Friday, January 25, 2008

ஹாரி பாட்டரும் வாண்டு மாமாவும்

எனக்கு வீட்டிலிருந்து அலுவலகம் செல்ல ஒரு மணி நேரம் ரயில் பிரயாணம் செய்தாக வேண்டும். அது எனக்கு பிடித்தமானதும் கூட. ஏறி அமர்ந்ததும் தூக்கம் கண்களை தொற்றிக் கொள்ளும். அந்த நித்ரானுபவம் இருக்கிறதே...ஆஹா!!

ஆனால் சுற்றி அமர்ந்து வரும் சக பிரயாணிகள் ஏதாவது ஒரு புத்தகத்தை படித்து கொண்டு இருப்பார்கள். அப்படி விழுந்து விழுந்து என்ன தான் படிக்கிறார்கள் என்று பார்த்தால் அதிகம் தென்பட்டது இந்த ஹாரி பாட்டர் புத்தகம் தான். அதை எழுதிய அம்மணி கஞ்சிக்கு சிங்கி அடித்துக் கொண்டிருந்தாராம். இப்பொழுது இங்கிலாந்து ராணியை விட அதிகம் சொத்து வைத்திருப்பார் என்று நினைக்கிறேன்.

நானும் அந்த படம் எல்லாம் பார்த்தேன். சுமார் ரகம் தான். (புத்தகம் தான் அருமை என்கிறார்கள் பாட்டர் விசிறிகள்). நான் சிறிய வயதில் படித்து வளர்ந்ததெல்லாம் வாண்டு மாமா, பூவண்ணன், அகிலன் போன்றோர் புத்தகங்கள் தான். அதிலும் வாண்டு மாமாவை மிஞ்ச ஆள் கிடையாது.

திருவையாற்றில் தாத்தா வீட்டில் ஒரு பெரிய மர அலமாரி நிறைய புத்தகங்கள் இருக்கும். கல்கி, சாண்டில்யன், விக்ரமன் மற்றும் இன்ன பிற தடி தடியான வரலாற்று புதினங்களிடையே நம் வாண்டு மாமாவும் இருப்பார். மூன்று மந்திரவாதிகள், கரடி கோட்டை போன்ற படக்கதைகள் எத்தனை முறை படித்தாலும் அலுப்பதில்லை. எப்பொழுது போனாலும் அதை படித்து முடித்து விட்டு தான் மற்ற புத்தகங்கள் எல்லாம். அவை அளித்த மகிழ்ச்சி பொன்னியின் செல்வனோ, யவன ராணியோ கொடுத்ததா என்பது சந்தேகமே! வாண்டு மாமாவிற்கு எப்படி சிறுவர்களின் நாடி பிடித்து எழுத தெரிந்தது என்று வியந்தது உண்டு.

மூன்று மந்திரவாதிகளை எடுத்துக் கொள்ளுங்கள். கட்டையன், குட்டையன், நெட்டையன் என்று மூன்று பேர். கட்டையன் கண்ணை திறந்தாலே பார்ப்பதெல்லாம் எரித்து விடுவான். குட்டையன் வாயால் ஊதியே ஒரு புயல் காற்று உருவாக்கி விடுவான். நெட்டையன் ஒரு அடி எடுத்து வைத்தாலே சென்னையிலிருந்து செங்கல்பட்டு போய் விடுவான். இந்த மூன்று பேரை வைத்துக் கொண்டு மந்திரவாதியின் பிடியில் சிக்கி இருக்கும் அழகான இளவரசியை மீட்க கிளம்பும் இளவரசன் கதை தான் மூன்று மந்திரவாதிகள். இதை படங்களுடன் யோசித்து பாருங்கள். யாருக்கு தான் பிடிக்காது?

இப்பொழுதும் கூட இந்த மாதிரி "Damsel in distress" ஐ காப்பாத்தும் "Knight in the shining armor" கதைகள் எல்லாம் சட்டென்று பிடித்து விடுகிறது. நம்மை இளவரசர் ரோலில் பொருத்திக் கொண்டு நாமே இளவரசியை காப்பாத்துவது போன்ற கற்பனைக் குதிரைகள் நாலு கால் பாய்ச்சலில் ஓடுவதால் தானோ என்னமோ! பின்னாளில் நண்பன் ஒருவன் "tales of the amber sea" என்று எஸ்டோனியா, லிதுவேனியா, மற்றும் லேட்வியா நாடுகளில் புழங்கிய fairy tales தொகுப்பிலிருந்து ஒரு கதை சொன்னான். மூன்று மந்திரவாதிகள் கதை வாண்டு மாமா இங்கிருந்து சுட்டு கொஞ்சம் மசாலா சேர்த்திருப்பாரோ என்று ஒரு சின்ன சந்தேகம்.

ஆரணி பொது நூலகத்தில் காசி என்ற ஒரு தாத்தா தான் நூலகர். அவருக்கு அடிக்கடி பீடி பிடித்தாக வேண்டும். அப்போதெல்லாம் "தம்பி, கொஞ்சம் பாத்துக்க" என்று என்னிடம் சொல்லி விட்டு லுங்கியை மடித்துக் கொண்டு டீக்கடை போய் விடுவார். அப்போது கிடைக்கும் தற்காலிக நூலகர் பதவியை துஷ்பிரயோகம் செய்து, வரும் புத்தகங்களில் வாண்டு மாமா புத்தகங்களை எல்லாம் ஆங்கில புத்தகங்களுக்கு நடுவே ஒளித்து வைத்து விடுவேன். (அந்த ஊரில் ஆங்கில புத்தகப் பக்கம் ஓரிருவர் தான் போவார்கள்). அப்படி எல்லாம் செய்து படித்த புத்தகங்கள் தான் புலி வளர்த்த பிள்ளையும், கண்ணாடி மனிதனும் , பலே பாலுவும் பறக்கும் டிராயரும், பலே பாலுவும் பாட்டில் பூதமும் போன்றவை.

பூந்தளிர்,ரத்னபாலா போன்ற புத்தகங்களில் வரும் அவர் தொடர் கதைகளும், படக்கதைகளும் அத்தனை தரம் வாய்ந்தவை. விண்ணுலகத்திலிருந்து மண்ணுலகம் வந்து உருமாறும் விதியண்ணல் இன்றும் வியக்க வைப்பார் (இன்னும் நினைவு இருக்கிறது - அமைதியாய் ஒருவனை கொன்று விட்டு ஒரு பஞ்ச் டயலாக் பேசுவார் - "இதுக்கு தான் நோக்காடு இல்லாத சாக்காடுனு பேர்).

இப்பொழுது வரும் சிறுவர் இலக்கியம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் வாண்டு மாமா போல் இன்னொருவர் வருவது கடினமே. எத்தனை எனிட் ப்ளைடன்களும், ஹார்டி பாய்சும்,நான்சி கிரேசும் , ஹாரி பாட்டர்களும் வந்தாலும் வாண்டு மாமா காட்டிய விந்தை உலகங்களுக்கு ஈடாகுமா?