும் உதவிக்கு வந்தது வாமனன் தான். சுந்தரமும் வாமனனும் சேர்ந்து ஐம்பது ரன்கள் எடுத்து ஒரு பார்ட்னர்ஷிப் அமைந்த நிலையில்....வில்லன் சோல்கர் பந்தில் வாமனன் - போல்ட்!
நூறுக்கு மூன்று!
அடுத்து வந்தவர்கள் 'ஒன்றுக்கு' போகும் நேரம் கூட கிரீசில் தங்கவில்லை. ஷிவால்கரும் சோல்கரும் மாறி மாறி விக்கெட் எடுத்தார்கள். ஒரு வெங்கிக்கு இரண்டு வெங்கியாய் இருந்தார்கள்.!!
நூற்றி இருபத்தி ஏழுக்கு ஏழு!
நூற்றி முப்பதைந்துக்கு எட்டு!
சுந்தரம் மட்டும் ஒரு முனையில் தன் டாலரில் உள்ள முருகனை பார்த்து தலை ஆட்டினான்....
நூற்றி நாற்பதைந்துக்கு ஒன்பது!!
வெற்றிக்கும் தோல்விக்கும் இடைவெளி ஆறு ரன்களும் ஒரு விக்கெட்டும்.
இனி இருப்பது வெங்கி மட்டும் தான். மட்டையை எந்த பக்கம் பிடிப்பது என்பது கூட தெரியாதவன் போல ஆடுவான். இவனை வைத்து என்ன செய்வது ? இன்னொரு முறை தோல்வியா?..வேண்டாம் முருகா!
வெங்கி வந்தவுடன் சுந்தரம் சொன்னான் "வெங்கி - நான் கூப்பிட்ட உடனே வரதுக்கு ரெடியா இரு...வேற எதுவும் பண்ண வேண்டாம்"
பந்தை சோல்கரிடம் கொடுத்தான் வடேகர்.
சுந்தரத்திற்கு இருதய வேகம் எகிறிக் கொண்டிருந்தது.
முதல் பந்து - டீபென்ஸ்...
இரண்டாம் பந்து...லெக் ஸ்டம்ப் வெளியே குத்தி அடித்து தொடையில்....சோல்கர் அரை மனதாக அவுட் கேட்டான்... - இல்லை, நாட் அவுட்!
மூன்றாவது பந்து...துரத்தி அடித்தான் சுந்தரம்! பறந்தது பந்து ஸ்கொயர் லெக்-ல்! நான்கு ரன்கள்!! அரங்கமே ஆரவாரித்தது! சத்தம் திருவல்லிக்கேணியை தாண்டி கேட்டிருக்கும். வடேகர் முகத்தில் ஈயாடவில்லை.
இன்னும் இரண்டே ரன்கள் வெற்றிக்கு!
சீட்டில் ஒருவர் கூட அமர்திருக்கவில்லை. கை நகங்களை எல்லாம் வேகமாக கடித்து துப்பிக் கொண்டிருந்தார்கள்...இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டார்கள்.....
சுந்தரத்திற்கு வியர்த்து. மட்டை வேறு கையை விட்டு நழுவியது..
இதோ மீண்டும் சோல்கர்.
"காக்க காக்க கனகவேல் காக்க"
நோக்க நோக்க......."
பந்து பிச்சில் பட்டு எழுந்தது. மட்டையில் படாமல் - படாமல் தானா? - விக்கெட் கீபர் கையில் தஞ்சம் அடைந்தது.
சொல்கர் குட்டிகரணம் போட்டு அப்பீல் கேட்டான்! மட்டையை சுற்றி இருந்த ஐவரும் கையைத் தூக்கினர் ஒரு சேர!!
ஆனால் யாருக்கும் தெரியவில்லை பட்டதா இல்லையா என்று - சுந்தரத்தை தவிர. அம்பயர் பட்டச்சர்யா "benefit of doubt goes to batsman" என்று கையை தூக்காமல் இருந்தார்.
அப்பொழுது சுந்தரம் எதிர்பாராமல் ஒன்று செய்தான். யாரும் செய்யத் துணியாத காரியம்!!
மட்டையை மடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. வெங்கி சுந்தரத்தை நோக்கி ஓடினான். சேப்பாக்கமே ஸ்தம்பித்தது. அம்பயர் அவுட் கொடுத்தார். என்ன பைத்தியக்காரத்தனம் இது? அரங்கம் நிசப்தமானது. பாம்பே வீரர்கள் ஒருவர் மேல் ஒருவர் விழுந்து கத்தினார்கள்.
உடைந்த கனவுடன் முருகன் டாலரை பார்த்துக் கொண்டே சுந்தரம் .... துக்கம் தொண்டையை அடைத்தது!!
----------------x-------------------x ---------------X-------------------X---------
இமைக்க மறந்து கேட்டுக் கொண்டிருந்த விக்னேஷ், சிறிது நேர மௌனத்திற்கு பிறகு சொன்னான்.
"பரத், நான் ஒன்னு சொல்லவா.? எனக்கு தெரிஞ்சு கொஞ்சம் அளவுக்கு அதிகமா நேர்மையா இருந்துட்டார்னு தான் நான் சொல்லுவேன். எத்தனையோ தரம் தப்பா அவுட் ஆகி போயிருக்கார். இன்னும் ரெண்டு ரன் ல....."
"ஜெயிக்கறது முக்கியம் இல்லை விக்னேஷ் ...எப்படி ஜெயிக்கறோம் அப்படீங்கறது தான் முக்கியம். ஏமாத்தி ஜெயிக்கறது தோக்கறதுக்கு சமம் தான்! அவர் அவுட்னு அவரை தவிர யாருக்கும் தெரியாதுன்னு போகாம இருந்துருக்கலாம். மீதி பேரு பாக்கறாங்க அப்படீங்கறதுக்காக ஒழுங்கா நடந்துக்கறது பேரு நேர்மையா? ...யாரும் பாக்காம இருக்கும் போதும் சரியா நடந்துக்கறது தானே நேர்மை?
எப்பவும் அப்பா அவுட் ஆனா அம்பயருக்காக வெயிட் பண்ண மாட்டார். இப்போ நின்னுருந்தா ஜெயித்திருக்கலாம், ஜெயிக்காம போயிருக்கலாம். ஆனா சூழ்நிலை குற்றவாளியாய் ஆகாம கடைசியில் ஒரு நல்ல மனிதனாய் ஜெயித்தது அப்பா தானே! இந்த நாளிதழ் துண்டு எனக்கு எப்பவும் நினைவு படுத்தறது இது தான். எந்த நிலைமையிலும் நேர்மை தவறக் கூடாது - என் அப்பா போல!"
அது வரை பக்கத்து அறையில் படுத்து கேட்டுக் கொண்டிருந்த சுந்தரத்தின் கண்ணில் நீர் துளித்தது. இருபத்தைந்து வருடம் முன்னர் ஜெயித்தால் பழனி சென்று மொட்டை போடுவதாய் செய்த வேண்டுதலை நிறைவேற்ற முடிவு செய்தார்.
மேலே படத்தில் இருந்த முருகன் அழகாய் அவரை பார்த்து சிரித்தான்!
பி.கு. - உண்மையில் 1972-ல் பாம்பேக்கும் தமிழகத்திற்கும் ரஞ்சி இறுதி போட்டி சேப்பாக்கத்தில் நடந்தது உண்மை. ஆனால் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே!
வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழா போட்டிக்கான இடுகை
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) at 9:00 PM 4 comments